தொடர்கள்
Published:Updated:

கீபோர்டு குயின் !

கவிமணி, படங்கள் : எஸ்.நாகராஜ்

##~##

'கிரேடு 8 கீபோர்டு ப்ராக்டிகல் தேர்வில் தேர்ச்சிபெற்ற உலகின் இளம் சிறுமி’ என்ற மகுடத்துடன் வலம் வருகிறார், சென்னை - அம்பத்தூரைச் சேர்ந்த 11 வயது சுட்டி ரபேகா.

வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் ரபேகாவுக்கு, அண்மையில் இந்தச் சாதனைக்கான சான்றிதழை, ஹாங்காங்கில் உள்ள வேர்ல்டு ரெக்கார்ட் அசோசியேஷன் வழங்கி இருக்கிறது.

''மூன்றரை வயதிலிருந்து கீபோர்டு கத்துக்கிறேன். ஆரம்பத்தில் அப்பாதான் சொல்லிக்கொடுத்தார். அப்பவே 20 நிமிடங்களுக்குத் தொடர்ந்து வாசிப்பேன்.'' என்கிறார் ரபேகா.

சென்னையில் 'டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் மியூசிக்’ அகாடமி, கீபோர்டு கிரேடு தேர்வு நடத்துவார்கள். அதில் நான்கு வயதிலேயே கிரேடு ஒன் எழுத்துத் தேர்வு எழுதி இருக்கிறார் ரபேகா.

''ஆனால், அதில் நான் பாஸ் ஆகலை. அப்புறம், அடுத்த இரண்டு முயற்சிகளும் தோல்வியில்தான் முடிஞ்சது. மனம் தளராமல் அமர்நாத் என்ற மாஸ்டர்கிட்ட தீவிரமாகக் கத்துக்கிட்டேன். கிரேடு ஃபோர் தேர்வில் 73 சதவிகித மார்க் எடுத்துப் பாஸ் பண்ணினேன். நான் எக்ஸாம் எழுதப் போனபோது, என்கூட எழுதினவங்க எல்லோரும் வயசில் ரொம்பப் பெரியவங்க. கிரேடு ஃபோருக்கு அப்புறம் நேரா கிரேடு சிக்ஸுக்குப் பயிற்சி எடுத்துத் தேர்வு எழுதினேன். அதில் 75 சதவிகித மதிப்பெண்கள். எட்டு வயசிலேயே கிரேடு 6  முடிச்சதுக்காகப் பாராட்டி, 'டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் லண்டன்’ மூலமா 'ஜேக்கப் ஜான்’ நினைவுப் பரிசு கிடைச்சது.'' என்கிறார்.

கீபோர்டு குயின் !

அதன் பிறகு, ஆல்ஃபின் என்ற மாஸ்டரிடம் கிரேடு ஏழுக்காக பயிற்சி. அதையும் முடித்து, 11 வயதில் 'கிரேடு 8’ தேர்வு எழுதி, அதில் 73 சதவிகித மதிப்பெண்களுடன் சாதனை.

கீபோர்டு குயின் !

ரபேகாவின் இந்தச் சாதனை கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த வகை சாதனைக்கான வயது வரம்பு சென்ற ஆண்டு நீக்கப்பட்டதால், பங்கேற்புக்கான சான்றிதழ் மட்டுமே கிடைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, ஹாங்காங்கில் உள்ள வேர்ல்டு ரெக்கார்ட் அசோசியேஷனில் ரபேகா தனது சாதனையைப் பதிவு செய்து சான்றிதழைப் பெற்றார்.

மறக்க முடியாத இந்தப் பாராட்டு பற்றிப் பேசியவர், ''எனக்கு மியூஸிக் டைரக்டர் இளையராஜா அங்கிளை ரொம்பப் பிடிக்கும். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைச்சது. என்னைப் பாராட்டி வாழ்த்தினார். சின்ன வயதில் சாதனை செய்ததற்கான சான்றிதழ் கொடுத்தார். அது எனக்கு ரொம்பப் பெருமை'' என்றார்.

கீபோர்டு குயின் !

கீபோர்டு எழுத்துத் தேர்வில் உள்ள அடுத்த கட்டங்களை முடிப்பதற்குத் தயாராகிவரும் இந்த இசைச் சுட்டிக்கு, சொந்தமாக ஓர் இசைக் குழுவை உருவாக்குவது தான் லட்சியமாம்.

''நான் இந்த அளவுக்கு சாதனை செய்ததற்குக் காரணம், என் அப்பாவும் அம்மாவும்தான். நான் படிக்கிற வேலம்மாள் ஸ்கூல் சி.இ.ஓ. வேல்முருகன் சாருக்கும் நன்றியைச் சொல்லணும். அவங்க இவ்வளவு தூரம் எனக்கு அனுமதி கொடுத்து ஊக்கம் கொடுக்கலைன்னா, நான் இந்தச் சாதனையைச் செய்திருக்க முடியாது.

நான் கொஞ்சம் பெரியவளா ஆனதும் இசைக் குழு ஒன்றை உருவாக்குவேன். அதன் மூலமாக மியூஸிக் ஸ்கூல் தொடங்கி, ஆர்வமான ஏழைச் சுட்டிகளுக்கு மியூஸிக் கத்துத் தருவேன். அப்புறம், 25 வயசுக்குள்ளே மியூசிக் டைரக்டர் ஆகணும்'' என்று அடுக்குகிறார்.

இந்த கீபோர்டு குயினின் கண்களில் நம்பிக்கை மிளிர்கிறது.