Published:Updated:

நெட்டிஸம்

சைபர்சிம்மன்

நெட்டிஸம்

சைபர்சிம்மன்

Published:Updated:
##~##

பிக்காஸோவை உங்களுக்குத் தெரியும்தானே? உலகப் புகழ்பெற்ற ஓவிய மேதை. மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன பாணி ஓவியத்தின் தந்தையாகவே அவர் கருதப்படுகிறார்.

ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிக்காஸோ மாதிரி புகழ்பெற வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். பிக்காஸோ பாணியில் வரைய வேண்டும் என்பதும் இளம் ஓவியர்களின் விருப்பம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களும்கூட பிக்காஸோ மாதிரி வரையலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? 'பிக்காஸோஹெட்’ என்னும் வலைத்தளம், பிக்காஸோ மாதிரியே வரைய வழிவகுக்கிறது.

இந்த வலைத்தளத்தில் நுழைந்ததுமே அழகான ஓவியங்களைப் பார்க்கலாம். எல்லாமே உங்களைப் போன்ற சுட்டிகள் இந்தத் தளத்தில் வரைந்த ஓவியங்கள்தான். அதைப்போலவே நீங்களும் வரைய முடியும். ஓவியம் வரைவதற்கான மற்ற வலைத்தளங்கள்போல இதில் தூரிகை பயன்படுத்துவது இல்லை. அதைவிடச் சுலபமாக விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

நெட்டிஸம்

முதலில், 'உருவாக்குங்கள்’ (CREATE) என்னும் பட்டனை க்ளிக் செய்ததுமே, வெள்ளைப் பலகை ஒன்று வந்துநிற்கும். அதில்தான் நீங்கள் வரைய வேண்டும். அதன் இடது பக்கத்தில் சின்னச் சின்ன முகங்களாகக் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த முகங்களில் ஒன்றை அப்படியே இழுத்துச்சென்று பலகையில் வைத்துவிடலாம். பிறகு பார்த்தால், முகங்களுக்கு அருகே வரிசையாக கண், காது, மூக்கு, உதடுகள், புருவம் போன்றவை இருக்கும். அவற்றில் பிடித்தமானதை இழுத்துச்சென்று ஏற்கெனவே உள்ள முகத்தில் பொருத்த வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம், அழகான மனித முகத்தை உருவாக்கிவிடலாம். இந்தக் கண், காது, மூக்கு எல்லாமே பிக்காஸோ பாணியைச் சேர்ந்தவை என்பதால், ஓவியமும் பிக்காஸோ வரைந்ததுபோலவே இருக்கும்.

நீங்கள் உருவாக்கிய ஓவியத்தை இன்னும் மெருகேற்ற வேண்டுமா? அப்படியே கீழே பார்த்தீர்கள் என்றால், ஓவியத்தில் திருத்தம் செய்வதற்குத் தேவையான வசதிகள் இருக்கும். கண், காது, மூக்கு போன்றவற்றைத் திருப்பலாம், பெரிதாக்கலாம், மேலே கீழே மாற்றலாம். அவற்றில் வண்ணங்களையும் சேர்க்கலாம்.

நெட்டிஸம்

நீங்கள் வரைந்தது உங்களுக்கே பிடிக்கவில்லை என்றாலும் கவலையே வேண்டாம். எல்லாவற்றையும் ஒரே க்ளிக்கில் அழித்துவிட்டு, மீண்டும் புதிதாக வரையலாம். அப்படிப் புதிதாக வரைந்து முடித்த பின், ஓவியத்தின் கீழ் உங்கள் பெயரையும் கையெழுத்தாகப் போட்டுக்கொள்ளலாம்.

நீங்கள் வரைந்த ஓவியம், இந்தத் தளத்தில் உள்ள ஓவிய கேலரியில் இடம்பெற்றுவிடும். ஆக, தளத்துக்கு வரும் மற்றவர்கள், உங்கள் ஓவியத்தையும் பார்த்து ரசிப்பார்கள். அது மட்டும் அல்ல. நீங்கள் வரைந்த ஓவியத்தை இ-மெயில் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம். ஃபேஸ்புக் பக்கம் இருந்தால், அதிலும் பகிர்ந்துகொள்ளலாம்.

பிக்காஸோபோல வரைவதற்கான வலைத்தள முகவரி: http://www.picassohead.com.

எல்லாம் சரி... பிக்காஸோ பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? அவரைப்பற்றியும் அவர் வரைந்த அற்புத ஓவியங்களையும் பார்க்க நினைத்தால், நீங்கள் வலம் வர வேண்டிய வலைத்தளம் http://www.pablopicasso.org.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism