Published:Updated:

எங்கள் நண்பன் ஹரிதாஸ் !

கே.யுவராஜன் படங்கள் : சித்தார்த்

எங்கள் நண்பன் ஹரிதாஸ் !

கே.யுவராஜன் படங்கள் : சித்தார்த்

Published:Updated:
##~##

'' 'ஹரிதாஸ்’ படம் பார்த்தியாடா? அந்தப் பையன் நடிப்பில் பின்னி இருக்கான்.''

'' 'அவன் நிஜமாவே ஆட்டிஸம் பையனா இருக்கலாம்’னு என் அப்பா சொன்னார்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது, 'ஹரிதாஸ்’ படத்தைப் பார்த்த இரண்டு சுட்டிகளுக்கு இடையே நடந்த உரையாடல். இப்போது பள்ளிகளில் லஞ்ச் டைம் பேச்சாக இருப்பது 'ஹரிதாஸ்’தான். ஆட்டிஸம் பாதித்து, சரியாக நடக்கவும் தெரியாத ஹரிதாஸ் என்ற சிறுவன், தனது அப்பாவின் ஊக்கத்தால், சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் இடம் பிடிக்கும் கதை. யார் இந்த ஹரி?

''நான்தான் அங்கிள். ஆனால், உண்மையான ஹரியும் இருக்கான். டைரக்டர் குமரவேலன் அங்கிள் அவனை எனக்கு அறிமுகம் செய்தார். இப்போ, நாங்க ஃப்ரெண்ட்ஸ். என்னோட பெயர், ப்ருத்வி ராஜ்தாஸ். கோயம்புத்தூர், இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் ஏழாம் வகுப்புப் படிக்கிறேன். என் வீட்டுக்கு அக்கம் பக்கம் இருக்கிறவங்களும் அப்பா, அம்மாவுக்குத் தெரிஞ்சவங்களுமே இந்தப் படத்தைப் பார்த்துட்டு, 'உங்க பையனுக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கா? எங்களுக்குத் தெரியாதே’னு அனுதாபத்தோடு பேசுறாங்க. அது வெறும் நடிப்புனு அவங்களுக்கு விளக்கம் சொல்றது பார்ட் டைம் வேலையா இருக்கு'' என்று சிரிப்புடன் சொல்கிறார் ப்ருத்வி.

எங்கள் நண்பன் ஹரிதாஸ் !

''சூர்யா, விஜய், சிம்பு, ஜாக்கி சான் எனக்கு ரொம்பவும் பிடிச்ச ஹீரோக்கள். ஸ்கூல் டிராமாவில் நடிக்கப் பெயர் கொடுக்கிற முதல் ஆள் நான்தான். ஆனாலும் 'ஹரிதாஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சதும் பயமா இருந்துச்சு. டைரக்டர் அங்கிள், 'நீ ரிலாக்ஸா பண்ணு ப்ருத்வி. உன்னால் முடியும்’னு சொன்னார். நல்லா நடிச்சு இருக்கேனா அங்கிள்?'' என்று கேட்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஆட்டிஸம் சுட்டிகளின் சிறப்புப் பள்ளிக்குச் சென்று, அவர்களுடன் 10 நாட்கள் இருந்திருக்கிறார் ப்ருத்வி. ''முதல் மூணு நாள் அங்கே இருக்கிறதுக்கு ரொம்பப் போர் அடிச்சது. அப்புறம் அவங்களை நல்லாக் கவனிக்க ஆரம்பிச்சேன். அவங்களோட திறமைகள், சந்தோஷங்கள், பிரச்னைகள் எல்லாம் தெரிஞ்சது. ஆட்டிஸத்துக்குப் பயிற்சிகொடுக்கும் டாக்டர்கிட்டேயும் பேசினேன். சராசரியா 88 சுட்டிகளில் ஒருத்தருக்கு ஆட்டிஸம் பாதிப்பு வருதாம். இந்த மாதிரியான ஒரு சுட்டியின் மனசைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்ககிட்டே நட்புடன் நடந்துக்கிட்டாப் போதும். அவங்களாலும் சாதிக்க முடியும் அங்கிள்'' என்கிறார் ப்ருத்வி.

சரி, இந்தப் படத்தைப் பார்த்த ப்ருத்வியின் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?

எங்கள் நண்பன் ஹரிதாஸ் !

''இந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடியே ப்ருத்வி ஸ்கூல் ஹீரோதான். படிக்கிறதிலும் அரட்டை அடிக்கிறதிலும் எப்பவும் முன்னாடி இருப்பான். கிரிக்கெட், ஃபுட்பால், பேஸ்கட் பால், அத்லெடிக்னு எதையும் விட்டுவைக்க மாட்டான். லீவு நாளில் நாங்க  கிரவுண்டில்தான் இருப்போம். 'ஹரிதாஸ்’ படத்தில் சில்ரன் மாரத்தான் போட்டியில் ஜெயிக்கிற மாதிரி காட்சி வரும்போது, மொத்த தியேட்டரும் கை தட்டுச்சு. ஆனா, இந்த மாதிரி கிளாப்ஸை நாங்க நிஜத்திலேயே பல முறை செய்திருக்கோம்'' என்கிறார்கள் உற்சாகத்துடன்.

''இவங்க சொல்றதை நம்பாதீங்க அங்கிள். படம் வந்த புதுசுல, 'ம்... இன்னும் கொஞ்ச நாளில் பெரிய ஹீரோ ஆகிருவே. எங்களை எல்லாம் கண்டுக்கவே மாட்டே. அதனால், இப்பவே கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணிப்போம்’னு ஓவரா ஓட்டினாங்க'' என்று செல்லக் கோபத்துடன் ப்ருத்வி சொல்ல, ''அது சும்மா. இவனை நண்பன்னு சொல்லிக்க நாங்க ரொம்பப் பெருமைப்படுறோம்'' என்கிறார்கள்.

''என்னை ஊக்கப்படுத்தின அப்பா, அம்மா, நம்பிக்கை கொடுத்த டைரக்டர், விஷயத்தைக் கேள்விப்பட்டு, 'நல்லா நடி’ எனச் சொன்ன உறவினர்கள் எல்லோருக்கும் இந்தப் பெருமையில் பங்கு இருக்கு. எல்லாத்துக்கும் மேலே ஸ்கூலுக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஷூட்டிங்குக்காக அடிக்கடி லீவு போடுவேன். அப்போ என்னோட டீச்சர்ஸ், பிரின்ஸிபால் எல்லோரும் ஊக்கப்படுத்தினாங்க. அவங்களுக்கு நன்றி. படத்தைப் பார்த்துப் பாராட்டினவங் களுக்கும் நன்றி'' என்று ப்ருத்வி சொல்ல...

''இத்துடன் ப்ருத்வியின் நன்றியுரை முடிகிறது'' என்று கோரஸாகச் சொல்லிச் சிரித்தார்கள் நண்பர்கள்.