##~## |
அன்று எங்களுக்குப் பசுமையான ஞாயிற்றுக்கிழமை. சென்னையில் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ள கைத்தண்டலம் என்ற கிராமத்துக்குச் சென்றோம்.
எட்டுத் திக்கிலும் வயல்வெளிகள் சூழ்ந்து இருக்க, 'எழில்சோலை பா.ச.மாசிலாமணி பண்ணை’யில், பசுமை விகடனும் எழில்சோலை அறக்கட்டளையும் இணைந்து நடத்திய, 'மரம் வளர்ப்பு... மாபெரும் கருத்தரங்கு’ தொடங்கியது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்திருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'இது விவசாயிகளுக்கான கருத்தரங்கு நமக்கு எந்த அளவுக்குப் பயன்படும்?’ என்ற சிறிய சந்தேகமும் சில நிமிடங்களில் மாறிவிட்டது.
விவசாயத்தில் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் முதலானவை மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. பின் விளைவுகள் இருந்தாலும், அதை எல்லாம் தவிர்க்க முடியாது என்றுதான் இதுவரை நினைத்து இருந்தோம். ஆனால், அந்தோணிசாமி என்ற விவசாயி தன் அனுபவத்தைச் சொல்லச் சொல்ல ஆச்சர்யத்தில் மூழ்கினோம்.

இயற்கை விவசாயத்தை மட்டுமே பின்பற்றி, இரண்டு ஏக்கரில் இருந்து 400 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர் ஆன அனுபவத்தை விளக்கினார். லாபம் மட்டும் அல்ல... இயற்கை விவசாயத்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. நம் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்பதை உணர முடிந்தது. அவர் வழங்கிய டிப்ஸ், நிச்சயம் அனைத்து விவசாயிகளுக்கும் பயன் உள்ளதாக அமைந்து இருக்கும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார், கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் இருளாண்டி ஆகியோர், மரம் வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகளையும் கிடைக்கும் லாபத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.

கருத்தரங்கு நடந்த வயல்வெளிக்கு அருகில், எழில்சோலை என்ற பெயரில் ஒரு தோட்டம் இருந்தது. 320 வகையான மரங்கள், செடிகளை ஒரே இடத்தில் கண்டபோது, எங்கள் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
அதே இடத்தில் கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் இருளாண்டியுடன் உரையாடினோம். ''நீங்கள் வீட்டில் இருந்தபடியே வனத்தைப் பாதுகாக்க முடியும். மின் சேமிப்பு, மோட்டார் வாகனங்களைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் புவி வெப்பம் அடைவதைத் தடுக்கலாம். அதனால், காடுகளும் பாதிப்புக்கு உள்ளாவதைக் குறைக்க முடியும்'' என்றார்.
பிறகு, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு பேசினோம். ''நீங்கள் எல்லாம் மரம் வளர்க்கக் கூடாது...'' என்று அவர் சொல்லத் தொடங்கியதும் அதிர்ச்சி அடைந்தோம். கொஞ்சம் இடைவெளிவிட்டு சிரிப்புடன் ''மரம் வளர்க்காதீங்க... காடு வளர்க்கணும். அப்பதான் நம்ம பூமியைக் காப்பாத்த முடியும்'' என்றார்.
''நிச்சயம் வளர்ப்போம் தாத்தா!'' என்றோம் கோரஸாக!
