Published:Updated:

74.30 மணி நேரம்..1,339 கிலோ மீட்டர்கள்....

சாதனைப் பயணத்தில் மூன்று முகங்கள் !நா.இள.அறவாழி படங்கள் : எஸ்.தேவராஜன்

74.30 மணி நேரம்..1,339 கிலோ மீட்டர்கள்....

சாதனைப் பயணத்தில் மூன்று முகங்கள் !நா.இள.அறவாழி படங்கள் : எஸ்.தேவராஜன்

Published:Updated:
##~##

'மனதில் உறுதி இருந்தால் வானத்தையும் கைகளால் தொடலாம். மலையையும் புரட்டலாம்’ என்பார்கள். புதுச்சேரி மாணவிகள் மூன்று பேர் செய்தது அது போன்ற ஒரு சாதனைதான்.

புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவிகள் எஸ்.தமிழரசி, மதிவதனா, வி.தமிழரசி ஆகிய மூன்று பேரும் 1,339 கிலோ மீட்டர் தூரத்தை 74 மணி 30 நிமிடங்கள் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.

நம் நாட்டில் தற்போது அதிகளவில்  நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். தங்கள் பயணத்தின்போது பல ஊர்களில் பாலியல் வன்கொடுமைகள் பற்றி மக்களிடையே விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நடத்தினார்கள்.

''எங்கள் பள்ளி வாழ்க்கையின் அடையாளமாக ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று மூவரும் நினைத்தோம். அப்போதுதான் இந்த ஊரைச் சேர்ந்த ஜோதிமுருகன் சாரை சந்தித்தோம். தனி ஆளாக அவர் ஒருவரே பல சாதனைகளைச் செய்தவர். எங்களையும் ஊக்குவித்தார். நாங்கள் நன்றாக சைக்கிள் ஓட்டுவோம். அதனால், புதுச்சேரி டு நாகப்பட்டினம் வரை சைக்கிளில் போகலாம் என்று முதலில் நினைத்தோம். அப்புறம், இதை ஏன் ஒரு சாதனையாகச் செய்யலாமே என்று பேசினோம். உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விபுல் ஷர்மா என்பவர் 76 மணி 10 நிமிடங்களில் 1,200 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து இருக்கிறாராம். அவருடைய சாதனையை முறியடிக்க முடிவு செய்தோம்'' என்றார் வி.தமிழரசி.

மதிவதனா தொடர்ந்தார். ''எங்க அப்பா, அம்மாவிடம் 'நாங்க புதுச்சேரி டு கன்னியாகுமரி சைக்கிளில் போகப்போறோம்’னு சொன்னதும் ஆடிப்போயிட்டாங்க. 'இது ரொம்ப ரிஸ்க், வேண்டாம்’னு பயந்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கினோம்'' என்கிறார்.

74.30 மணி நேரம்..1,339 கிலோ மீட்டர்கள்....

இந்தச் சாதனைக்காக மூன்று மாதம்  முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தங்களைத் தயார்படுத்திக்கொண்டார்கள். பிப்ரவரி 7-ம் தேதி ஆரவாரத்துடன் ஊர் மக்கள் வழி அனுப்பிவைத்தனர்.

''கடலூர், சிதம்பரம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்றோம். எந்த ஊருக்குச் சென்றாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றியும் அதை எப்படி எதிர்ப்பது என்றும்  பொதுமக்களிடம் பேசுவோம். ராமநாதபுரத்தில் ஒரு டீக்கடைக்கு வெளியே பெஞ்ச் மீது ஏறி நின்று பிரசாரம் செய்தது மறக்கவே முடியாது'' என்றார் எஸ்.தமிழரசி.

''முதல் நாள் ஒரு மணி நேரம், இரண்டாவது நாள் இரண்டு மணி நேரம், மூன்றாவது நாள் மூன்று மணி நேரம் என ஓய்வு எடுத்தோம். முதல் நாள் இரவு பெட்ரோல் பங்க், இரண்டாவது நாள் இரவு சாலையோரம் எனக் கிடைத்த இடத்தில் தூங்கி எழுந்தோம். மூன்றாவது நாள் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். போகும்போது சுலபமாக இருந்தது. ஆனால், திரும்பி வரும்போது கால்வலி பின்னி எடுத்தது. எதிர்க்காற்றில் சைக்கிளை மிதிக்கவே முடியவில்லை. புதுச்சேரி எல்லைக்கு வந்ததும் ஊர் மக்கள் நல்ல வரவேற்புக் கொடுத்தார்கள். விபுல் ஷர்மாவின் சாதனையை முறியடித்துவிட்டீர்கள் என்று பாராட்டினார்கள்'' எனக் குதூகலமாகச் சொல்கிறார் மதிவதனா.

''சாதனை செய்ய ஆண், பெண் பேதம் கிடையாது. பெண்களால் எதையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட பெண்களையும் பெண் குழந்தைகளையும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்காமல், மதிப்புடன் நடத்த வேண்டும். அப்படி யாராவது ஒருவர் எங்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு அதன்படி நடந்துகொண்டால்  அதுதான் நாங்கள் செய்த இந்தப் பயணத்துக்கான வெற்றி'' என்ற மூவரின் முகங்களிலும் மகிழ்ச்சிப் பெருமிதம்.