பிரீமியம் ஸ்டோரி

'எக்'ஸ்லண்ட் சாதனை !

பிட்ஸ்
##~##

இவர் லாரி டிரைவர் என்பதால் அதிகமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டியிருக்கும். அப்படி செல்லும்போது அவ்வப்போது நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் காத்திருக்க வேண்டியது இருக்கும். சில சமயம் அங்கேயே தங்கி, சமைத்துச் சாப்பிடும் அளவுக்கு இருக்கும். அதனால், கூடவே உணவுப் பொருட்களும் எடுத்துச் செல்வார். டிராஃபிக் ஏற்படும் நேரங்களில் பென்சில் நுனியில் முட்டையை நிற்கவைக்க முயற்சி செய்வார். அது கீழே விழுந்துவிடும். மனிதர் விடமாட்டார்... திரும்பவும் புதிய முட்டையை எடுத்து, பென்சில் நுனியில் நிற்கவைக்க முயற்சி செய்வார். இப்படியே பலநாள் செய்து செய்து கடைசியில் பென்சில் நுனியில் முட்டையை நிற்கவைக்கும் வித்தையைப் பிடித்துவிட்டார். இப்போது, அனைவரின் முன்னால் இதைச் செய்துகாட்டி அசத்திவருகிறார்.

முயற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா சுட்டீஸ்!

 டூப்பு...ஆனா டாப்பு

சுட்டீஸ்! இங்கே இரண்டு பாண்டா கரடிகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால்... ஸாரி. ஒன்றுதான் இருக்கிறது!

பிட்ஸ்

சீனாவின் தேசிய விலங்கு பாண்டா கரடி. அதைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டிவருகிறது சீனா. உலக அளவில் இதன் எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்துவருவது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், பாண்டாக்களைப் பராமரிப்பதற்காகவே சீனாவில் 'ஒலாங் ஜியன்ட் பாண்டா ரிசர்வ் சென்டர்’ இருக்கிறது. இங்கு, பிறந்து நான்கு மாதங்களே ஆன பாண்டா குட்டியைப் பராமரிக்க பரிசோதகர்கள் புதிய உத்தியைக் கையாள்கிறார்கள். அதாவது, பாண்டா உருவ ஆடையைப் போட்டுக்கொண்டு குட்டியைப் பரிசோதிக்கிறார்கள். குட்டி என்பதால் மனிதர்கள் நெருங்கினால் பயப்படுகிறது. அதற்காக இந்த ஐடியாவாம்! 'பாண்டா’வாகப் போனால் சமத்தாக சொன்னபடி கேட்கிற தாம். இப்படியே சில நாள் பராமரித்து, பிறகு காட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறார்களாம்! டூப்பாகப் போனாலும் செய்யற விஷயம் டாப் இல்லையா சுட்டீஸ்?

ரோபோ டீச்சர் !

பிட்ஸ்

ஆங்கிலம் கற்கவேண்டும் என்றால் நம் நாட்டில் தனியார் பள்ளிகள் உண்டு. அதுவே கொரியாவில் நிலமை வேறு. மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வெளிநாடுகளில் இருந்துதான் ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும். இதனால் செலவும் அதிகம். அரசுக்கும் பெரிய தலைவலி. பார்த்தார்கள்... பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க ரோபோக்களைக் களம் இறக்கிவிட்டார்கள். முதல் கட்டமாக 21 பள்ளிகளில் 29 ரோபோக்களைக் களம் இறக்கினார்கள். 'Korean Institute of Technology' உருவாக்கிய இந்த ரோபோக்களின் தலை பகுதியில் டி.வி.ஸ்க்ரீன் இருக்கும். ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் இந்த ஸ்க்ரீனில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஆங்கில ஆசிரியர்கள், கொரியாவில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாகவே பேசியபடி பாடங்களைச் சொல்லித் தருகிறார்கள். ஆசிரியர்கள் பேச்சுக்கு ஏற்ப கைகளை அசைப்பது, ரைம்ஸ் பாடும்போது டான்ஸ் ஆடுவது ரோபோக் களின் வேலை. 'வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாவே சொல்லித்தரலாமே’ என்று எண்ணலாம். அந்த முறையில் சுட்டிகள் சரியாகக் கவனிக்க மாட்டார்கள் என்று இந்த ஐடியாவாம்.

இதனால், ஆசிரியர்கள் முன் பேசத் தயங்கும் சுட்டிகள், ரோபோக்களின் முன், பயம் இல்லாமல் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தி, சமத்தாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்கிறார்களாம்!

எலக்ட்ரிக் ஹூ !

சீனாவில் உள்ள ஒரு விவசாயி, ரோலர் ஸ்கேட்டிங் சக்கரங்கள் உள்ள 'எலக்ட்ரிக் ஷூ’வைத் தயாரித்திருக்கிறார். இது பேட்டரியால் இயங்கக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்த பேட்டரியால் மூன்று மணி நேரம் பயணிக்கலாம். இந்த ஷூக்களை மாட்டிக் கொண்டு, கைப்பிடி உள்ள ஒரு பட்டனை ஸ்டார்ட் செய்தால் போதும், ஒரு நாளைக்கு 100 மைல் வரை செல்லலாம். இதற்கு லைட், பிரேக் என்று எல்லா வசதிகளும் உண்டு. ஒரு சாதாரண விவசாயி எதற்காக இதைக் கண்டு பிடிக்கணும்? இவர் சொல்லும் காரணம் இதோ...

பிட்ஸ்

''என்னுடைய பெயர் ஜாவோ ஜிகின் (zhao Xueqin). சொந்த ஊரான உகாங், மலைப்பிரதேசங் களில் உள்ள ஒரு கிராமம். இங்குள்ள சுட்டிகள் பள்ளிக்குச் செல்ல 20 கிலோ மீட்டர் செல்லவேண்டும். இதனால், விடியற்காலை மூன்று மணிக்கே எழுந்து, நான்கு மணி நேரம் நடந்தால்தான் சரியான நேரத்தில் பள்ளியைச் சென்றடைய முடியும். இதன் காரண மாகவே பல சுட்டிகள் பள்ளிக்குப் போவதில்லை. இதை எல்லாம் பார்த்து இதற்குத் தீர்வு காணவேண்டும் என்று முடிவு செய்தேன். நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு, இந்த எலக்ட்ரானிக் ஷூவைக் கண்டுபிடித்தேன். இதைக் குழந்தைகள் சுலபமாகப் பயன்படுத்தும் விதமாகத்தான் தயாரித்துள்ளேன். இனிமேல், கிராமத்தில் உள்ள சுட்டிகள் பள்ளிக்கு சுலபமாகச் செல்லலாம். கூடிய சீக்கிரமே இதை உலகத்துக்கு அறிமுகப்படுத்த உள்ளேன்'' என்று கூறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு