Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:
##~##

''ஹாய் ஜீபா... கிரேக்க அரசர், அலெக்ஸாண்டர் பெயரை 'அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்று எழுதுவது ஏன்?''

    - க.கிரண்குமார், சென்னை-53.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலெக்ஸாண்டர் கி.மு.356-ம் காலத்தில் கிரேக்கத்தின் மாசிடோன் (Macedon)என்ற பகுதியை ஆட்சி செய்தவர். மாசிடோனின் மூன்றாம் அலெக்ஸாண்டர் என்று அழைக்கப்பட்டவர். தனது 16 வயதில் தொடங்கி 32 வயதுக்குள் உலகின் பல பகுதிகளுக்குப் படையெடுத்து, அந்த நாடுகளில் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர். அத்தனை குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு வெற்றிபெற்ற அரசர் யாரும் கிடையாது. மாவீரன், பேரரசன், சக்கரவர்த்தி போன்ற வார்த்தைகள் எல்லாம் அலெக்ஸாண்டரின் திறமைக்கு முன் சாதாரணமான வார்த்தைகள் என்று வரலாற்று ஆசிரியர்களுக்குத் தோன்றியது. அதனால், அவரது பெயருடன் 'கிரேட்’ சேர்த்தார்கள். கிரேட் என்றால், 'மிகச் சிறந்த’, 'மிக உயர்ந்த’, 'பெருமைக்குரிய’ என்று பொருள்கொள்ளலாம்.''    

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... செயற்கைக்கோளை எந்த ஆண்டு, யார் கண்டுபிடித்தார்கள்?''

   - க.சஞ்சய், பள்ளப்பாளையம்.

''உலகின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பெருமை ரஷ்யாவுக்கே. பல கண்டுபிடிப்புகளைப் போலவே செயற்கைக் கோளுக்கான விதையும் மனிதனின் கற்பனையில்தான் உருவானது. எட்வர்ட் எவரெட் ஹேல் (Edward Everett Hale)என்ற அமெரிக்க எழுத்தாளர், 'தி பிரிக் மூன்’ என்ற பெயரில் 1869-ம் ஆண்டு ஒரு தொடர்கதை எழுதினார். அதில் விண்வெளிக்குச் சென்று ஆராய்ச்சி செய்யும் செயற்கைக்கோள் வந்தது. அந்தக் கற்பனையை நிஜம் ஆக்க நினைத்தார், கோன்ஸ்டாண்டின் என்ற ரஷ்ய விஞ்ஞானி. ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை விண்வெளிக்குச் செலுத்த முடியும் என்று, 1903-ல் ஓர் ஆய்வு நூலை எழுதினார். அதை அடிப்படையாகக்கொண்டு செர்கி கொரோலெவ் (Sergei Korolev) என்பவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு, ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியது. அக்டோபர் 4, 1957-ல் விண்வெளியில் செலுத்தப்பட்டு, ஓர் எழுத்தாளரின் கற்பனையை நிஜம் ஆக்கியது.''

''ஹாய் ஜீபா... முதன் முதலில் பம்பரம் விளையாட்டு எங்கே தோன்றியது?''

    - வி.நித்யா, அரியலூர்.

மை டியர் ஜீபா !

''சுட்டிகளுக்கு மிகவும் பிடித்த, பம்பரம் தோன்றிய இடத்துக்கான சரியான ஆதாரங்கள் இல்லை நித்யா. ஏனெனில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பம்பரங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ராமாயணத்தில்கூட பம்பரம் விளையாட்டு பற்றிய குறிப்புகள் உள்ளன. ஜப்பானியர்களின் பம்பரங்கள் அவ்வளவு அழகாக கலைநயத்துடன் இருக்கும். இப்போதும் பல நாடுகளில் ஆண்டுதோறும் பம்பர விளையாட்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நமது இந்தியாவில்தான் இந்த விளையாட்டு அழியும் நிலைக்குச் சென்றுகொண்டு இருக்கிறது.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... உலகிலேயே சைக்கிளை அதிகமாக உபயோகிப்பவர்கள் யார்?''

    - கோ.பிரவீன், காஞ்சிபுரம்.

''எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால், சீனர்கள்தான் அதிகமாக சைக்கிளை உபயோகிக்கிறார்கள். 130 கோடி சீன மக்கள்தொகையில் 50 கோடிப் பேர்களிடம் சைக்கிள் இருக்கின்றது. அதே நேரம் சதவிகித அடிப்படையில் முதல் இடம் வகிப்பவர்கள், நெதர்லாந்து மக்கள். அங்கே மக்கள்தொகை, 1 கோடியே 70 லட்சம். அதில் சைக்கிள் உபயோகிப்பவர்கள் 1 கோடியே 65 லட்சம். அதாவது, 99 சதவிகித மக்களிடம் சைக்கிள் இருக்கிறது. இன்னொரு கொசுறுத் தகவலும் சொல்லட்டுமா பிரவீன்? உலகில் சுமார் 100 கோடி சைக்கிள்கள் உள்ளன. ஆண்டுதோறும் 10 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன. சைக்கிள் பயணம் ஜாலியாகவும் இருக்கும், உடம்புக்கும் ஆரோக்கியம் தரும்.''

''ஹலோ ஜீபா... அதிகம் யோசித்தால் உடல் உறுப்புகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?''

    - எம்.செல்லையா, சாத்தூர்.

''அப்படி எல்லாம் கிடையாது செல்லையா. 'நிறைய யோசித்தால் தலை வழுக்கை ஆகிவிடும்’ என்பது போன்ற உடான்ஸ்தான் இதுவும். அதே நேரம், நமது ஆழ்மனதுக்கும் உடல்நலத்துக்கும்  தொடர்பு இருக்கிறது. எனவே, நமது சிந்தனைகள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக இருப்பது நல்லது. குறிப்பாக, உடல்நலக் குறைவு ஏற்படும் சமயத்தில் பயப்படக் கூடாது. மருந்துடன் சேர்த்து 'இது எனக்குச் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கையையும் உட்கொள்ள வேண்டும். அப்படி ஆக்கப்பூர்வமாக யோசித்தால், வந்த பாதிப்பும் விரைவில் நீங்கிவிடும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism