FA பக்கங்கள்
Published:Updated:

அவதார் - நீதிமன்றம் வந்த சுட்டி வக்கீல்கள் !

அவதார் - நீதிமன்றம் வந்த சுட்டி வக்கீல்கள் !

##~##
ஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற வளாகம் தன் இயல்பு நிலையில் இருந்து ஒரு கணம் ஸ்தம்பித்தது. இரண்டு வேன்களில் வந்து இறங்கியவர்களைக் கண்டதும், மாடியிலும் மரத்தடியிலும் வழக்குகள் பற்றிப் பேசிக்கொண்டு நின்ற நீதிமன்ற வழக்கறிஞர்களும் நீதி கேட்டு வழக்குகள் தொடுத்து வந்திருந்தவர்களும் 'இவ்வளவு சின்ன வயதில் இத்தனை வழக்கறிஞர்களா...’ என ஆச்சர்யத்துடன் அருகில் வந்து சூழ்ந்துகொண்டனர். வழக்கறிஞர் ப.வடிவேல் மற்றும் சக வழக்கறிஞர்கள் பலரும் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்திருந்த சின்னச் சின்ன அட்வகேட்களைக் கைகுலுக்கி வரவேற்றனர்.

கழுத்துப் பட்டியும் கருப்பு அங்கியும் கைகளில் வைத்து இருந்த 'கேஸ்'கட்டும் அவர்களை மரியாதைக்கு உரியவர்களாய் உயர்த்தியது. அனைவரின் எதிர்கால லட்சியத்தைக் கேட்டு அறிந்த நீதிபதி அவர்கள், அன்போடு வரவேற்று இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.

''நீங்கள் எதற்காக அட்வகேட் ஆக வேண்டும்?'' என்று கேட்டதற்கு,  ''நீதிக்காக நாங்களும் குரல் கொடுப்போம்'' என்று அனைவரும் சொல்ல, கட்டடம் அதிரக் கரவொலி எழுப்பினார்கள் வக்கீல்கள். ''உங்கள் கைகளில் இருக்கும் கேஸ் கட்டுகளில் என்ன இருக்கிறது?'' என்று இன்னொரு வக்கீல் கேட்க, என்ன சொல்லலாம் என்று சற்று யோசித்த ஐந்தாவது படிக்கும் ஸ்நேகா என்ற வக்கீல், ''அதை இப்போ சொல்லக் கூடாது'' என்று சாமர்த்தியமாகச் சொல்லி, அனைவரையும் ஈர்த்தார்.  

அவதார் - நீதிமன்றம் வந்த சுட்டி வக்கீல்கள் !

''வக்கீல் வண்டு முருகனை (சினிமா நடிகர்) பார்த்தா என்ன சொல்வீங்க?'' என்று நான்காவது படிக்கும் பிரதிக் அர்ஜூன் என்ற வக்கீல் கேட்க, 'வண்டு முருகனா?’ என்று யோசித்த வக்கீல், ''இனிமே வண்டு மாதிரி மீசை வைக்காதே! ஒன்னப் பாத்தா பசங்களுக்கு  'சிர்ப்பு’ வருதாம்னு சொல்வேன்'' என்றதும், சிரிப்பலை எழுந்தது.

''கிளாஸ்ல என் இடத்துல உக்காந்துக்கிட்டு ஒருத்தி விட மாட்டேங்கிறாள். அவ மேல நான் கேஸ் போடலாமா சார்?'' என்று கேட்டாள் ஸ்ரீகலைவதனா. ''இதுக்கு எல்லாம் கேஸ் போடக் கூடாது. இது பேசித் தீர்க்கவேண்டிய பிரச்னை. உங்க ஹை கோர்ட், க்ளாஸ் டீச்சர். சுப்ரீம் கோர்ட், உங்க பிரின்ஸிபால். ஓகே?'' என்றதும், சரி என்று தலை அசைத்தாள்.

''உங்க முதல் கேஸ் வாதாடும்போது பயந்தீங்கதானே?'' என்று நான்காவது படிக்கும் தேஜல் கேட்க 'ஓ...’ எனக் குட்டி வக்கீல்கள் குழு கேலிக்குரல் எழுப்பினர். ''பயம் இருந்துச்சுதான். அதைவிடக் கூடுதலா, நம்பிக்கையும் ஜெயிக்கணும்கிற வெறியும் இருந்துச்சு'' என்றார் வக்கீல் வடிவேல் சிரித்துக்கொண்டே.

''எது கிரிமினல் கேஸ்? எது சிவில் கேஸ்?'' என்றார் ஐந்தாவது படிக்கும் ரேஷ்மா என்ற வக்கீல்.

அவதார் - நீதிமன்றம் வந்த சுட்டி வக்கீல்கள் !

''செய்யக் கூடாத செயலைச் செய்தால் அது கிரிமினல் வழக்காகும்.  இடம், ஒப்பந்தம், குத்தகை, வீடு உள்ளிட்ட வழக்குகள் சிவில் ஆகும்'' என்ற வடிவேல், ''சரி, நீங்க சொல்லுங்க... ஐபிசி-ன்னா என்னன்னு தெரியுமா?'' என்று கேட்டதற்கு, ''ஓ... தெரியுமே! இண்டியன் பீனல் கோட்''என்றார் ஐந்தாவது படிக்கும் வக்கீல் சஞ்சய்காந்த்.

''வெரி குட்!'' என்றார் வடிவேல்.

''நல்லவங்களுக்கு வாதாடுவீங்களா? கெட்டவங்களுக்கு வாதாடுவீங்களா?'' என்றார் அதிரடியாய்... ஐந்தாவது படிக்கும் நிவேதிதா வக்கீல். இப்படிக் கேட்பார்கள் என்று வக்கீல் வடிவேல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ''நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு. ஒருவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாலேயே குற்றவாளி எனக் கருதப்பட மாட்டார். தீர்ப்பு சொல்லப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் என்றே கருதப்படுவார்''

''உண்மையை எப்போ கண்டுபிடிப்பது?'' என்றார் ஸ்வேதா.

''காவல் துறையின் புலனாய்வின் மூலமும் அந்த வழக்கு பற்றி நாம் ஆய்வு செய்வதன் மூலமும் கண்டுபிடிக்கலாம்.''

அவதார் - நீதிமன்றம் வந்த சுட்டி வக்கீல்கள் !

அடுத்துப் பாய்ந்த கேள்வி அனைவரையும் ஒரு நிமிஷம் சிலையாக்கியது. ''உங்களுக்கு விடை தெரியலைனா என்ன பண்ணுவீங்க?'' என்ற 5-வது படிக்கும் யோகலட்சுமி வக்கீலின் கேள்விக்கு வக்கீல் வடிவேல், ''சரியாகத் தெளிவுபடுத்திக்கொண்டு, அறிந்து சொல்வதாக வழக்கை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்வேன். ஏன் என்றால், நீதிமன்றத்தில் தவறான விஷயத்தையோ, தெரியாத விஷயத்தையோ சொல்லக் கூடாது. நீதிமன்றமே மக்களின் கடைசி நம்பிக்கை'' என்றார்.  

''நாங்க சிறந்த அட்வகேட்டா வரணும்னா என்ன செய்யணும் சார்?'' என்று குட்டி வக்கீல்கள் குழு கேட்டது.

''ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிப் புலமை வேண்டும். பல துறை விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும். வழக்குகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.''  

அவதார் - நீதிமன்றம் வந்த சுட்டி வக்கீல்கள் !

''நீதிமன்றங்களின் உண்மையான பவர் என்ன?'' என்றார் நான்காவது படிக்கும் கிஷோர் என்ற வக்கீல்.

''ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. நீதிமன்றத்தில் படித்தவர், படிக்காதவர்... ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு காட்டப்பட மாட்டாது. பெரிய செல்வந்தர் மீதுகூட வழக்குத் தொடுத்து, ஓர் ஏழை தனக்கு உரிய நியாயத்தைப் பெற முடியும். எதிர்காலத்தில் நீங்களும் வழக்கறிஞர்களாக வர வாழ்த்துகிறோம்'' என்றனர் வடிவேல் மற்றும் சக வழக்கறிஞர்கள்.

நன்றி கூறிப் புறப்பட்டனர், மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ -  மாணவிகள்.

ஞ்சாவூர் மகர்நோம்புச் சாவடியில் உள்ள மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,      1986-ல் தொடங்கப்பட்டது.

தாஸ் அறக்கட்டளையின் கீழ் எஸ்.விஜயகுமார், எம்.அப்துல் மஜீத் ஆகியோரின் நிர்வாகத்தில், வி.சுஜய்குமார் செயலாளராக இருந்து சிறப்பாக நடத்திவருகிறார். மேல்நிலை மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவ - மாணவிகள் 90 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெறுகிறார்கள். கலை மற்றும் அறிவியல் படைப்புகளில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் பங்குபெற்றுப் பரிசுகள் பெற்றுள்ளனர். விளையாட்டுத் துறையிலும் முதன்மை பெற்று வருகிறார்கள். ''கல்வியோடு உடல், மன ஆரோக்கியத்துடன் ஒழுக்கமும் தன்னம்பிக்கையும்கொண்ட மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்'' என்கிறார், பள்ளியின் முதல்வர் துரை. வரதராஜன்.