Published:Updated:

ஒரு படகு பிறக்குது !

மா.நந்தினி கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

'உப்புத் தண்ணீர் பட்டால் எந்தப் பொருளும் வீணாகிவிடும். ஆனால், தண்ணீரிலேயே மிதந்துகொண்டு இருக்கும் படகு மட்டும் எப்படிக் கெடாமல் இருக்கு?’

இந்தக் கேள்வியோடும், ஒரு படகு எப்படி உருவாகிறது என்பதை அறியும் ஆர்வத்தோடும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சாலையில் இருக்கும் 'பி அண்டு எஸ் ஸ்டீல்போட் பில்டர்ஸ்’ உரிமையாளர் பாலுவைச் சந்திக்க, ஏ.ஜெ.சி பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகளுடன்  சென்றோம்.

''மழைக் காலத்தில் பேப்பர் கப்பல் செய்தோமா, தண்ணீரில் விட்டோமானு இல்லாமல், படகு செய்றதைப் பார்க்க வந்தது சந்தோஷமா இருக்கு.'' என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார் பாலு.

ஒரு படகு பிறக்குது !

படகு தயாராகும் இடத்தில் வலம்வந்தவாறு பேச்சு ஆரம்பித்தது. 'ஹையோ! படகு இவ்வளவு பெருசா இருக்கே, எப்படித் தண்ணிக்குள்ளே மூழ்காம மிதக்குது?'' என்று சிவசங்கரி கேள்வியை ஆரம்பித்தாள்.

''படகில் ஓட்டை இருந்தாத்தான்டி மூழ்கும். அங்கிள் நல்ல படகைத்தான் செய்வார்'' என்று கமென்ட் அடித்தாள் ஸ்நேகிதா.

சிரித்த பாலு, ''படகு தண்ணியில் மூழ்காதபடி அதன் கட்டுமானம் இருக்கும். அதாவது, ஒரு படகு ஐந்து அடிவரை தண்ணீரில் மூழ்கி இருக்கும். ஐந்து அடிக்கு மேல் உள்ள தடித்த பெல்ட் பகுதியில் இருந்து 11 அடிவரை தண்ணீருக்கு மேலே இருக்கும். அதனாலதான் தூரத்தில் இருந்து பார்க்கும்போது படகு சின்னதாகத் தெரியுது' என்றார் பாலு.

ஒரு படகு பிறக்குது !

ஒவ்வொரு படகிலும் ஃபிட்டிங், வெல்டிங் எனப் பரபரப்பாக வேலை நடந்துகொண்டு இருந்தது.  ''ஃபிட்டிங் பண்ற ஒவ்வொரு இரும்புத் தகட்டில் ஏன் நம்பர் போட்டு இருக்கு? இந்தப் படகு செய்வதற்கான பொருட்களை எங்கே வாங்குறீங்க?' என்று கேள்விகளை அடுக்கினான் ஆதித்யா.

'படகு செய்றதுக்கு முன்னாடியே இணைக்க வேண்டிய இரும்புத் தகட்டில் வரிசையா எண்களைப் போட்டால்தான், அந்த எண்கள்படி வெல்டிங் பண்ண சுலபமாக இருக்கும். படகுக்கான கட்டுமானப் பொருட்களை சேலம் இரும்பு ஆலையில் இருந்து மொத்தமா வாங்கி வருவோம். கடல் தண்ணியில் இருக்கும் உப்பு, இரும்பை அரிக்காத அளவுக்கு அதில் அடிக்கும் ஆன்டிபாலிக் பெயின்டிங் முக்கியம்' என்றார் பாலு.

'படகுக்கு உள்ளே மட்டும் ஏன் மரத்தால் செய்றீங்க? அதையும் இரும்பால் செய்தால் என்ன?'' எனக் கேட்டாள் காயத்ரி.

'நல்ல கேள்விதான். படகின் மேல்புறத்தில்தான் மீனவர்கள் நின்று மீன் பிடிப்பார்கள். கடலுக்குள் போகும்போது வெயில்ல இரும்பு சூடாகிவிடும். அங்கே நின்று வேலை செய்ய முடியாது. அதனால்தான் மரத்தால் உள் கட்டமைப்பை உருவாக்குகிறோம். மேலும் கடலில் நாட்கணக்கில் இருந்து மீன் பிடிப்பார்கள். பிடிக்கிற மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்கணும். அதனாலதான் குடோன், கேபின் எல்லாம் மரத்தால் செய்து, தெர்மாகோலால் கவர் பண்ணிருவோம். மரம்தான் வெயில், குளிர் எல்லாக் காலநிலையையும் தாக்குப்பிடிக்கும்'என்றார் பாலு.

'படகில் குடோனா? அது எப்படி இருக்கும் அங்கிள்?'' என ஆவலுடன் கேட்டான் நோயல்.

ஒரு படகு பிறக்குது !

உடனே அவர்களை ஒரு பெரிய படகில் ஏற்றினார் பாலு. அனைவரும் குஷியுடன் படகின் உள்ளே ஏறிக் குதித்தனர். ஓட்டுனர் பகுதி, குடோன் எனச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

''யாரு குடோன் உள்ளே போய்ப் பார்க்கப் போறது?'' என்று பாலு கேட்க, எல்லோருக்கும் கொஞ்சம் பயம். ஃபெலிக்ஸ் என்ற சுட்டி தைரியமாக உள்ளே குதித்தான். மற்றவர்கள் மேலே இருந்தவாறு ''டேய் ஃபெலிக்ஸ், உள்ளே என்னடா இருக்கு?'' என ஆர்வமாகக் கேட்டார்கள்.

''இங்கே  நாலு அறைகள் இருக்கு. ஒரு அறையில் சமையலுக்குத் தேவையான சிலிண்டர், பாத்திரம் எல்லாம் இருக்கு. அப்புறம் மீன் பிடிக்கிற வலைகள் இருக்கு'' என்று குரல் கொடுத்தான் ஃபெலிக்ஸ்.  

'பாத்திரம் எதுக்கு அங்கிள்?' எனக் கேட்டான் கோபிநாத். 'மீன் பிடிக்கப்போகும் மீனவர்கள்  கடலில் குறைந்தபட்சம் 10 நாட்களாவது தங்குவாங்க. அப்போ சமைத்துச் சாப்பிடுவாங்க. ஒருமுறை கடலுக்குப்போனால், ஒரு படகில் 15 டன் மீன்களைக் கொண்டுவரலாம்' என்றார் பாலு.

'ஒரு படகைச் செய்து முடிக்க எவ்வளவு நாள் ஆகும் அங்கிள்?' என்று தஸ்லிமா கேட்டாள்.

''ஒரு படகை முழுமையாகச் செய்து முடிக்க மூன்று மாதங்கள் ஆகும். ஒரு வருஷத்துக்கு சுமாராக 100 படகுகள் இங்கே இருந்து தயாராகி வெளியே போகுது' என்றார் பாலு.

ஒரு படகு பிறக்குது !

'ஒரு படகு செய்ய எவ்வளவு பணம் ஆகும்?' என கோபிநாத் கேட்க, ''ஒரு படகு செய்ய 40 முதல் 50 லட்சம் வரை ஆகும். நீ நல்லாப் படிச்சு, பெரிய வேலைக்குப் போன பிறகு சொந்தமாப் படகு வாங்கலாம். இப்ப எல்லோரும் படகில் ஒரு ரவுண்ட் போகலாமா?' என்று பாலு கேட்டதும், ''போகலாம்... போகலாம்...'' என அனைவரும் குஷியானார்கள்.

அவர்களைச் சுமந்துகொண்டு 'விர்ர்ர்ர்’ எனத் தண்ணீரைக் கிழித்தவாறு கடலில் செல்ல ஆரம்பித்தது படகு. 'படகில் எதுக்கு தேசியக் கொடி இருக்கு? இப்போ நாம எவ்வளவு தொலைவில் இருக்கோம்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?' எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான் நோயல்.

'இங்கே இருந்து மீன் பிடிக்கப்போகும் மீனவர்களின் பாதுகாப்புக்காகத்தான் தேசியக் கொடியைக் கட்டி இருக்கோம். கடல் தொலைவை 'நாட்டிகல் மைல்’னு சொல்வாங்க. அதைத் தெரிஞ்சுக்க ஒவ்வொரு படகிலும் ஜிபிஎஸ் (குளோபல் பொஸிஷன் சிஸ்டம்) என்ற கருவி  இருக்கும். அதன் மூலமாத் தொலைவைத் தெரிஞ்சுக்கலாம்'' என்றார் பாலு.

படகுத் துறைமுகத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு கரைக்குத் திரும்பியது. ''ம்... கீழே இறங்கவே மனசு வரலை'' என்று சொன்னவர்களை, ''இன்னொரு முறை வாங்க, எல்லாரும் இங்கே இருந்து வேளாங்கண்ணிக்குப் போகலாம்'' என்றார் பாலு.

அனைவரும் குஷியுடன் கையசைத்து விடைபெற்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு