Published:Updated:

என் பணம்...என் உதவி !

வாங்க... நாமும் சேமிக்கலாம்! எம்.புண்ணியமூர்த்தி ரா.நரேந்திரன்

##~##

''பள்ளி செல்லும் எங்களுக்கு 'பாக்கெட் மணி’யும் பிறப்புரிமை!'' - இப்படி முழங்கும் சுட்டிகளா நீங்கள்?

நல்லது! அதே நேரம் ''பாக்கெட் மணியில் பாதிக்கும் மேல் சேமிப்பதும் எங்கள் கடமை!''  என்றும் சொன்னால், உங்களுக்கு டபுள் சபாஷ். சிக்கனத்தின் மகத்துவத்தை உணர்ந்து, சேமிப்புப் பழக்கம் உள்ள நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

நீங்களும் துவங்கலாம் வங்கிக் கணக்கு.

ஒரு வயது முதல் 18 வயது வரை யார் வேண்டுமானாலும் வங்கியில் சேமிப்புக் கணக்குத் துவங்கலாம். ஆனால், இந்த வயது வரம்பு, வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். ஒரு வங்கியில் கணக்கைத் துவங்கும்போது, சிறுவர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறந்த தேதிக்கான ஆதாரம் முதலியவற்றை விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும்.

என் பணம்...என் உதவி !

இந்த வங்கிக் கணக்கு மூலம் நீங்கள் மாதம்தோறும் 50 ரூபாயில் தொடங்கி 1,000 ரூபாய் வரை சேமிக்கலாம். கணக்குப் பரிமாற்ற விவரம், பெற்றோருக்குத் தபால் அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். வங்கிகளில் நீங்கள் சேமிக்கும் பணத்துக்கு 4 சதவீத வட்டியும் கிடைக்கும்.

பெற்றோர் கணக்கு வைத்து இருக்கும் வங்கியிலேயே சுட்டிகளுக்கும் கணக்கு ஆரம்பிப்பது எளிது. உண்டியல் கொஞ்சம் நிரம்பியவுடன் சில்லறைகளை நோட்டுகளாக மாற்றி, அந்தத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

சுட்டிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வசதியும் உண்டு. தனியார் துறை வங்கிகளில் ஏழு வயதுக்கு மேலாகவும், பொதுத் துறை வங்கிகளில் 12 வயதுக்கு மேலாகவும் உள்ளவர்களுக்கு ஏ.டி.எம். கார்டுகள் சிறுவர்களின் பெயரிலேயே வழங்கப்படுகின்றன.

எஸ்.பி.ஐ., பி.என்.பி., ஐ.ஓ.பி, ஹெச்.டி.எஃப்.சி., இந்தியன் வங்கி, விஜயா வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் சுட்டிகளுக்கான சேமிப்புக் கணக்கு வசதி உள்ளது.

   அஞ்சலகத்திலும் சேமிக்கலாம்!

கிராமப்புற மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகங்கள் மூலமும் சேமிக்கலாம். ரெக்கரிங் டெபாசிட்    (ஸிமீநீuக்ஷீவீஸீரீ ஞிமீஜீஷீsவீt) எனப்படும் அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டத்தில் பள்ளிகளின் மூலமாகவோ, தாங்களே நேரடியாகவோ அஞ்சலகத்தில் பணத்தைச் செலுத்தலாம். இது ஒரு தொடர் சேமிப்புத் திட்டம் என்பதால், ஐந்து ஆண்டுகள் வரை சேமிக்க வேண்டும். இதில் மாணவர்கள் 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஐந்தின் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். இந்தச் சேமிப்புக்கு 8% வரை கூட்டு வட்டி கிடைக்கும்.

      பள்ளியில் 'சஞ்சாயிகா’

சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட திட்டம்  'சஞ்சாயிகா.’ மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இது, மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படுகிறது. முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரைத் தலைவராகக்கொண்ட அறங்காவல் குழுவினரால் நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டத்தில், மாணவர்களுக்கு பாஸ்புக் மற்றும் காசோலைப் புத்தக வசதியும் உண்டு.

என் பணம்...என் உதவி !

மாணவர்கள் தினமுமோ, காசு கையில் கிடைக்கும் போதோ தன் பள்ளியில் 'சஞ்சாயிகா’ பொறுப்பில் உள்ள ஆசிரியரிடம் கொடுத்துச் சேமிக்கலாம். அந்தச் சேமிப்புப் பணத்தை ஆண்டு இறுதியிலோ அல்லது தேவைப்படும்போதோ எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை பணம் செலுத்தும்போதும், பெறும்போதும் அதைத் தனக்குக் கொடுக்கப்பட புத்தகத்தில் ஆசிரியரிடம் பதிவுசெய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் செலுத்தும் பணத்தை ஆசிரியர் தினமும் தனது பேரேட்டிலும், மாணவர்களின் பாஸ் புத்தகத்திலும் பதிவுசெய்வார். பின்னர் மாணவர்கள் செலுத்திய பணத்தை அவர் தினமும் அஞ்சலகங்களில் செலுத்துவார்.

அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு பள்ளியில் 'சஞ்சாயிகா’ திட்டத்தைத் தொடங்குவதற்கு தேசிய சேமிப்பு நிறுவனத்தின் மண்டல இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியரையோ, மாவட்ட சிறுசேமிப்பு ஆணையரையோ அணுகலாம்.

என் பணம்...என் உதவி !

பாதுகாப்பாக சேமிக்கவும், உங்கள் சேமிப்புக்கு வட்டி மூலமாக வருவாய் பெறவும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

இன்று நீங்கள் சேமிக்கும் சின்னச் சின்ன தொகை, பிற்காலத்தில் உங்கள் குடும்பத்துக்கே உதவியாக இருக்கும் என்பது உண்மை.

''ஹைய்யோ... இவ்ளோ நாளா சேமிக்காமல் வேஸ்ட் பண்ணிட்டோமே'' எனச் சிலருக்குத் தோன்றலாம்.

கவலையே வேண்டாம். இன்றே தொடங்குங்கள்.

நந்தினியும் சுதர்சனும் !

''சின்ன வயசுல இருந்தே தினமும் ஒரு ரூபா, ரெண்டு ரூபானு அப்பா கொடுப்பார். அதைச் செலவு செய்யாம உண்டியல்ல போட்டுருவேன். வருஷத்துக்கு ஒரு முறை மொத்தக் காசையும் எடுப்பேன். அது, என் ஸ்கூல் செலவுக்குப் பயன்படும். போன வருஷம் அப்பாவுக்கு திடீர்னு உடம்பு முடியாமப்போயிருச்சு. ரெண்டு மாசமா வேலைக்குப் போகலை. வீட்டுல பணப் பிரச்னை. வீட்டு வாடகைகூடக் கொடுக்க முடியலை. அப்போ நான் சேர்த்துவெச்சு இருந்த பணத்தைக் கொடுத்து எங்க அப்பாவோட மரியாதையைக் காப்பாத்தினேன்'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி நந்தினி.

என் பணம்...என் உதவி !

அதே ஊரைச் சேர்ந்த சுதர்சன் ''என் அப்பா தினமும் அஞ்சு ரூபாய் கொடுத்துச் சேர்த்துவைக்கச் சொல்வார். எனக்கு என்ன தேவைப்பட்டாலும் சேர்த்துவெச்சு இருக்கும் காசைத் தொடவே மாட்டேன். நாலு மாசத்துக்கு முன்னாடி எங்க பாட்டிக்கு ஷ§கர் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அவங்களை உடனடியா ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். அப்பாகிட்ட பணம் இல்லை. அப்போ என் பாட்டியைக் காப்பாத்தினது என் சேமிப்புதான்'' என்று தன் உண்டியலைப் பெருமையுடன் காட்டுகிறார்.