Published:Updated:

அஹாரிகா என்னும் அதிசயம் !

க.பிரபாகரன் அட்டை, படங்கள்: பா.கார்த்திக்

அஹாரிகா என்னும் அதிசயம் !

க.பிரபாகரன் அட்டை, படங்கள்: பா.கார்த்திக்

Published:Updated:
##~##

மதில்சுவரில் சாய்ந்தபடி கையில் பூக்கூடையுடன் யாரையோ எதிர்பார்க்கும் பெண்... அந்தக் காலத்துப் புகைவண்டி... ஜப்பானின் அழகிய கலாசாரம், வானில் உருவான வண்ண தேவதை என்று திரும்பிய பக்கமெல்லாம் தூரிகைத் தோரணங்கள். எண்ண முடியாத பரிசுகள், பதக்கங்கள் என வீட்டை ஒரு கலைக்கூடமாக மாற்றி இருக்கிறார் அஹாரிகா.

அஹாரிகா என்னும் அதிசயம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் அஹாரிகா, ஒரு சகலகலாவல்லி. ஓவியம், பரதநாட்டியம், மோகினியாட்டம், புகைப்படக்கலை, பாட்டு என அனைத்திலும் ஜொலிக்கிறார். பேச்சிலோ அப்படி ஓர் அடக்கம்.

''சின்ன வயசில் எந்த நேரமும் சுவரில் கிறுக்குவதைப் பார்த்துத் திட்டாமல், ஓவிய வகுப்புக்கு அனுப்பின பெற்றோருக்கும் ஓவிய நுணுக்கங்களைச் சொல்லித்தந்த ராஜேந்திரன் மாஸ்டரும்தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரங்க'' என்கிறார்.

‘Let the world be in the hand of Nature’ என்கிற தலைப்பில் அஹாரிகா வரைந்த ஓவியம், தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்தது. முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கையால் பரிசைப் பெற்றார். ஓவியத்துக்காக கலா ரத்னா விருது, 2010-ல் போகோ சேனலின் 'போகோ அமேஸிங் கிட்ஸ்’ விருது, தேசிய அளவிலான பல விருதுகள் என ஓவியத்தில் இவரின் சாதனைப் பட்டியல் நீள்கிறது. தன் நாட்டியத் திறமையால், 'ஜெயமாலிகா’, 'நாட்டிய கலா ரத்னா’, 'யுவ நிருத்ய ஜோதி’ போன்ற பட்டங்களுக்கும் பெற்று இருக்கிறார்.

''ஆரம்பத்தில் நான் வரையும் ஓவியங்களை ஒரு கோடுகூட மாறாமல் நகல் எடுத்த மாதிரி வரைவது அஹாரிகாவின் ஸ்பெஷல். அது என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. இப்போதும் ஓவியர் இளையராஜா உட்பட பலப் பிரபலமானவர்களின் ஓவியங்களை அப்படியே வரைவாள். அவளுக்கென தனி ஸ்டைலை உருவாக்கி இருக்கிறாள். ஓவியங்கள் மூலமாக சமூக விஷயங்களையும் அழகாக வெளிப்படுத்துவதில் அஹாரிகா திறமைசாலி.'' என்கிறார் ராஜேந்திரன்.

அஹாரிகா என்னும் அதிசயம் !

உலகத்தில் உள்ள தலைசிறந்த ஓவியர்களின் படைப்புகளை சேகரிக்கும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சாமுவேல் என்கிற ஓவியர், அஹாரிகாவின் படைப்புகளையும் வாங்கி இருக்கிறார். 'சிறந்த ஓவியங்களுக்கு மட்டுமே என்னுடைய மியூசியத்தில் இடம். அதில் உன்னுடைய படைப்புகளை வைப்பதால், எனது மியூசியத்துக்குப் பெருமை வரும் என நம்புகிறேன்’ என்று சொன்னாராம்.

கலைகளில் அசத்தும் அஹாரிகா, படிப்பிலும் நம்பர் ஒன். தான் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஸ்காலர்ஷிப் பெறும் ஒரே மாணவி அஹாரிகா. கலைத் துறையில் சிறந்து விளங்கும் பள்ளிச் சிறார்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சி.சி.ஆர்.டி (Centre for Cultural Resources and Training) ஸ்காலர்ஷிப்பையும் எட்டாம் வகுப்பில் இருந்து பெற்று வருகிறார். நேரம் கிடைக்கும்போது வீணை வாசிக்கவும் பயிற்சி எடுக்கிறாராம்.

''எனக்கு ஓவியம் ஒரு கண் என்றால், பரதம் மற்றொரு கண். எதிலும் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி எல்லாம் கிடையாது. அழகான நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் முயற்சியும் மட்டுமே. அதனால், வெற்றி தோல்விகளைப் பெரிதாகப் பார்ப்பது இல்லை. ஆனாலும் ஒரு சின்ன ஆசை. ஓவியம் என்றதுமே நமது மூளை பிகாசோவை நினைக்கும். அந்த லிஸ்ட்டில் அடுத்து அஹாரிகாவை எல்லோரும் நினைக்கணும்'' என்கிறார் புன்சிரிப்புடன்.