தொடர்கள்
Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப் கான்

##~##

''ஹாய் ஜீபா... டைனோசர் எந்தக் காலத்தில் தோன்றியது?''

-ப.சந்தோஷ், செய்யாறு.

''இந்த பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது. அப்போது முதல் பூமியில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் பல்வேறு காலங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். குவார்டர்னரி (Quaternary),, நியோஜீன் (Neogene), பாலியோஜீன் (Paleogene), , கிரெடேஷியஸ் (Cretaceous) போன்ற காலங்களுக்கு அடுத்து வருவது ஜூராசிக் காலம். இது 200 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்) ஆண்டுகளுக்கு முந்தையது. அப்போது தோன்றியதுதான் நம்ம டைனோசர். ஜெர்மனி, ஃப்ரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் இருக்கும் ஜூரா (Jura) என்ற மலை, அந்தக் காலகட்டத்தில் தோன்றியதாம். எனவே, அந்தப் பெயரைச் சூட்டினார்கள்.''

''ஹலோ ஜீபா... டிராகன் வாயில் இருந்து எப்படி நெருப்பைக் கக்குகிறது?''

-சரவணன், ஈரோடு

மை டியர் ஜீபா !

''கிரேக்கச் சொல்லில் 'டிரேகொன்’ என்றால், 'பாம்புபோல் நெளியும் பெரிய உருவம்’ என்று பொருள். அது சீனா மற்றும் ஐரோப்பிய நாட்டுப் புராணங்களில் இருக்கும் ஒரு கற்பனைப் பாத்திரமே. தனக்கு மிஞ்சிய பெரும் சக்திகள் இருப்பதாக நினைத்த மனிதன் உருவாக்கிய பல்வேறு வடிவங்களில் ஒன்றுதான் டிராகன். மனிதனின் கற்பனைக்கு எல்லை ஏது? எனவேதான் அது நெருப்பைக் கக்குகிறது. அதே டிராகன், வாயில் இருந்து சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீமை வீசுவதாக ஒரு கதையை உருவாக்கினால், நீ ஒரு குழந்தை எழுத்தாளர் ஆகலாம் சரவணன். முயற்சித்துப் பாரேன்''

''டியர் ஜீபா... ஒரு மூங்கில் மரம் எவ்வளவு ஆண்டுகள் இருக்கும்?''

-எஸ்.யுவன்பிரவீன், கோயம்புத்தூர்

மை டியர் ஜீபா !

''மிக வேகமாக வளரும் தாவரங்களில் முக்கியமானது மூங்கில். ஒரு மூங்கில், நட்ட மூன்றாவது ஆண்டில் தொடங்கி, ஒரு நாளில் 100 சென்டி மீட்டர் என்கிற வீதத்தில் வளர ஆரம்பிக்கும். சராசரியாக 60 அடி உயரம் வளரும். அதாவது, 60 ஆண்டுகள் வாழ்கிற ஒரு மூங்கில் மரம், தன் வளர்ச்சியை முழுமையாக அடைவதற்கு எடுத்துக்கொள்கிற கால அவகாசம் 60 நாட்கள்தான்.''

''டியர் ஜீபா... உலகின் மிகப் பெரிய ராட்டினம் எங்கே உள்ளது?''

-ஆர்.நவீன், நஞ்சகவுண்டர் புதூர்.

மை டியர் ஜீபா !

''சீனாவின் பீஜிங் நகரில் இருக்கும் 'தி கிரேட் பீஜிங் வீல்’ (The great beijing wheel)என்ற ராட்டினம்தான் இப்போதைக்கு உலகின் மிகப் பெரியது. ஆகஸ்ட் 2008-ல் நிறுவப்பட்ட இதன் உயரம் 208 மீட்டர், விட்டம் 198 மீட்டர். 48 பெரிய பெட்டிகள். ஒரு பெட்டியில் 40 பேர் பயணம் செய்யலாம். இதற்கு அடுத்த

மை டியர் ஜீபா !

இரண்டு இடங்களில் இருப்பது சிங்கப்பூரில் இருக்கும் 'தி சிங்கப்பூர் ஃப்ளையர்’ (உயரம் 165 மீட்டர்) மற்றும் சீனாவின் நான்சாங் என்ற இடத்தில் இருக்கும் 'தி ஸ்டார் ஆஃப் நான்சாங்’ (உயரம் 160 மீட்டர்).

''டியர் ஜீபா... 'கொசு பேட்’ யாரால் உருவாக்கப் பட்டது?''

-டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

''அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் ராபர்ட் ஆர். மோன்ட்கோமெரி (Robert R. Montgomery) என்பவர் 1900-ம் ஆண்டில் 'ஃப்ளை கில்லர்’ என்ற பெயரில் இந்தக் கொசு மட்டையை உருவாக்கினார். அதை அவரிடம் இருந்து ஜான் எல்.பென்னட் என்பவர் காப்புரிமை பெற்றார். சில மாற்றங்களுடன் ஃப்ளைஸ்வாட்டர் (Flyswatter) என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்தார். மற்ற கொசு விரட்டிகளைப்போல் நமது உடலுக்குத் தீங்கிழைக்கும் வேதிப்பொருட்கள் எதையும் இது வெளியிடாது என்பது சிறப்பு. என்ன ஒண்ணு, முழிச்சுட்டு இருக்கிற வரைக்கும்தான் இதை உபயோகிக்க முடியும். இல்லேன்னா, வாட்ச்மேன் மாதிரி, ஒருத்தரை வேலைக்குப்போட்டு நம்ம கட்டில் பக்கத்தில் உட்கார வெச்சுக்கணும்.''