Published:Updated:

ககபோ

ரேஞ்சர் மாமா

ககபோ

ரேஞ்சர் மாமா

Published:Updated:
##~##

ககபோ என்ற பறவை உலகிலேயே பலம் பொருந்திய கிளி வகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் நியூசிலாந்து. ககபோ என்ற வார்த்தைக்கு நியூஸிலாந்தின் மௌரி மொழியில் இரவுக் கிளி என்று அர்த்தம். இது இரவில் மட்டுமே நடமாடும். ஒருபோதும் பறக்காது. மலைக் காடுகளில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே கடக்கும்.

விலங்கியல் பெயர் ஸ்ட்ரைகோப்ஸ் ஹேப்ரோப்டிலா (Strigops habroptila) ஸ்ட்ரைகோஸ் என்றால் ஆந்தை என்றும், ஓப்ஸ் என்றால் முகம் என்றும் கிரேக்க மொழியில் பொருள். ஆந்தை முகம் போல இருந்ததால், இந்தப் பெயர் ஏற்பட்டது.

ககபோ 60 செ.மீ நீளமும் 2 முதல் 4 கிலோ எடையும்கொண்டவை. பச்சையும் மஞ்சளும் கலந்த இறகுகள், சாம்பல் வண்ண அலகு, குட்டையான கால்கள், பெரிய பாதம், சிறிய வால் இருக்கும். கால்களில் இரண்டு விரல்கள் முன்னோக்கியும் இரண்டு விரல்கள் பின்னோக்கியும் இருக்கும். விரலில் உள்ள நகங்கள் மூலம் மரங்களின் உச்சிக்கு சர்வசாதாரணமாக ஏறிவிடும்.

தங்களை பேலன்ஸ் செய்துகொள்ளவும், மரங்களில் இருந்து விழுவதைத் தவிர்க்கவும் இதன் இறகுகள் பயன்படுகின்றன. கண்கள் அழுத்தமான பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.

ககபோ

செடிகள், பழங்கள், விதைகள், மகரந்தம், சில சமயம் மரங்களின் தண்டுப் பகுதியையும் உண்ணும்.

அலகைச் சுற்றிலும் மீசை போன்ற ரோமங்களின் நீட்சி இருக்கும். இவற்றின் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய பாதையைக் கண்டுகொள்ளும்.

ககபோ பறவையின் முக்கியமான சிறப்புத் தன்மை, இவற்றிடம் இருந்து வீசும் பிரத்யேகமான ஒரு வாசனை. இதற்குக் கூரிய மோப்ப சக்தி உண்டு என்பதால் தங்களது இணைகளின் இருப்பிடத்தை இந்த வாசனை மூலம் கண்டுகொள்ளும். அதேசமயம், இந்த வாசனையே இவற்றை எதிரியிடம் காட்டிக் கொடுத்துவிடும். நாய், பூனை போன்றவை இவற்றின் முக்கியமான எதிரிகள்.

இதற்கு இன்னொரு சிறப்பு இயல்பும் இருக்கிறது. இணை சேரும் காலத்தில் ஆண் பறவைகள் திறந்தவெளி ஒன்றில் கூடும். தங்கள் சிறகுகளின் வண்ணம், ஒலி எழுப்புதல் போன்றவற்றால் பெண் பறவைகளை ஈர்ப்பதற்காகப் பல செயல்களிலும் ஈடுபடும். அவற்றைக் கூர்ந்து கவனித்துப் பெண் பறவைகள் தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கும்.

இறைச்சிக்காகவும் இறகுக்காகவும் வேட்டையாடப்பட்டு ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில் இந்த இனம் இருக்கிறது.