Published:Updated:

சுட்டிகள் சென்ற கோட்டை உலா !

மா.நந்தினி, படங்கள் : கே.குணசீலன்

சுட்டிகள் சென்ற கோட்டை உலா !

மா.நந்தினி, படங்கள் : கே.குணசீலன்

Published:Updated:
##~##

''பரீட்சைக்கு முன்னாடி நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வெளியே போய் வருவோமே. ஜாலியாகவும் இருக்கணும், யூஸ்ஃபுல்லாகவும் இருக்கணும்'' என்றார்கள், நாகை மாவட்டம் பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.

அவர்கள் சென்றது 16-ம் நூற்றாண்டில் தலைசிறந்த வணிகத்தளமாக விளங்கிய தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோட்டையின் நுழைவு வாயிலை அடைந்ததும், ''இவ்வளவு பெரிய கதவை நான் பார்த்ததே இல்லைடா'' என்று வாயைப் பிளந்தான் பாலாஜி.

''உள்ளே பெரிய பெரிய திமிங்கிலங்கள் இருக்காம்டா. அதை எப்பிடியாவது பார்த்துடணும்'' என்றான் நவீன்.

கோட்டையின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கௌதமன் மாணவர்களை நலம் விசாரித்தார். பிறகு, ''உங்களை மாதிரி பள்ளிக் குழந்தைகளிடம் இந்தக் கோட்டையைப் பற்றி சொல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார்.

''இப்போதைய தரங்கம்பாடியின் பழைய பெயர், சடங்கன்பாடி. 1,600 முதல் 1,634 வரை சோழ நாட்டை ஆண்டு வந்த ரகுநாத நாயக்கர், வணிகத்தைப் பெருகுவதற்காக 1620-ல் 'டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி’ என்ற நிறுவனத்துக்கு இங்கே இடம் வழங்கினார்'' என்றார்.

சுட்டிகள் சென்ற கோட்டை உலா !

''அவர்கள் ஏன் நம் நாட்டில் வணிகம் செய்ய வேண்டும்?'' என்று வைஷ்ணவி கேட்க, ''நம் நாட்டின் வாசனைத் திரவியங்கள் மற்றும் மிளகு, ஏலக்காய், யானைத் தந்தம் போன்றவற்றைக் கடல் வழியே அவர்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொள்ளத்தான்.'' என்றார்.

'இந்தக் கோட்டையைக் கட்டியவர் யார்?'' என்று தெபோரா கேட்க, ''இதுகூடத் தெரியாதா? கொத்தனார்தான்'' என்று  கலாய்த்தான் ஜெரோம்.

ஜாலியான வாக்குவாதத்தில் இருந்து ரூட் மாறிய கௌதமன், ''இந்தக் கோட்டை 1620-ல் டேனிஷ் கடற்படைத் தளபதியான ஓவ் கிட் என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையின் ஒருபுற நிழல் கப்பலின் வடிவத்தில் இருக்கும்'' என்றதும், மாணவர்கள் தரையில் கப்பல் வடிவ நிழலைத் தேடினார்கள்.

சுட்டிகள் சென்ற கோட்டை உலா !

''இந்தப் பீரங்கிகள் எதற்கு அங்கிள்?'' என்று விஷ்ணுப்ரியா கேட்டாள். ''இந்தப் பீரங்கியின் மூலம் கடல் வழியாக வரும் எதிரிகளை 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்போதே தாக்கலாம். இதற்குப் பயன்படுத்திய குண்டுகள் உள்ளே இருக்கின்றன. வாங்க பார்க்கலாம்'' என்று அழைத்துச் சென்றார்.

அதைப் பார்த்துவிட்டு திமிங்கிலத்தின் எலும்பு இருந்த பகுதிக்குச் சென்றனர். தனித்தனியாகப் பிரித்துவைக்கப்பட்டு இருந்த எலும்புகளைப் பார்த்த அஜய், ''ஏன் அங்கிள் திமிங்கிலத்தை உடைச்சீங்க?'' என்று கேட்டான்.

''தம்பி, இதை நான் உடைக்கலை. கடலில் இருந்து துண்டுத் துண்டாகக் கிடைத்ததைத்தான் மக்கள் பார்வைக்காக வைத்து இருக்கிறோம்'' என்றார்.

சுட்டிகள் சென்ற கோட்டை உலா !

அடுத்து அவர்கள் சென்றது பழங்கால நாணயங்கள் இருந்த பகுதிக்கு. ''டேனிஷ்காரர்கள் பயன்படுத்திய நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்று எங்கள் வீட்டிலும் பழமையான நாணயங்கள் சில இருக்கு. அது எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிஞ்சுக்க முடியுமா அங்கிள்?'' என்று நாகம்மை கேட்டாள்.

''ஓ... தொல்லியல் துறை மூலம் நிச்சயம் தெரிஞ்சுக்கலாம். அதோடு, நீ விருப்பப்பட்டால் அவற்றை எல்லாரும் பார்த்துப் பயன் பெற, இங்கே காட்சிக்கும் வைக்கலாம்'' என்றார்.

''இங்கே முதுமக்கள் தாழி இருப்பதாகச் சொன்னார்கள். அதைப் பார்க்க முடியுமா அங்கிள்?'' என்று ஸ்வேதா கேட்டாள்.

''பார்க்கலாம்... ஆனால், பழமையான அந்தத் தாழி மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் இருக்கு. பலர் அதைத் தொட்டுப் பார்த்துச் செல்வதால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, அதற்கு தனி கண்ணாடி ஷெல்ஃப் தயார் செய்து இருக்கிறோம்.'' என்றார்.

சுட்டிகள் சென்ற கோட்டை உலா !

அந்த முதுமக்கள் தாழியை அனைவரும் பார்த்தார்கள். ''உண்மைதான். இப்படி சேதமாகி இருக்கே. இங்கே உள்ள பொருட்களை சேதப்படுத்துபவர்களுக்கு ஃபைன் வாங்கலாம்ல அங்கிள்?'' என்று ஐடியா கொடுத்தாள் அனுஷா.

''கொடுக்கலாமே. தொல்பொருள் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 29-ன் படி இங்கே உள்ள பொருட்களுக்கு சேதம் மற்றும் அழிவு செய்பவர்களுக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் வழங்கப்படும். சில நேரங்களில் தவறைப் பொருத்து இரண்டும் விதிக்கப்படும்'' என்றார்.

பிறகு கோட்டையின் கீழ்ப் பகுதிக்கு வந்தார்கள். ''இங்கே ஏன் சிறுசிறு அறைகளாக இருக்கு?'' என்று நூருல் ஃபர்ஜின் கேட்டாள்.

''அப்போது கோட்டையை இரண்டு பகுதிகளாகப் பயன்படுத்தி உள்ளனர். கீழே மதில் சுவரை ஒட்டிய அறைகள் கிடங்கு, சிறைச்சாலை மற்றும் ஓய்வு அறைகளாகவும், மேலே கவர்னர் மற்றும் பாதிரியார்கள் தங்கும் பகுதியாகவும் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.'' என்றார் கௌதமன்.

எல்லா இடங்களையும் பார்த்துமுடித்ததும் ''டேனிஷ் கோட்டையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நாங்கள் தெரிஞ்சுக்கிட்டோம். ரொம்ப நன்றி அங்கிள். இப்போது கொஞ்ச நேரத்துக்கு இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இந்தக் கோட்டையின் சிறப்புகளை நாங்களே சொல்லலாமா அங்கிள்'' என்று  ஆர்வத்துடன் கேட்டார்கள்.

கௌதமன் சந்தோஷத்துடன் சம்மதித்தார். சிறிது நேரத்தில், தொல்லியல் துறை கைடுகளாகவே மாறிவிட்டார்கள் மாணவர்கள்.