##~##

''எங்க ஊர்ல எடுத்த ஒரு இன்டர்நேஷனல் படம், ''லைஃப் ஆஃப் பை. அதை மிஸ் பண்ணலாமோ... அதான், பார்த்துட்டு வர்றோம்'' என்று குஷியுடன் சொன்னார்கள், புதுச்சேரி ஆல்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவிகள். படம் பற்றி அவர்களின் அசத்தல் விமர்சனம்...

ஷர்வாணி: ''புதுச்சேரி பொட்டானிக்கல் கார்டனில் உயிரியல் காட்சிசாலை நடத்தும் ஒரு குடும்பம். கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள். அதில் இரண்டாவது பிள்ளைதான் பிசின் என்கிற பை. இங்கே வருமானம் இல்லாததால், கனடாவில் செட்டிலாக விலங்குகளுடன் கப்பலில் போறாங்க. அப்போது, புயலில் சிக்கி கப்பல் மூழ்கிடுது. ஃலைப் போட்ல பை மட்டும் தப்பிக்கிறான்.''

சுடர்மணி: ''அதே படகில் ஒரு வரிக்குதிரை, கழுதைப்புலி, உராங் உட்டான், ஒரு வங்கப் புலியும் எப்படியோ வந்துருதுங்க. நடுக் கடலில் விலங்குகள் ஒன்றையன்று அடிச்சுட்டு சாக, இறுதியில் புலியும் பையும் மிஞ்சுறாங்க. இவங்களுக்கு இடையே நடக்கும் போராட்டம்தான் முழுப் படமும்.''

லைஃப் ஆஃப் பை

மோனிகா: ''கடல், ஒரு படகு இதை மட்டுமே வெச்சு டைரக்டர் ஆங் லீ கொஞ்சமும் போரடிக்காம படத்தை நகர்த்திட்டுப் போறார். ஒரு நாவலைப் படமாக்கிறது சவாலானது. யான் மார்டெல் எழுதி, 2002-ல் 'மேன் புக்கர்’ பரிசு வாங்கின புத்தகத்தைத்தான் படமாக்கி இருக்கார். அதுவும் எல்லாத் தரப்பும் பாராட்டுற மாதிரி எடுத்து இருக்கார். சும்மாவா, சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது வாங்கியவராச்சே!''

சாத்தம்மை: ஹீரோ சிறுவனாக வரும் சூரஜ் சர்மாவின் நடிப்பு பிரமாதம். படத்தில் அவருடைய பெயருக்கான காரணமே வெரி இன்ட்ரஸ்டிங். அவர் மாமா, நீச்சல் பிரியர். உலகம் முழுக்கப் போய், பல நீச்சல் குளங்களில் நீச்சல் அடிப்பார். அவருக்கு ஃப்ரான்ஸ் நாட்டில் இருக்கும் 'பிசின் மோலிட்டர்’ நீச்சல் குளம் ரொம்பப் பிடிச்சுப்போகுது. அதனால பிசின் படேல்னு பெயர் வைக்கிறார். இதை ஸ்கூலில் பசங்க கிண்டல் பண்றதால், 'பை’னு தனக்குத் தானே பெயரை வெச்சுக்கிறான். அதே மாதிரி புலிக்கு 'ரிச்சர்ட் பார்க்கர்’னு வெச்சு இருக்கிற பேரும் சூப்பர்.''

லைஃப் ஆஃப் பை

துர்கா: ''நடுக் கடலில் உணவு தீர்ந்துபோய் பசியால் தவிக்கும்போது, புலிக்கு ஹீரோ மேலே ஏற்படும் வெறி, புலி மேல் ஹீரோவுக்கு ஏற்படும் ஆக்ரோஷம் என்ன ஆகுமோனு பதறவைக்குது. பிறகு புலிக்காக மீனைப் பிடிச்சுக் கொடுக்கிறது, புயல் வீசும்போது புலியைக் காப்பாற்றப் போராடுறது, அதை மடியில் போட்டுக்கிட்டு தடவிக்கொடுக்கிறதுனு சூரஜ் சர்மா அசத்தி இருக்கார்.''

சுரேகா: ''இந்தப் படத்தைப் பார்த்தா, விலங்குகள் மேல் எல்லோருக்கும் அன்பு ஏற்படும். 'புலியின் குணம் மாறாது. அதன் கண்ணில் அன்பு தெரிஞ்சதா நீ சொல்றது உன் மனப் பிரமை’னு ஆரம்பத்தில் அப்பா சொல்றார். ஆனால், தன் அன்பின் மூலம் அதைப் பொய்னு நிரூபிக்கிறான் பை.''

லாரா: ''இதிலே ஆச்சரியம், கடலுக்கு வந்த பிறகு காட்டும் அந்தப் புலி, நிஜம் கிடையாது. அனிமேஷன்ல உருவாக்கினதாம். சத்தியம் பண்ணிச் சொன்னாலும் நம்புறதுக்குக் கஷ்டமா இருக்கு. அவ்வளவு தத்ரூபம். அந்த பசிஃபிக் பெருங்கடல்கூட செயற்கையா உருவாக்கியதுதான். தைவான் நாட்டிலே உள்ள ஒரு பழைய விமான தளத்தைக் கடலா மாத்தி இருக்காங்களாம்.''

பிரசன்னா: ''அந்தக் கடைசிக் காட்சியிலே பை கண்ணீர் விடும்போது நமக்கும் சோகம் ஏற்படுது. ரிச்சர்ட் பார்க்கர் காட்டுக்குள்ளே போய் மறையும்போது, அந்த இழப்பை நாமும் உணர முடியுது.''

லைஃப் ஆஃப் பை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு