Published:Updated:

ஒரு கதையின் நாயகன் !

ஒரு கதையின் நாயகன் !

ஒரு கதையின் நாயகன் !

ஒரு கதையின் நாயகன் !

Published:Updated:
##~##

'ராஜாவும் நானே மந்திரியும் நானே’ என்பதைப்போல் அழகாக கதைகள் எழுதி, அதற்கு அட்டகாசமாக ஓவியமும் வரைகிறார் சித்தார்த்தன். கோவை, எஸ்.பி.ஒ.ஏ. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சித்தார்த்தன் வீடு ஓவியங்களாலும், பரிசுகளாலும் நிரம்பி இருக்கிறது.

''நான் எல்.கேஜி. படிக்கும்போது ஒரு ஓவியப் போட்டியில் வாங்கினதுதான் என்னோட முதல் பரிசு. அதுக்கு அப்புறம் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல ஓவியப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கினேன். கதைப் புத்தகங்களில் வர்ற ஓவியங்களை  ஆர்வமாப் பார்ப்பேன். அந்தக் கதைகளையும் படிச்சுட்டு, இதுக்கு நாம வரைஞ்சா எப்படி இருக்கும்னு யோசிச்சு வரைவேன். அதை என்னோட ஓவிய ஆசிரியர் பாரூக் சார்கிட்டே காண்பிப்பேன். அவர் ரொம்ப பாராட்டுவார். பள்ளி ஆண்டு மலரிலும் கதைகளுக்கு ஓவியங்களை வரைவேன்'' என்கிறார் சித்தார்த்தன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைப் பார்த்த தமிழ் ஆசிரியை சிவகாமி, ''ஏன் சித்து, நீயே கதையும் எழுதேன்'' என்று சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான்... கதை ஆர்வமும் தொற்றிக்கொண்டது. பள்ளி ஆண்டு மலரில் தொடங்கிய இவரது சிறுகதைப் பயணம், பல சிறுவர் பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது.  

''எனக்கு திருக்குறள் மீது அவ்வளவு ஆசை. காரணம், ஒவ்வொரு குறளிலும் ஓவியம் வரைவதற்கான விஷயங்கள் நிறைய இருக்கும். கதைச் சொல்லவும் முடியும். இப்போ நான் இந்த இரண்டையும் செய்துட்டு இருக்கேன். ஒரு குறள்... அதற்கு ஏற்ற ஒரு கதை... அந்தக் கதைக்கு ஏற்ப ஓர் ஓவியம்... இப்படித் தொடர்ந்து செய்துட்டு இருக்கேன். வருங்காலத்தில் திருக்குறள் மாதிரி பல நீதி நூல்களை மையமாவெச்சு கதைகள், ஓவியங்கள் வரைஞ்சு சாதனை படைப்பேன்'' என்கிறார்.

ஒரு கதையின் நாயகன் !

(சித்தார்த்தன் எழுதி, ஓவியம் வரைந்த ஒரு திருக்குறள் கதை இதோ...)    

 என்றும் வளமையான பாண்டிய நாட்டின் குலசேகர மன்னனுக்கு ஒரு மகன். அவன் பெயர் மகேந்திரன். தினமும் தன் வில், அம்புகளுடன் காட்டில் சென்று வேட்டையாடுவது அவனுடைய வழக்கம். ஒரு நாளும் வெறும் கையோடு திரும்பியது இல்லை. அவனுக்கு நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அக்கறை கிடையாது. இளவரசனின் நண்பன் விதுரன். அவன்தான் நாட்டின் படைத் தலைவன்.  

ஒரு முறை அடுத்த நாட்டு மன்னன் வீரராகவன், குலசேகர நாட்டின் மீது படையெடுத்தான். அப்போதுகூட மகேந்திரன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றுவிட்டான். போர்க்களத்தில் படைகள் மோதின. சுலபமாக வெற்றி பெறும் நிலையில் குலசேகரனின் படை இருந்தது. அப்போது படைத் தலைவனான விதுரன், எதிரி நாட்டு மன்னன் வீரராகவன் இருந்த யானை மீது கூர்மையான ஈட்டியைக் குறிபார்த்து எறிந்தான். ஆனால், மயிரிழையில் யானை தப்பிவிட்டது. ஆனாலும் அந்தப் போரில் குலசேகர மன்னனின் படையே வென்றது. எதிரிகள் ஓடி ஒளிந்தார்கள்.

அன்று மாலை... வள்ளுவரின் வீட்டுக்கு இளவரசன் மகேந்திரனும், அவனது நண்பனான படைத் தலைவன் விதுரனும் வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் வள்ளுவர்தான் குரு.

வள்ளுவரிடம் இளவரசன், தான் வேட்டையாடிச் வென்ற காட்டு முயல் ஒன்றை நெஞ்சில் அடங்காத பெருமையுடன் காட்டினான். விதுரனோ தான் யானை ஒன்றை போரில் வீழ்த்தத் தவறியதை வருத்தத்துடன் கூறினான். ''விதுரா வருத்தம் எதற்கு? விட்டுத்தள்ளு. என்னைப்போல் கூர்மையாக வேட்டையாட சிறிது முயற்சியும் கவனமும் வேண்டும்'' என செருக்குடன் கூறினான் மகேந்திரன்.

வள்ளுவர் சிரித்தவாறே ''மாணவர்களே... ஒன்றைப் புரிந்துக்கொள்ளுங்கள்'' என்று தொடர்ந்து சொன்னார்.

'' 'கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’

காட்டில் ஓடும் முயலைக் குறி தவறாமல் எய்த அம்பு சிறந்ததுதான். ஆனாலும், ஒரு போர்க் களத்தில் யானை மேல் எறிந்து தவறிய வேல் அதைவிடச் சிறந்தது. நம்முடைய இலக்கு பெரியதாக இருக்க வேண்டும். மகேந்திரா, உனது தந்தையின் நாட்டில் ஒரு போர் நடந்தபோதும் அதில் உன் பங்கு எதுவும் இல்லை என்பதை உணர். இனி நீ சிறந்த வேட்டைக்காரன் என்பதைவிட சிறந்த போர்வீரன் என்பதை நிரூபி'' என்றார் வள்ளுவர்.

இதைக்கேட்டு இளவரசன் தலைகுனிந்தான்.

   -பா.தெ.சித்தார்த்தன், கோவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism