Published:Updated:

என்றேனும் விதை முளைக்கும் !

தி.முத்துராஜ்

என்றேனும் விதை முளைக்கும் !

தி.முத்துராஜ்

Published:Updated:
என்றேனும் விதை முளைக்கும் !
##~##

சிறுவர் கதைகளை விரும்பிப் படிக்கும் யாரிடம் கேட்டாலும் 'கொ.மா.கோதண்டம்’ என்பவரை நன்றாகத் தெரியும். 50 ஆண்டுகளாக சிறுவர்களுக்காகக் கதை மற்றும் அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவருக்கு இந்த ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலக்கியத் துறையில் பெரியவர்களுக்கு சாகித்ய அகாடமி இருப்பதைப்போல், சிறுவர் படைப்புகளுக்கு வழங்கப்படும் 'பால சாகித்ய புரஸ்கார்’ விருதை, தனது 'காட்டுக்குள்ளே இசைவிழா’ என்ற நூலுக்காகப் பெற்று இருக்கிறார் கோதண்டம். விருதுகள் இவருக்குப் புதியது அல்ல. இவரது முதல் புத்தகமே குடியரசுத் தலைவர் விருதைப் பெற்று இருக்கிறது.

'' 'ஆரண்ய காண்டம்.’ என்ற அந்தப் புத்தகம் மலைவாழ் மக்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் பற்றிய சிறுவர் படைப்பு. 1966-ம் ஆண்டு எனது 28-ஆவது வயதில் வெளியானது. இந்த நூலுக்குக் குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது என்னை மேலும் சிறுவர்களுக்கான நூல்கள் எழுதத் தூண்டியது.'' என்கிறார்.

மந்திர தந்திரங்களுக்கு 'ஹாரி பாட்டர்’ போல இவரது பல கதைகளில் வரும் புகழ்பெற்ற சிறுவன் கதாபாத்திரத்தின் பெயர், 'நீலன்.’

என்றேனும் விதை முளைக்கும் !

''மலைவாழ் சிறுவனான நீலன் பெரும்பாலும் காடுகளிலேயே சுற்றித் திரிவான். அவனுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துபடி. விலங்குகள், பறவைகள், தாவரங்கள்... என அத்தனையும் நன்றாகத் தெரியும். நகரத்தில் இருந்து கானகப் பகுதிக்கு சுற்றுலா வரும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுடன் நீலன் துணைக்குச் செல்வான். அப்போது கானகத்தில் சந்திக்கும் சவால்கள், ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தப்பிப்பது ஆகியவற்றைக் கதைகளாக எழுதி இருக்கிறேன். அவை 'நீலன் கதைகள்’ என்கிற பெயரில் தொகுப்புகளாக வெளியாகி இருக்கின்றன'' என்கிறார்.

அவை வெறும் கதைகள் மட்டும் அல்ல. ஒவ்வொரு கதையிலும் ஒரு விலங்கு, பறவை அல்லது தாவரம் பற்றிய அறிவியல் விஷயம் இருக்கும். பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு தவறான மூடநம்பிக்கையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கும்.

அந்தக் கதைகள் எல்லாம் ஏதோ அறிவியல் புத்தகங்களைப் படித்து எழுதியது அல்ல. இவரே கானகத்தில் பல நாட்கள் தங்கிப் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு அவை.

''எனக்குக் காடுகள் என்றாலே தீம் பார்க் மாதிரி. அடிக்கடி கிளம்பிவிடுவேன். காட்டை ஒட்டி இருக்கும் மலைவாழ் மக்களில் யாரையாவது பிடித்துகொண்டு காட்டுக்குள் சென்றுவிடுவேன். அங்கே இருக்கும் ஒவ்வொரு நாளுமே ஓர் அனுபவம்தான். ஒரு முறை ஒரு புதைசேற்றிலே விழுந்து, உடன் வந்த மலைவாழ் வாலிபரால் காப்பாற்றப்பட்டேன். இன்னொரு முறை ஒற்றை யானையிடம் இருந்து தப்பித்தேன். காட்டுத் தீயிடம் இருந்தும் தப்பித்து இருக்கிறேன். பெரிய புராணத்திலே குறிப்பிடப்படும் 'ஜோதி மரம்’ என்ற மரத்தைப் பார்த்தேன்.'' என்று விவரித்துச் சொல்லும்போதே நாமும் காட்டுக்குள் இருக்கும் பிரமை.

இவர் முறையாகப் பள்ளிக்குச் சென்று படித்தது ஐந்தாம் வகுப்பு வரையே என்றால், நம்புவது கடினம்தான்.

''ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனபோது, ஆரம்பத்தில் மனத் துயரம் இருந்தது. பிறகு எனது அறிவைப் பெருக்குவது எப்படி என யோசித்தேன். நூலகம் சென்று தொடர்ந்து புத்தகங்களை வாசித்தேன். அன்றைய சிறுவர் இதழ்களான கண்ணன், முயல், டமாரம், கோகுலம், அணில் போன்றவை எனக்குப் படிக்கட்டுகளாக அமைந்தன.'' என்கிறார்.

பஞ்சாலைத் தொழிலாளியாக 31 ஆண்டுகள் பணியாற்றிய இவர், தனது முயற்சியால் நூலகப் பொறுப்பாளராகவும் 20 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இவரை நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார்.

சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாகக் கதை, கவிதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறார். இது தவிர, மணிமேகலை மன்றம் என்ற அமைப்பின் மூலம் பன்மொழிக் கருத்தரங்கங்கள், பன்மொழிக் கவியரங்கங்கள், ஆந்திர குச்சிபுடி நடனம், கேரள கதகளி நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள், ஆய்வு அரங்கங்கள் ஆகியவற்றையும் நடத்துகிறார்.

''சிறுவர் பத்திரிகைகள் இப்போது குறைந்துவிட்டன. முன்பு வெளிவந்த சிறுவர்களுக்கான  பல இதழ்கள் இப்போது இல்லை. கல்விச் சுமை குறைந்து எதிர் காலத்தில் சிறுவர் இலக்கிய நூல்கள் அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.'' என்கிற கோதண்டம் கடைசியாகச் சொன்னது...

''நீங்கள் பள்ளிப் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதேநேரம், நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களையும் படியுங்கள். இந்த வார்த்தைகளைத் தினமும் சொல்லுங்கள்...

''உழுது விதைத்துவிடு...
என்றேனும் விதை முளைக்கும்!
எழுதத் தொடங்கிவிடு...
என்றேனும் கவிதை பிறக்கும்!''