Published:Updated:

நெட்டிஸம் - கணக்குப் புலிகளாக மாறுவோம் !

சைபர்சிம்மன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கணக்குப் புலிகளாய் இருப்பவர்களைப் பார்த்துப் பொறாமையாக இருக்கிறதா? பொறாமையை விடுங்கள். கணக்கு  கசப்பவர்களுக்கும் அந்தப் பாடத்தின் மீது விருப்பம் உண்டாக்கவைக்கும் வலைத்தளம் ஒன்று இருக்கிறது. சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கணக்கு அகராதியான 'எ மேத்ஸ் டிக்ஷனரி ஃபார் கிட்ஸ்’ என்பதே அந்தத் தளம்.

அகராதிகளில் பல வகை உண்டு. ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் பார்க்க உதவும் பொதுவான அகராதிகளைத் தவிர, குறிப்பிட்ட துறைகளுக்கான அகராதிகளும் இருக்கின்றன. அந்த வகையில் கணக்குப் பாடத்தின் அடிப்படையான விஷயங்களுக்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது.

கணக்குப் பாடத்தில் ஏதாவது ஒரு பதம் சரியாகப் புரியவில்லை என்றால், அதற்கான அர்த்தத்தை இந்தத் தளத்தில் தேடலாம். அகராதியில் எப்படிப் பொருள் தேடுவோமோ, அதேபோல் இந்தத் தளத்திலும் குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளைத் தேடலாம்.

அகராதியைப் போலவே அகர வரிசையில் சொற்களுக்கான பட்டியல் இடம்பெற்று உள்ளது. விளக்கம் தேவைப்படும் சொல்லின் ஆரம்ப எழுத்தை, இந்தப் பட்டியலில் பார்த்து க்ளிக் செய்து பொருள் தெரிந்துகொள்ளலாம்.

உதாரணத்துக்கு, 'டிகேட்’ என்றால் என்ன என்றோ அல்லது, 'டிரில்லியன்’ என்றால் என்ன என்ற சந்தேகமோ ஏற்பட்டால், அந்தச் சொல்லுக்கான பொருளைத் தெரிந்துகொள்ளலாம். அதேபோல், 'ஹெக்ஸகன்’ என்பது எதைக் குறிக்கும் என்று குழப்பமாக இருந்தாலும், அதற்கான விளக்கத்தை அறிந்துகொள்ளலாம்.

நெட்டிஸம் - கணக்குப் புலிகளாக மாறுவோம் !

'மில்லினியம்’ என்பது எதைக் குறிக்கும்? 'வென் டயகிராம்’ என்றால் என்ன? இப்படி கணக்குத் தொடர்பாக உங்களுக்கு எந்தச் சந்தேகம் ஏற்பட்டாலும் இந்தத் தளம் தீர்த்துவைக்கிறது.

இது சுட்டிகளுக்கான அகராதி என்பதால், இங்கே தரப்படும் விளக்கங்கள் சுவாரசியமான முறையில் கொடுக்கப்பட்டு உள்ளன. வழக்கமான அகராதி போல் வெறும் அர்த்தத்தை மட்டும் தராமல், அந்த அர்த்தத்தை எளிதாகப் புரியவைக்கக்கூடிய அழகான விளக்கமும் இடம்பெற்று உள்ளது. பல இடங்களில் இந்த விளக்கம் அனிமேஷன் வடிவிலும் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த அனிமேஷன் விளக்கத்தால் அர்த்தமும் எளிதாகப் புரிந்துவிடும்.  

நெட்டிஸம் - கணக்குப் புலிகளாக மாறுவோம் !

எடுத்துக்காட்டாக, டிரில்லியன் என்ற சொல். எண்ணிக்கையில் நூறு, ஆயிரம், லட்சம் போல், மில்லியன் மற்றும் பில்லியனுக்கு அடுத்தாக டிரில்லியன் வருகிறது. டிரில்லியன் என்றால் லட்சம் கோடி என்று பொருள். அதாவது, மில்லியன் மில்லியன். இது எத்தனை பெரியது என்று எளிதாக உணர்த்துவதற்காக, இந்த அகராதி 'டிரில்லியன்’ என்றால், பத்தின் 12 மடங்கு என்று விளக்கம் தருகிறது. அருகிலேயே 12 முறை வரிசையாக பத்தைப் பெருக்கிக் காட்டுகிறது. அதற்குக் கீழே உள்ள பகுதியில் க்ளிக் செய்தால், டிரில்லியனை நீங்களே எண்ணிக்கையில் எழுதிப் பார்க்கலாம். அதாவது, பத்தை 12 முறை கிளிக் செய்தால், அந்த எண்ணிக்கை தோன்றுகிறது. இது ஒரு சின்னஞ்சிறிய அனிமேஷனாகத் தரப்பட்டு உள்ளது.

அதேபோல், பிதாகரஸ் பற்றிய விளக்கத்தில் வெவ்வேறு வகையான முக்கோணங்களை உருவாக்கிப் பார்க்கலாம். இப்படி எல்லா விளக்கங்களுமே ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அழகான அனிமேஷன் விளக்கத்தோடு உள்ளன. தேவையான இடங்களில் எண்கள் மற்றும் வரைபடங்களுக்கான விளக்கமும் தரப்பட்டு உள்ளன. அகராதி தவிர, கணித வரைபடங்களுக்கான பகுதியும் இருக்கிறது.

ஆக, கணக்குப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதோடு, புதிய புதிய கணக்குப் பதங்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் இந்தத் தளம் ஏற்படுத்துகிறது.

எடுத்துக்கொண்ட விஷயத்தை மிக எளிதாகப் புரியவைத்து, சுவாரசியத்தையும் உண்டாக்குவதால், இந்த அகராதியில் உள்ள மற்ற சொற்களையும் வரிசையாக க்ளிக் செய்து பார்க்கத் தோன்றும்.

எல்லாப் பதங்களுமே எளிமையாகப் புரியும் வகையில் இருப்பதால், கணக்கு மீதான மிரட்சி நீங்கி ஆர்வம் ஏற்பட்டுவிடும்.

நீங்களும் கணக்குப் புலிகளாக மாறுவதற்கு உதவும் தளம் -  http://www.amathsdictionaryforkids.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு