Published:Updated:

சுட்டி நாயகன்

ஆயிஜா இரா.நடராசன்

சுட்டி நாயகன்

ஆயிஜா இரா.நடராசன்

Published:Updated:
 ##~##

அவன் பெயர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அப்பா, ஹெர்மன். அம்மா, பவுலின். தங்கையின் பெயர் மாஜா.

ஆல்பர்ட்டின் அப்பா ஓர் இன்ஜினியர். சொந்தமாக ஒரு மின் பட்டறைவைத்து இருந்தார். அம்மா பியானோ இசைக் கருவியை அருமையாக வாசிப்பவர். நம் சுட்டி நாயகனுக்கு, அவன் அப்பா நிறைய எந்திர பொம்மைகள் வாங்கிக் கொடுப்பார். அவன் எல்லாவற்றையும் உடைத்துப் பிரித்துப் போட்டுவிடுவான்.  திட்டு வாங்குவான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆல்பர்ட் ஐந்து வயது ஆகியும் பேசவே இல்லை. அது அப்பா, அம்மாவுக்குப் பயத்தை அளித்தது. அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க வீட்டுக்கே ஆசிரியரை வரவழைத்தனர். ''எங்கே சொல்லு... மம்மி... டாடி'' என ஆசிரியர் எவ்வளவோ பொறுமையுடன் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தார். ஊஹும்... ஆல்பர்ட் வாயைத் திறந்து பேசவே இல்லை.

ஒரு நாள் ஆல்பர்ட்டின் தந்தை அவனுக்கு ஒரு சிறிய திசைகாட்டும் கருவியைப் பரிசாக அளித்தார். மற்ற பொம்மைகளைப் போல இதை ஆல்பர்ட்டால் உடைத்துப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. எப்படித் திருப்பினாலும் வடக்கு நோக்கியே காட்டிய முள்ளின் ரகசியத்தை அறியத் துடித்தான்.

சுட்டி நாயகன்

மாலையில் அவனது அப்பா பட்டறையில் இருந்து திரும்பியதும் அவரிடம் போனான். ''அப்பா இதை உடைக்கவே முடியவில்லை'' என உரத்துக் கூறினான். உள்ளே இருந்த அம்மா ஆச்சரியப்பட்டார். ''அடடே... ஆல்பர்ட் உனக்குப் பேச வருமா? ஏன் இவ்வளவு நாளாப் பேசவில்லை?'' எனக் கேட்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ மிக அமைதியாக, ''இவ்வளவு நாள் அதற்கு அவசியப்படவில்லை அம்மா'' என்றான். அறிவியல் விஷயங்களை அறியும் அபரிமித ஆவல் மட்டும்தான் அவனை இயல்பாகப் பேசவைத்தது.

ஆல்பர்ட்டின் மாமா ஜேக்கப், அவனிடம் மாட்டிக்கொண்டு பட்டபாடு... கணிதப் புதிர்கள் பற்றி இருவரும் பேசுவதைக் கேட்டு அம்மா 'போதும் ப்ளீஸ்’ என்று கெஞ்சுவார். பட்ஸ்னர் எழுதிய விசையும் நிறையும் (திஷீக்ஷீநீமீ ணீஸீபீ விணீss) என்ற புத்தகத்தை ஆல்பர்ட் படித்து முடித்து, மாமாவுடன் விவாதித்தபோது... அவனுக்கு வயது ஆறுதான்.

ஆல்பர்ட் வீட்டில் தங்கி, மருத்துவம் படித்த ஏழை மாணவர் மாக்ஸ் டாலமி, ஆல்பர்ட்டின் நெருங்கிய நண்பன் ஆனது அடுத்த திருப்பம். இயற்பியலையும், கணிதத்தையும் பற்றி ஆல்பர்ட் கேட்ட கேள்விகள் டாலமியை ரொம்பவே திக்குமுக்காடவைத்தன.

உங்களுக்குப் பள்ளிக்கூடம் என்றால் பிடிக்கும்தானே? நம் ஆல்பர்ட்டுக்கு பிடிக்கவே பிடிக்காது. மனப்பாடம் செய்யச் சொல்லும் ஆசிரியர்களை வெறுத்தான். ஆனால்  பள்ளிக்கூட ஆய்வகமும் நூலகமும் அவனது ஃபேவரைட். தினமும் வகுப்பில் இருந்து காணாமல்போகும் ஆல்பர்ட், நூலகத்திலும் ஆய்வகத்திலுமே இருப்பான்.

ஆல்பர்ட் தன் அப்பாவிடம் இருந்து பல்வேறு அறிவியல் அடிப்படைகளை அறிந்தான். தாயிடம் இருந்து இசை ரசனையைக் கற்றான். எந்த ஆசிரியரின் பயிற்சியும் இல்லாமல், வயலினை அவன் வாசித்தபோது... அம்மாவுக்கு மகிழ்ச்சி.

சுட்டி நாயகன்

இந்த நிலையில், ஐன்ஸ்டீன் குடும்பம் ஜெர்மனியின் உல்ம் நகரில் இருந்து இத்தாலியின் மிலானுக்குக் குடியேறியது. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஃபிட் (திவீt) எனும் கல்வியகத்தில் சேர்ந்து கற்க ஆல்பர்ட்டுக்கு ஆசை. ஏனென்றால், அங்கே மனப்பாடம் கிடையாது. செய்முறைக் கல்வியும் அதற்கு நுழைவுத் தேர்வும் உண்டு. அந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. கணிதத்திலும் இயற்பியலிலும் நிறைய மதிப்பெண்கள் பெற்றும் மொழிப்பாடம், உயிரியல் இவற்றில் தேறவில்லை.

அந்தத் தேர்வில் தனது எதிர்காலம் என்ற தலைப்பில்  எழுதிய கட்டுரையில், 'விஞ்ஞானி ஆகி, உலகில் யாராலும் விளக்க முடியாத அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடித்து வெளியிடுவேன்’ என எழுதி இருந்தான்.

நுழைவுத் தேர்வின் தோல்வி அவனைத் துடிக்கவைத்தது. எனினும் வைராக்கியத்தோடு உழைத்த ஆல்பர்ட்... ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக, சார்பு தத்துவத்தையும் சூரிய மின் அமைப்பையும் இன்னும் எவ்வளவோ கண்டுபிடிப்புகளையும் வழங்கி, உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார்.

ஆதாரம்: க்ளார்க் எழுதிய, 'ஐன்ஸ்டீன் லைஃப் அண்டு டைம்ஸ்’, ஸ்டீபன் லார்டு மற்றும் ஸ்டீபன் பெல் எழுதிய 'தி மேக்கிங் ஆஃப் ஐன்ஸ்டீன்.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism