Published:Updated:

போர்க்காய் !

கரு.முத்து, படங்கள் : குணசீலன்ஒருங்கிணைப்பு : செள. சரவணன்

போர்க்காய் !

கரு.முத்து, படங்கள் : குணசீலன்ஒருங்கிணைப்பு : செள. சரவணன்

Published:Updated:
##~##

''எங்க ஊரில் நடக்கும் போர்க்காய் விளையாட்டுக்கு வர்றீங்களா?'' என்று அழைத்தார்கள் பழைய பேராவூரணி சுட்டிகள்.

காணும் பொங்கல் பண்டிகை நாளில், பழைய பேராவூரணி காளியம்மன்கோவில் திடலில் கூடி இருந்தது சுட்டிகளின் கூட்டம். கூடவே சில பெரியவர்களும் இருந்தார்கள். பல சுட்டிகளின் கைகளில் போர்க்காய். தேங்காய் தெரியும்... அது என்ன போர்க்காய்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேராவூரணியின் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொன்னாங்கண்ணிக்காடு, மொடச்சிக்காடு, நாடாகாடு, பூக்கொல்லை, கழனிவாசல், கொன்றைக்காடு, கல்லாங்காடு போன்ற ஊர்களில் காணும் பொங்கல் திருநாளை ஒட்டி விளையாடப்படும் உற்சாக விளையாட்டுதான் போர்க்காய். இதில் தேங்காய்தான் ஹீரோ.

கிட்டத்தட்ட சேவல் சண்டை போல்தான். எதிரெதிரே நிற்கும் இருவர், தங்கள் கையில் உள்ள குடுமி இல்லாத தேங்காயைத் தரையில் வைத்து, ஒன்றோடு ஒன்றை மோதுவார்கள். அதில் யார் தேங்காய் உடைகிறதோ, அவர் தோல்வியுற்றவர். உடையாத தேங்காய்க்காரர் அடுத்தடுத்த தேங்காய்க்காரருடன் போட்டியில் இறங்குவார்.

போர்க்காய் !

''தேங்காயை வெச்சு மோதிக்கணும் அவ்வளவுதானேனு சாதாரணமா நினைச்சுடாதீங்க. போட்டிக்கான தேங்காயைத் தேர்ந்தெடுக்கிறதே மிகப்பெரிய கலை'' என்று பெருமிதத்துடன் சொல்கிறான்  தேங்காய் ஜாக்கி கஜபதி.

பேராவூரணி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி. 100 மரங்கள் இருந்தாலும் ஏதேனும் ஒரு மரத்தில் காய்க்கும் தேங்காயைத்தான் இதற்குப் பயன்படுத்த முடியும். குடுமிப் பகுதி குறுகி, ஆயுதம் போல் இருக்கும் தேங்காய்தான் இதற்குச் சரியான தேர்வு. சின்னதாக இருப்பதால் இதை வியாபாரிகளும் வாங்க மாட்டார்கள். அதனால், இந்தத் தேங்காயைத் தனியாக எடுத்து, பொங்கலுக்கு முன் ஒரு மாதம் மண்ணில் புதைத்துவைப்பார்கள். பிறகு விளையாட்டுக்குப் பயன்படுத்துவார்கள்.

''சொந்தமாக மரம் வெச்சு இருக்கிறவங்க அவங்க மரத்துக் காயைப் பயன்படுத்துவாங்க. சிலர் போர்க்காய்க்குப் பயன்படுத்தும் தேங்காய்களை 100 ரூபாய் கொடுத்துக்கூட வாங்குவோம். இந்த விளையாட்டில் தேங்காயின் பலம் ஒருபுறம் என்றால், கைகளின் பலமும் மிக முக்கியம். அதோடு சேர்த்துக் கவனத்தை ஒருமுகமாக்கி வாகான கோணம் பார்த்து மோதச் செய்யணும்'' என்கிறான் இன்னொரு தேங்காய் ஜாக்கி பாலசுப்ரமணியன்.

போர்க்காய் !

போட்டி ஆரம்பித்தது. கஜபதிதான் முதலில் களம் இறங்கினான். ''யார் என்கூட மோத வர்றீங்க?'' என்று அவன் கேட்டதும். ''நான் வர்றேன்'' என்று பாலசுப்ரமணியன் உள்ளே குதித்தான்.

உடனே இருவரையும் சுற்றி மற்றவர்கள் நின்றுகொண்டார்கள். இருவருக்குமான இடைவெளி மூன்று அடி தூரம். ஒரு காலை முன்னேவைத்து இருவரும் குனிந்து, தங்கள் கையில் இருந்த தேங்காயை மோதுவதுபோல் ஒத்திகை பார்த்தார்கள். பிறகு, சற்றுப் பின்னோக்கி நகர்ந்து தம்மை நிலைப் படுத்திக்கொண்டார்கள்.

''ரெடி'' என்று ஒரு சிறுமி உரத்துச் சொன்னதும், இருவரும் கையைத் தரையில்படுமாறு வைத்து, பலம்கொண்டமட்டும் முன்னோக்கித் தங்கள் தேங்காயை வீசினார்கள். ஒரே மோதலில் உடைந்தது கஜபதியின் தேங்காய்.  

''ஹேய்ய்ய்ய்ய்ய்ய்'' என்று கூட்டம் ஆர்ப்பரித்தது.வெற்றிபெற்ற பாலசுப்ரமணியன், ''அடுத்து யாருடா மோத வர்றீங்க?'' என்று கேட்டான்.

அவனிடம் மோதக் களம் இறங்கினான் அகிலன். நான்கு முறை மோதியும் இருவரின் தேங்காய்களும் உடையவில்லை. ஆனாலும் இடைவெளிகொடுத்து அடுத்தடுத்து மோதிக்கொண்டே இருந்தார்கள். பத்தாவது மோதலில் உடைந்தது பாலசுப்ரமணியனின் தேங்காய். அகிலன் வெற்றியுடன் தனது தேங்காயை உயர்த்திக் காட்டினான். கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.

''பசங்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை நாங்க'' என்பது போல் சிறுமிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க கோதாவில் இறங்கினார்கள். பிரீத்தி, ஜோதிகா, ஸ்வேதா, நந்தினி எனப் பல தேங்காய் ஜாக்கிகள் அதகளம் செய்தார்கள்.

சிறுமிகளில் அதிகம் தேங்காய்களை உடைத்துச் சாம்பியன் பட்டம் வென்றாள் அர்ச்சனா.

போர்க்காய் !

''இதுவும் நம் மண்ணின் பாரம்பரியமான வீர விளையாட்டுதான் அங்கிள். ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை அளவுக்கு இது பிரபலம் ஆகலை. அப்படி இதையும் பெரிய விளையாட்டாக எல்லா ஊர்களிலும் நடத்தணும் அங்கிள்'' என்றான் கஜபதி.

நோட் பண்ணுங்க நண்பர்களே. அடுத்தப் பொங்கலுக்கு உங்க ஊரில் களம் இறங்குங்க!