Published:Updated:

மீன்

மா.நந்தினி ஷெ.ராம்குமார்

மீன்

மா.நந்தினி ஷெ.ராம்குமார்

Published:Updated:
##~##

''உங்களுக்கு ஒரு ஜாலியான அசைன்மென்ட். மீன் பிடிக்கப் போகலாம், வர்றீங்களா?''

சீர்காழி, எஸ்.எம்.ஹெச் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலரை அழைத்ததும் குஷியுடன் ஆளாளுக்குக் கையில் நோட்டுப் புத்தகத்தை எடுத்துகொண்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மீன் பிடிக்கத் தூண்டில்தான் வேணும். நோட் புக் எதுக்கு?'' என்று கேட்டதற்கு, ''தூண்டிலை மீன் பிடிக்கிறவங்ககிட்டே இரவல் வாங்கிக்கிறோம். ஏதாவது டவுட்ன்னா அதை நோட் பண்ணிக்கிறதுக்கு இந்த நோட் புக்'' என்றாள் துர்கவர்ஷினி.

  ''விஷயத்தை நோட் பண்றேன்னு தூண்டிலில் சிக்கற மீனைக் கோட்டை விட்றாத'' என்றான் நாகேந்திரன்.

சீர்காழி, உப்பனாற்றுக்குச் சென்றபோது ஒரு சிலர் மீன் பிடித்துகொண்டு இருந்தார்கள்.  

மீன்

'வாங்க பசங்களா... இதுக்கு முன்னாடி மீன் பிடிக்கிறதைப் பார்த்து இருக்கீங்களா?' என்று கேட்டார் அங்கே மீன் பிடிப்பதில் பிஸியாக இருந்த சங்கர்.

''பூம்புகார் கடற்கரையில நிறையப் பேர் மீன் பிடிச்சுட்டு வர்றதை நான் பார்த்து இருக்கேன்' என்றாள் துர்கவர்ஷினி.

'நீ அங்கே பார்த்தது வலை மூலம் மீன் பிடிக்கிறதை. குளம், ஏரி, ஆத்துல தூண்டில் போட்டுப் பிடிப்பாங்க. ஆற்றுப் பகுதியில் மீன் பிடிக்கிறது அவ்வளவு சுலபம் இல்லே. பொறுமையும் தனித் திறமையும் வேணும். கவனமா இல்லாட்டி புழுவைத் தின்னுட்டு மீன் டாட்டா காட்டிடும்'' என்றார் சங்கர்.

'அப்படின்னா இந்த ஆத்துத் தண்ணீர் கடலுக்குப் போறதுக்குள்ளே, நீங்க தூண்டில்போட்டு எல்லா மீனையும் பிடிச்சிருவீங்களா அங்கிள்?' என்று அப்பாவியாய்க் கேட்டாள் நந்தினி.

'எல்லா மீன்களையும் பிடிக்க முடியாது பாப்பா. அதேபோல், கடலில் இருக்கிற மீன்கள் வேற. அது அங்கேயே பிறந்து வளருதுங்க.'' என்றார் சங்கர்.

மீன்

''எல்லா நாளிலும் மீன் கிடைக்குமா அங்கிள்?'' என்று கேட்டான் லோகேஷ்.

''தண்ணீர் ஓட்டம் அதிகமா இருக்கும்போது, ஆத்துல மீனைப் பிடிக்க முடியாது. கோடைக் காலத்தில் தண்ணீர் வரத்தும் ஓட்டமும் குறைவா இருக்கும். அப்போ வந்து பார்த்தீங்கன்னா, கூட்டம் கூட்டமாப் பசங்க தூண்டில் போட்டு மீனைப் பிடிச்சுட்டு இருப்பாங்க. ஸ்கூல் லீவுக்கு பொழுதுபோக்காகவும் இருக்கும். மீனும் கிடைக்கும். அப்போது காலையில் இருந்து பொழுது சாயற வரைக்கும் இங்கேயே இருப்போம். வெயில் நேரத்துலதான் பெரிய மீன்களும் மாட்டும்' என்றார் சங்கர்.

'இந்தத் தூண்டில் எங்கே கிடைக்கும்? எதுக்கு ஊசிவெச்சு இருக்கீங்க? மீன் பாவம் இல்லையா?' எனக் கேள்விகளை அடுக்கினான் அருண்பிரகாஷ்.

மீன்

'தூண்டிலுக்குக் குச்சி தயார் பண்றது ரொம்ப முக்கியம். மீன் மாட்டினா, அதைத் தூக்கப் பலமான மூங்கில் குச்சியா இருக்கணும். தூண்டிலில் இருக்குற மண்புழுவைச் சாப்பிட மீன் வாயைவைக்கிற அந்த நிமிஷம்தான் ரொம்ப முக்கியம். மீன் பாவம்தான். அதுக்கு என்ன பண்றது? நமக்கு அதுதானே தொழில்' என்றார் சங்கர்.

'ஏன் மண்புழு போடுறீங்க? அதுதான் மீனுக்குப் பிடிச்ச சாப்பாடா..?' என்று சபரிநாதன் கிண்டலாகக் கேட்க, 'ஆமாம், உங்களுக்கு எப்படி சாக்லேட், ஐஸ்க்ரீம் மாதிரி  இனிப்புகள் பிடிக்குதோ... அப்படித்தான் மீனுக்கும்' என்றார்.

''அப்படின்னா மண்புழுவை மட்டும்தான் தூண்டிலில் போடுவீங்களா?'' என்று கேட்டாள் ரைகானா பர்வீன்.

'அது எப்படி? மனுஷங்களில் ஒருத்தருக்கு  இட்லி, இன்னொருத்தருக்கு பூரினு விதவிதமாப் பிடிக்குதுல்லே? அப்படி நத்தை, மண்புழு, கெண்டையைத் தூண்டிலில் இரையாவெச்சா, ஜிலேபிக் கெண்டை மாட்டும். மைதா, வாழைப்பழம், சின்ன மீன் எல்லாம் கோத்துப் போட்டா... விரால், மயிலம், கொடுவா மீனுங்க எல்லாம் மாட்டும்' என்று சொல்லிக்கொண்டே தூண்டிலைத் தண்ணீரில் அலசினார் சங்கர்.

மீன்

'ஏன் அங்கிள் அடிக்கடி தூண்டிலைத் தண்ணீர்ல அலசறீங்க?' எனக் கேட்டாள் நளினி. 'தூண்டிலைத் தண்ணீர்ல அலசும்போது வர்ற சலசலப்புச் சத்தத்துல, இங்கே வேற மீன்கள் கூட்டமா விளையாடுதுனு நினைச்சிக்கிட்டு மீன் வந்து மாட்டிக்கும்.' என்றார்.

  பேசிக்கொண்டே இருந்தவர் சட்டென அமைதி ஆகி நீரில் இருந்த தூண்டிலை வேகமாகத் தூக்கினார். அடுத்த நிமிடம் எல்லோரும் குஷியுடன் கத்தினார்கள். ஒரு மீன் தூண்டிலில் சிக்கி இருந்தது.

'எப்படி அங்கிள் எங்ககிட்டப் பேசிக்கிட்டே கரெக்ட்டா மீன் வந்துடுச்சுன்னு கண்டுபிடிச்சிங்க' என்று கேட்டார்கள்.

''வாய் பேசினாலும் கவனம் முழுக்க தூண்டில்லதான் இருந்துச்சு. இப்படித்தான் கவனமா இருக்கணும். குரவை மீன் மாட்டினா, தண்ணி மேல பொறிப் பொறியா வரும். சும்மா சும்மா தூண்டில் அசைஞ்சா, கெண்டை மாட்டி இருக்கும். சில நேரம் அதிகமான பொறி வந்தா  ,ஆமை மாட்டி இருக்குனு அர்த்தம்'' என்று சுட்டிகள் குறித்துகொள்ள நிறையவே டிப்ஸ் கொடுத்தார் சங்கர்.

மீன்

பிறகு சுட்டிகளும் தூண்டிலைத் தூக்கிப்போட்டு கவனமாகக் காத்து இருந்தனர். சிறிது நேரத்தில் ஜிலேபிக் கெண்டை சிக்கியது. ''ஹேய்ய்ய்..நாங்களும் மீன் பிடிச்சிட்டோமே'' என்று அவர்கள் போட்ட உற்சாகக் கூச்சலில், ஆற்றுக்கு உள்ளே இருந்த மீன்களும் அலறி ஓடி இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism