Published:Updated:

உலகை அழிக்கப் போவது யார் ?

த.வி.வெங்கடேஸ்வரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'உலகம் அழியப்போகிறது’ என்ற பூச்சாண்டி முடிந்தது. 'ஹேப்பி நியூ இயர்’ கொண்டாடிவிட்டு, பொங்கலையும் சந்திக்கத் தயாராகிவருகிறோம். எப்படி வந்தது இந்த டிசம்பர் 21 புரளி?

நம் வீட்டுத் தினசரி காலண்டரில் ஒவ்வொரு நாளும் ஒரு தாளைக் கிழிப்போம். டிசம்பர் 31-ல் ஒரு தாள்தான் இருக்கும். அப்போது என்ன செய்கிறோம்? கடைக்குபோய் புதிய காலண்டர் வாங்குகிறோம். (சிலர் ஓசி காலண்டர் எங்கே கிடைக்கும் என்று தேடுவது தனிக் கதை) அப்படித்தான் இதுவும்.

ஆண்டு என்ற கால அளவு போல பண்டைய பண்பாட்டில் யுகம் என்ற கருத்தும் இருந்தது. சுமார் ஐந்து ஆண்டுகள்கொண்டது ஒரு யுகம். ஆரியபட்டா காலத்தில்தான் லட்சம் ஆண்டுகள்கொண்ட மகா யுகம் என்ற கருத்து உருவானது. இந்த ஐந்து ஆண்டுகள் கொண்ட யுகம் என்பது என்ன?

இன்று இரவு, நிலவை ஒரு விண்மீன் அருகில் பார்க்கிறோம் எனக்கொள்வோம். நாளை நிலவு அதே விண்மீன் அருகில் இருக்காது. 27 நாட்கள் கழித்துதான் அந்த விண்மீன் அருகில் நிலவு வரும். ஒவ்வொரு நாளும் நிலவு அமையும் நிலைக்கு அருகே உள்ள விண்மீன்களையே நட்சத்திரம் என்பார்கள். அதாவது 27 நட்சத்திரங்கள். இதை நட்சத்திர மாதம் என்பார்கள். இன்று முழுநிலவு என்றால், 30 நாட்கள் கழித்து மறுபடியும் முழு நிலவு வரும். இது திங்கள் எனப்படும் மாதம் ஆகும்.

உலகை அழிக்கப் போவது யார் ?

இன்று நமது தலைக்கு மேலே உச்சியில் சரியாக இரவு 12 மணிக்கு ஒரு விண்மீன் தெரிகிறது என்றால், அதே விண்மீன் நாளை இரவு 12 மணிக்கு இருக்காது. நான்கு நிமிடங்களுக்கு முன்பே அந்த விண்மீன் உச்சிக்கு வந்துவிடும். மறுபடியும் 365 நாட்கள் கழித்துதான் அந்த விண்மீன் சரியாக இரவு 12 மணிக்கு உச்சிக்கு வரும். இதுதான் ஆண்டு.

குறிப்பிட்ட நட்சத்திரம், நமது தலைக்கு மேலே சரியாக இரவு 12 மணிக்கு ஒரு நாளில் இருக்கிறது. நிலவும் முழுநிலவு என வைத்துகொள்வோம். இதுபோல் மறுபடியும் வருவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகும். இதை ஒரு யுகம் என்பார்கள்.

இந்த விண் இயக்கத்தோடு புதன், வெள்ளி, நிலவு, வியாழன், சனி, சூரியன், நிலவின் வெட்டுப் புள்ளி (ராகு/ கேது), நட்சத்திரம் என எல்லாம் ஒரு நாள் நேர் கோட்டில் இருந்தால், அதுபோல் மறுபடியும் வர சுமார் 1.4 லட்சம் வருடங்கள் ஆகும். இதை மகா யுகம் என்றார் ஆரியபட்டா.

ஐந்து ஆண்டு யுகக் கணக்கோடு, வியாழன் கோளின் 12 வருட சுழற்சியையும் கணக்கில்கொண்டால்... நட்சத்திரம், நிலவின் பிறை நிலை, தலைக்கு மேல் உள்ள விண்மீன் மற்றும் வியாழன் முதலிய அதே நிலைக்கு மறுபடித் திரும்ப 5 ஜ் 12 = 60 ஆண்டுகள் ஆகும். இதுவே 60 ஆண்டுகள்கொண்ட தமிழ் ஆண்டுக் கணக்கு.

உலகை அழிக்கப் போவது யார் ?

இதுபோல் மாயன் பண்பாட்டினர் பல்வேறு வான் செய்திகளைத் தொகுத்தனர். குறிப்பாக, வெள்ளி என்ற கோள் அவர்களுக்கு சிறப்பானது. அதன் இயக்கத்தைக் கணக்கில்கொண்டு, அதே வான் நிலை மறுபடி ஏற்படும் காலம் வரை ஒரு நீண்ட காலண்டரைத் தயாரித்தனர். அந்த மாயன் காலண்டர்தான் டிசம்பர் 21 உடன் முடிகிறது எனச் சிலர் கருதுகின்றனர்.

இந்தியப் பண்பாட்டில் மகா யுகம் முடிந்ததும் பிரளயம் வரும் என்று புராணக் கருத்து உள்ளது. அதுபோல் மாயன் புராணக் கருத்தில் நேபுரு எனும் கோள் வந்து பூமியில் மோதி உலகம் அழியும் என்ற கருத்து இருந்தது. ஆரியபட்டரின் ஆரிய பாடியம் என்ற நூலிலும் மகா யுகம் குறித்துக் கணக்கு உள்ளது. ஆனால், பிரளயம் போன்ற கருத்துகள் இல்லை. புராணங்களில்தான் பிரளயம் போன்ற கருத்துகள் உள்ளன.

ஆனாலும் உலகம் அழியத்தான் போகிறது. இயற்கையாக உலகம் அழிய சுமார் 500 கோடி வருடங்கள் இருக்கின்றன. அப்போது, சூரியன் சிவப்பு ராட்சச விண்மீனாக மாறி, அதன் உருவம் ஊதிய பலூன்போல விரியும். பூமிக்கு அருகே வந்து உலகைக் கபளீகரம் செய்துவிடும்.

ஆனால், வளிமண்டலத்தில் கார்பன் மாசு, அணு ஆயுதங்களின் பெருக்கம் என இப்போது போலவே இயற்கைக்கு மாறான விஷயங்களை மனிதர்கள் செய்துகொண்டு இருந்தால், இன்னும் முன்னதாகவே கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அழிந்துவிடலாம்.

ஆக, நம்முடைய செய்கையைப் பொறுத்துதான்  இருக்கிறது பூமியின் கடைசி நாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு