Election bannerElection banner
Published:Updated:

சிலைகள் சொல்லும் இந்தியக் கிராமங்கள் !

க.பிரபாகரன்

##~##

'கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்றார் காந்தியடிகள். நம் இந்தியக் கலாசாரத்தை அழியவிடாமல் காத்து, அடுத்தடுத்த  தலைமுறைகளுக்குப் நம்முடைய கிராமங்களின் அருமை பெருமைகளை எடுத்துச்சொல்ல ஆரம்பிக்கப்பட்டதுதான் 'சித்தகிரி கிராம்ஜீவன்’ (Siddhagiri Gramjivan)எனும் அட்டகாசமான அருங்காட்சியகம்.

மகாராஷ்டிரா மாநிலம், கோல்ஹாபூர் அருகில் கனேரி (Kaneri)என்னும் இடத்தில் 800 ஆண்டுகள் பழமைக்கும், பெருமைக்கும் பெயர்பெற்ற  சித்தகிரி மடத்தைச் சேர்ந்தவர்களால் 2007-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது, இதர அருங்காட்சியகங்களைப் போல் அரங்கங்களில் இல்லாமல் திறந்தவெளியில், எழில் கொஞ்சும் கிராமத்தின் பசுமையான வயல்வெளிகளையும், பழமையான வீடுகளையும் மட்டுமே பின்புலமாகக்கொண்டு, பார்ப்பதற்குப் பிரமிப்பூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

சிலைகள் சொல்லும் இந்தியக் கிராமங்கள் !

விவசாயம், தறி நெய்தல், கூடை பின்னுதல், கல் உடைத்தல், சவரம் செய்தல், மீன் பிடித்தல், மாடு மேய்த்தல் போன்ற நம்முடைய கிராமத்து மண்வாசனையைச் சொல்லும் சிலைகள், கூட்டுக் குடும்பங்களின் பெருமையைச் சொல்லும் சிலைகள், இயற்கையோடு இணைந்த இன்பமான வாழ்க்கையை விவரிக்கும் சிலைகள், மாடுகளைப் பூட்டி ஏர் உழும் விவசாயிகளின் முகத்தில் தவழும் மாசில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதவிதமான சிலைகள் என நம் கண்களை விரியவைக்கின்றன.

சிலைகள் சொல்லும் இந்தியக் கிராமங்கள் !

மெல்லிய வலைத்துணி, பாறைக் கற்கள், சிமென்ட், உயர்தரமான பெயின்ட் ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகத்தில் 1,000 வருட வரலாற்றுச் சிறப்பைக்கொண்ட சிவ வழிபாட்டுத் தலங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு.

சிலைகள் சொல்லும் இந்தியக் கிராமங்கள் !

இப்படி 3,000 கலைநயம் மிக்க சிலைகளைக்கொண்ட இந்த அருங்காட்சியகம், இரண்டரைக் கோடிக்கும் மேலான மதிப்பீட்டில், திறமை வாய்ந்த கலை வல்லுனர்களால், குரு ஆத்ரிஷ்ய கட்ஷிட்தேஷ்வர் என்பவரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அருங்காட்சியகம் இது ஒன்றுதான் உள்ளது.

சிலைகள் சொல்லும் இந்தியக் கிராமங்கள் !

வெயில், மழை போன்ற எந்தக் காலத்திலும் சிதைந்துபோகாமல் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருகின்றன. நிலைத்து நிற்கப்போவது இந்தச் சிலைகள் மட்டும் இல்லை, நம் இந்திய மண்ணின் கலாச்சாரமும்தான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு