##~##

ரோஹிணி... வேலூர், ஈ.வெ.ரா நாகம்மையார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் செல்லம். எட்டாம் வகுப்புப் படிக்கும் இவர் தன் ஆசிரியர்களைக் கவர்ந்தது எப்படி?

கி.சுதாமதி (தமிழ் ஆசிரியை): ''இந்தச் சின்ன வயசுலயே ரொம்பப் பொறுப்பா நடந்துக்கிறாள். நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் ரோஹிணியின் பங்கு அதிகம். சின்ன ரோல் என்றாலும் சிறப்பாகச் செய்வாள். ஒரு முறைதான் டயலாக்கைப் படிப்பாள். அது எத்தனை பக்க வசனமாக இருந்தாலும், கேரக்டருக்குத் தகுந்த மாதிரி பேசி அசத்திவிடுவாள்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கா.சாந்தி (அறிவியல் ஆசிரியை): ''பாடம் நடத்தும்போது 'ஏன்? எதற்கு? எப்படி?’னு நிறையக் கேள்வி கேட்பாள். அந்த விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிஞ்சுக்கிற வரைக்கும் கேள்விக் கணைகள் வந்துட்டே இருக்கும். ஒரு நாள் நைட்டு 11 மணிக்கு எனக்கு போன் பண்ணி ''டீச்சர் இந்த பாடத்தில் எனக்கு சின்ன டவுட்டு''னு கேட்டு க்ளியர் செய்துகொண்டாள்.''

த.எலிசபெத் (சமூக அறிவியல் ஆசிரியை): ''ரோஹிணி படிப்பில் கெட்டின்னு எல்லோருக்கும் தெரியும். அதைவிட முக்கியமான விஷயம் ஒழுக்கம். தன்னோட பழகுகிறவங்ககிட்ட எப்பவுமே கோபமாப் பேச மாட்டாள். வார்த்தையில் அவ்வளவு மரியாதை இருக்கும். யாராவது இவளைத் திட்டினால்கூட புன்னகையையைப் பதிலாகத் தந்துவிட்டு தன் வேலையைப் பார்ப்பாள். திட்டினவங்களே 'ஸாரி’ கேட்பாங்க. பண்பில் 100-க்கு 200 சதவீதம் கிரேட்!''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

க.கவிதா (ஆங்கில ஆசிரியை): ''ரோஹிணி ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு நாள் 'டீச்சர் ஸ்கூல் கிரவுண்டில் 100 ரூபாய் கிடந்தது, யாருதுனு தெரியல!’னு சொல்லிக் கொடுத்தாள். இப்படி ரோஹிணியின் பாராட்டத்தக்க அணுகுமுறையைப் பற்றி சொல்லிட்டே போகலாம். ஆங்கிலம் சம்பந்தப்பட்ட பாடங்களை சக மாணவிகளுக்குச் சொல்லித் தருவாள். ஸ்வீட் கேர்ள்.''

க.சங்கீதா (கணித ஆசிரியை): ''வீட்டில் இவளோடு சேர்த்து மூணு பொண்ணுங்க. கொஞ்சம் கஷ்டப்படுற ஃபேமிலி. ஆனா, அதை வெளிக்காட்டிக்காமல் எப்பவும் முகத்தில் புன்னகையோடு இருப்பதுதான் அவளோட பலம். பொது அறிவில் ஆர்வம் அதிகம். அவளோட லட்சியம் கலெக்டர் ஆவது. நிச்சயமா இதே வேலூர் மாவட்டத்துக்கு கலெக்டராக வருவாள். எனக்கு நம்பிக்கை இருக்கு''

நா.ஸ்ரீ காயத்ரி தேவி (தலைமை ஆசிரியை): ''ஒரே வாக்கியத்துல சொல்லணும்னா... ரோஹிணி எல்லாருக்குமே முன்மாதிரி மாணவி.''

 - கே.ஏ.சசிகுமார்
படங்கள்: கா.முரளி

மனம் விரும்பும் மணிமாலா டீச்சர் !

கும்பகோணம் அருகே இருக்கிறது தாராசுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. இதன் ஐந்தாம் வகுப்பு அறைக்குச் சென்று 'உங்களுக்குப் பிடிச்ச டீச்சர் யாரு?’ எனக் கேட்டதும் படபடவென ஒருமித்த குரலில் வந்த பதில்... மணிமாலா டீச்சர். இடைநிலை ஆசிரியரான இவரைப் பற்றி மாணவர்களின் முத்தான சொற்கள்...

பா.சந்தோஷ்: ''வீட்டில் நடக்கும் பிரச்னையால் எந்த மாணவனாவது சோகமாக இருந்தால், அவனைக் கூப்பிட்டு ஜோக் சொல்லி ஜாலியாக்கிடுவார். நாங்க சோகமா இருக்கிறது, மணிமாலா டீச்சருக்குப் பிடிக்காது. எங்களை எப்பவுமே சந்தோஷமா வெச்சுப்பார். அதுதான் அவங்ககிட்ட ரொம்பவும் பிடிச்ச விஷயம்.''

கி.ஹரிணி: ''மாணவர்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்குன்னு கண்டுபிடிச்சு, அதை மேம்படுத்தும் விதமா ஊக்கப்படுத்துவார். 'கண்டிப்பா உன்னால் சாதிக்க முடியும். இன்னும் ட்ரை பண்ணு’னு சொல்வார். அதுமட்டும் இல்லாமல், எங்க திறமையை வளர்க்கத் தேவையான உதவியைச் செய்வார். நாங்க ஒவ்வொருத்தரும் நல்லா வரணும்னும் அக்கறையா இருப்பார்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

சித்தலா தேவி: ''இது அரசாங்கப் பள்ளி. இங்கே ஏழை வீட்டுப் பிள்ளைங்கதான் நிறையப் படிக்கிறோம். ரொம்பக் கஷ்டப்படும் பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, அவங்களுக்குத் தேவையான நோட்டு, பேனா, பென்சில் வாங்கித் தருவார். 'நீங்கள் எல்லாம் நல்லா படிச்சு, உங்க அப்பா, அம்மாவை நல்லபடியா பாத்துக்கணும்’னு அடிக்கடி சொல்வார். அது எங்க மனசுல ஆழமாப் பதிஞ்சு இருக்கு.''

அ.ரஹ்மத் நாச்சியா: ''பொதுவா டீச்சர்னாலே பல பேருக்கு பயம் இருக்கும். ஆனா, எங்க டீச்சர் ஃப்ரெண்ட் மாதிரிதான் பேசுவார்.  போட்டிகளில் ஜெயிக்க நிறைய டிப்ஸ் தருவார். மாறுவேடப் போட்டிக்கு மெனக்கெட்டு மேக்கப் பண்ணிவிடுவார். இப்படி எங்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வாங்க மணிமாலா டீச்சர்.''

ப.மோகனப்ரியா: ''எங்க மணிமாலா டீச்சருக்கு யாராவது பொய் சொன்னாக் கொஞ்சமும் பிடிக்காது. நாங்க யாராவது சண்டை போட்டுகிட்டா, என்ன தண்டனை தெரியுமா? ஒரு வாரம் டீச்சர்கூட பேசக் கூடாது. அதனாலயே நாங்க ஒற்றுமையா இருப்போம். சுருக்கமா சொல்லணும்னா எங்களுக்குக் கிடைச்ச இன்னொரு அம்மா!''

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: ஜெ.ராம்குமார்