தொடர்கள்
Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

##~##

இந்த அதிசய மரங்கள் நிறைந்த வனப் பகுதி, போலந்து நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது. இங்கே சுமார் 400 பைன் மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களும் அடிப் பகுதியில் 90 டிகிரி அளவுக்கு வளைந்து உள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் 1930-ல் பயிரிடப்பட்டன. இவற்றின் வளைந்த தன்மையால், இந்த இடத்தை 'வளைந்த காடு’ (crooked forest) என்று அழைக்கிறார்கள்.

மரங்கள் இப்படி வளைந்த நிலையில் இருப்பதற்கு மண், நுண்ணுயிரிகள், பனி மற்றும் சூரிய வெளிச்சம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று வன ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால், இன்றுவரை இதற்கான உறுதியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பென் டிரைவ் !

உலகப் புகழ்பெற்ற ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை இனி பார்வையாளர்கள் அந்தரத்தில் மிதந்தபடி பார்ப்பதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. 50 மீட்டர் விட்டம்கொண்ட ஹீலியம் வாயு பலூனில் 500 மீட்டர் உயரத்தில் மிதந்தவாறு தாஜ்மஹாலின் வினோத அழகைக் கண்டு மகிழலாம். இப்படி வானில் இருந்து 15 நிமிடம் கண்டுகளிக்க இந்தியர்களுக்கு 500 ரூபாய் கட்டணம். வெளிநாட்டவர்களுக்கு 1,500 ரூபாய். இரவு நேரம் என்றால், நமக்கு 750 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 2,000 ரூபாய் கட்டணம்.

பென் டிரைவ் !

உலகிலேயே அதிகமான மக்கள் தொகைகொண்ட சீனாவில் வாகனங்களும் தொழிற்சாலைகளும் பெருகிவிட்டன. இதனால், அங்கே சுற்றுச்சூழல்  மாசுபட்டுவிட்டது. காற்றில் தூசி அதிகமாகக் கலந்து உள்ளதால், பகல் நேரத்தில்கூடக் குறைவான வெளிச்சம்தான் காணப்படுகிறது.

பீஜிங்கில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் சென் குவாங் பியோ (Sen Kwang Pio) இதை வைத்தே  புது பிசினஸ் ஒன்றினைத் துவக்கி உள்ளார். அதாவது, மக்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், சுத்தமான காற்று அடைக்கப்பட்ட கேன்களை விற்றுவருகிறார். இந்த பிசினெஸ் அறிமுகத்தின்போது முதலில் இலவசமாக வழங்கினார். இப்போது விற்பனை செய்து வருகிறார். ''இதுவரை 80 லட்சம் கேன்கள் விற்றுள்ளது. ஒரு கேனின் விலை 40 ரூபாய்தான்'' என்கிறார் சென் குவாங் பியோ, கேனில் உள்ள சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே.

பென் டிரைவ் !

 செர்பியா நாட்டைச் சேர்ந்தவர் 28 வயது போஜானா டெனிலோவிக். இவர் செய்தித்தாள், புத்தகம், டி.வி., கம்ப்யூட்டர் என எதுவாக இருந்தாலும் தலைகீழாக வைத்துப் பார்க்கிறார். மனிதர்களின் விழித்திரைக்குச் செல்லும் பிம்பம், தலைகீழாகத்தான் தோன்றும். அது மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் தலைகீழ் மாற்றத்துடன் நேர் உருவமாகப் பதிவாகும். ஆனால், போஜானாவின் மூளையில் பதிவாகும் பிம்பங்களின் தலைகீழ் மாறும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், இப்படி தலைகீழாகப் பார்க்கவேண்டி உள்ளது. பிறவியில் இருந்தே இந்தக் குறைபாடு உள்ளதாம். குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும், தனக்கு தலைகீழாகப் பொருத்தப்பட்ட தனி டி.வி.யும்  இருப்பதாகக் கூறுகிறார் போஜானா டெனிலோவிக்.

பென் டிரைவ் !

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் பில் - காரா எல்லோட் என்ற தம்பதி, ஒரு ஜோடி கழுதைகளை வளர்க் கிறார்கள். இதில் ரோமுலஸ் (Romulus) என்ற பெயர்கொண்ட கழுதை கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. அதாவது,  இதுதான் உலகின் உயரமான கழுதை. இதன் உயரம் 5 அடி 8 அங்குலம். இதற்கு முன் கின்னஸ்ஸில் இடம்பெற்றிருந்த ஒக்லஹோமா சாம் என்ற  கழுதையைவிட, 2 இன்ச் உயரம் அதிகம். இதனால், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கெத்தாக வலம் வருகிறது ரோமுலஸ்.

பென் டிரைவ் !

திருக்குறளையும்,  திருவள்ளுவரையும் சிறப்பிக்கும் வகையில் சேலம், மஞ்ஜினி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் பொன்ராசு, ஓர் ஓவியம் உருவாக்கி இருக்கிறார். 1,330 திருக்குறள்களையும் தொடர்ச்சியாக எழுதி, அதில் வள்ளுவரின் உருவத்தை ஓவியமாக உருவாக்கி இருக்கிறார். எளிமையான குடும்பத்தில் பிறந்த பொன்ராசு, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வார காலம் முயற்சிசெய்து இதைச் செய்து இருக்கிறார்.

பென் டிரைவ் !

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சைல் மலைப் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிக்கெட் மைதானம், உலகிலேயே மிக உயரத்தில் இருக்கும் கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,444 மீட்டர் உயர மலை உச்சியில் இருக்கும் இந்த மைதானம், 1893-ம் ஆண்டு பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதை இப்போதும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். மைதானத்தைச் சுற்றிப் பசுமைப் போர்வை போர்த்தியது போல இருக்கிறது. போலோ விளையாட்டு மைதானமாகவும் விளங்கும் இந்த மைதானம், சைல் இராணுவப் பள்ளியின் நிர்வாகத்துக்கு உட்பட்டது.

பென் டிரைவ் !