##~##

ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போனால்  உணவு கொடுப்போம், உடைகள் கொடுப்போம். ஆனால், மதுரை லிட்டில் டைமண்ட் பள்ளியில் 9-ம் வகுப்புப் படிக்கும் சங்கீதா அவர்களுக்குக் கொடுத்து இருப்பது, தன்னம்பிக்கையும் கொடையாளர்கள் என்ற பட்டமும்.

''நான் குட்டிப் பெண்ணா இருக்கும்போது என் பிறந்த நாளில், ஒரு முதியோர் இல்லத்துக்குப் போய் எல்லோருக்கும் இனிப்பு வழங்கினேன். ஒரு பாட்டி தன்னோட அறைக்குக் கூட்டிட்டுப்போய், கடவுள் படத்துக்கு முன்னாடி நிற்கவெச்சு, எனக்காகப் பிரார்த்தனை செஞ்சாங்க. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. பிறகு, எனக்கு அவ்வப்போது கிடைக்கும் பணத்தை, இது மாதிரி இல்லங்களுக்குக் கொடுக்கிறதை வழக்கமா வெச்சுக்கிட்டேன்.'' என்கிறார் சங்கீதா.

சிலம்பத்தில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தபோது கிடைத்த ரொக்கப் பரிசையும் மதுரை, திருநகரில் இருக்கும் பாலர் ஆதரவற்றோர் இல்லத்துக்குக் கொடுத்து இருக்கிறார் சங்கீதா.

சபாஷ் சங்கீதா !

''அந்த இல்லத்தின் நிர்வாகிகள், அந்தச் சிறுவர், சிறுமிகளை எனக்கு அறிமுகம் செய்துவெச்சாங்க. அன்னைக்கு முழுக்க அவங்களோடவே இருந்தேன். ஸ்கூல் லீவில் அங்கே மறுபடியும் போய், அவங்களைப்  பார்த்தேன். அவங்களுக்கும் லீவுங்கிறதால ரொம்ப ஜாலியா விளையாடிக்கிட்டு இருந்தாங்க. சைக்கிள் எடுத்துக்கிட்டு ரவுண்ட் போறாங்க. 'நமக்கு நேரம் கிடைச்சா, ஏதாவது புதுசாக் கத்துக்கிறோம். இவங்களுக்கு நேரம் இருக்கு. ஆனா, சொல்லிக்கொடுக்க ஆள் இல்லையே’னு தோணுச்சு. இதை அவங்ககிட்டே சொல்லி, 'நீங்களும் நாலு பேருக்கு உதவலாம்’னு சொன்னேன். ரொம்ப ஹேப்பி ஆகிட்டாங்க.'' என்கிறார் சங்கீதா.

மறு நாளே செயலில் இறங்கி இருக்கிறார். எம்போஸ் பெயின்டிங், கிராஃப்ட் ஒர்க்ஸ், கீ செயின் மேக்கிங், பென் ஸ்டாண்ட்ஸ் செய்யச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார் சங்கீதா.

சபாஷ் சங்கீதா !

இது குறித்துப் பேசிய பாலர் பள்ளி சுட்டிகள், ''எங்க இல்லத்துக்கு நிறையப் பேர் வருவாங்க. அவங்கள்ல சங்கீதா  வித்தியாசமானவங்க. எங்களுக்காக இவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்டு, கத்துக்கொடுக்கும் அவங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதோடு, அவங்க சொல்லிக்கொடுத்தது எல்லாமே ரொம்ப ஜாலியாவும் இருந்துச்சு. எம்போஸ் பெயின்டிங்தான் முதல்ல சொல்லிக் கொடுத்தாங்க. 'இதெல்லாம் பெரிய பெயின்டிங்கா இருக்கு. இதுக்கு முன்னாடி நாங்க பிரஷ்கூட பிடிச்சது இல்லையே’னு சொன்னோம். 'இது பெரிய விஷயமே கிடையாது. நானும் கொஞ்சம் கொஞ்சமாத்தான் கத்துக்கிட்டேன்’னு எங்களை ஊக்கப்படுத்தினாங்க. இப்ப நாங்க ஆளுக்கு ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி, புதுசு புதுசா எதையாவது வரைஞ்சு பழகிக்கிட்டே இருக்கோம். நாங்க கத்துக்கிட்டதை இங்கே இருக்கிற மற்ற குழந்தை களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம்'' என்கிறார்கள் அந்தச் சுட்டிகள்.

புன்னகையுடன் சங்கீதா தொடர்கிறார். ''ஒரு பிட் துணியைக்கூட யாரும் வீணாக்கலை. முதல் முயற்சியிலேயே அவ்வளவு ஆர்வமாகவும் கவனமாகவும் செஞ்சாங்க. அவங்க செஞ்சதை எல்லாம் கண்காட்சி நடத்தினேன். நிறையப் பேர் விரும்பி வாங்கினாங்க. அந்தப் பணத்தை என்னோட பள்ளி முதல்வர் ஷீலா ஜோசப்புடன் சேர்ந்து கலெக்டரிடம் கொடுத்தேன்.'' என்கிறார் சங்கீதா.

சபாஷ் சங்கீதா !

''மக்களுக்குப் பயன்படும்படியான விஷயங்களுக்கு இந்தத் தொகையைக் கொடுங்கள்'' என்று கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் சொல்லி இருக்கிறார் சங்கீதா. ''இதை அந்தக் குழந்தைகளுக்கே கொடுத்துவிட வேண்டியதுதானே?'' என்று கலெக்டர் கேட்டதற்கு, 'அவங்களோட தன்னம்பிக்கை வளரணும் சார். இதுவரை அவங்க நன்கொடை பெறுபவர்களாகவே இருந்து இருக்காங்க.இப்ப நன்கொடையாளர்களாக மாறி இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்படுறாங்க. இப்ப நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்தா, அவங்க ஏமாற்றம் அடைஞ்சிடுவாங்க’ என்று சங்கீதா சொன்னதைக் கேட்டு அசந்துபோய் இருக்கிறார் கலெக்டர்.

''சங்கீதா கொடுத்த 10,000 ரூபாய் பணத்தைக்கொண்டு, மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு வேண்டிய மேசை, நாற்காலிகளை வாங்கப்போகிறோம். தான் கற்ற கைவினைத் திறமையை மேலும் சிலருக்கு கற்றுத் தந்ததுடன் அரசுக்கும் உதவி செய்து இருக்கும் சங்கீதாவின் செயலை எத்தனை பாராட்டினாலும் போதாது'' என்கிறார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.

'நமக்கு நாமே’ என்றொரு திட்டம் உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் ஒரு திட்டத்துக்கு 300 ரூபாய் செலவாகும் என்றால், அதற்கு 100 ரூபாயை மக்கள் கொடுத்தால், மீதித் தொகையை (அதாவது மூன்றில் இரண்டு பங்கு) அரசே போட்டு, அந்தப் பணியைச் செய்துகொடுக்கும். அந்தத் திட்டத்தில்தான் சங்கீதா கொடுத்த 10,000 ரூபாயுடன் மேலும் 20 ஆயிரத்தைச் சேர்த்து, மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்கு வேண்டிய மேசை, நாற்காலிகள், கட்டில்கள் போன்றவற்றை வாங்கச் சொல்லி இருக்கிறார், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. இது அங்கே வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு