Published:Updated:

திகைக்க வைத்த தந்திர ஜாலம் !

கே.யுவராஜன், சென்னை சுட்டி ஸ்டார்ஸ் பொன்.காசிராஜன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

சில விஷயங்கள் சுட்டிகளுக்கு மட்டுமே பிடிக்கும். சில விஷயங்கள் பெரியவர்களுக்குப் பிடிக்கும். ஆனால், சுட்டிகளையும் பெரியவர்களையும் சேர்த்துக் குஷிப்படுத்துவது மேஜிக். ''ஒரு மேஜிக் ஷோவுக்குப் போகலாம் வர்றீங்களா?''னு கூப்பிட்டால் யாருக்காவது கசக்குமா? உடனே வண்டியைக் கிளப்பிட்டோம்.

சென்னையில் முகாமிட்டு இருக்கும் உலகப் புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் எதிரே ஆஜரானோம். ''வணக்கம் வாங்க'' என்று கொஞ்சு தமிழில் வரவேற்றார் புரூஷ் (றிஷீuக்ஷீஷீஷீsலீ) என்கிற பி.சி.சர்க்கார் மாஸ்டர். அதன் பிறகு ஆங்கிலத்துக்குத் தாவினார். அவருடன் எங்கள் மேஜிக் பேட்டி...

''அதென்ன நீங்க, உங்க அப்பா எல்லோருமே ஒரே பேரே வெச்சு இருக்கீங்க?''

''சர்க்கார் என்பது எங்கள் குடும்பப் பெயர். நாங்கள் கொல்கத்தாவில் இருக்கும் பெங்காலி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்பது தலைமுறைகளாக மேஜிக் செய்கிறோம். நீங்கள் ஜஹாங்கீர் மன்னர்பற்றிப் படித்திருப்பீர்கள். அந்த மன்னரின் அரண்மனையில் என் கொள்ளுத் தாத்தாக்களில் ஒருவர் மேஜிக் செய்து இருக்கிறார். என்னுடைய தாத்தா, பி.சி.சர்க்கார் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும் அவரைக் கௌரவிக்கும் வகையில் கொல்கத்தாவில் நாங்கள் வசிக்கும் சாலைக்கு அவரின் பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். அமெரிக்காவின் 'ஆஸ்கர் ஆஃப் மேஜிக்’ விருது, ஜெர்மனியின் 'தி ராயல் மெட்டாலியன்’ விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கியவர். இந்திரஜால் என்கிற பெயரில் இந்தியா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தினார். என் அப்பாவை பி.சி.சர்க்கார் யங் என அழைப்பார்கள். அவருக்கு அடுத்து நான். என்னுடைய முதல் நிகழ்ச்சி ஜப்பானின் டோக்கியோ நகரில்தான்.''

திகைக்க வைத்த தந்திர ஜாலம் !

''உங்க தாத்தா, அப்பா எல்லாம் மேஜிக் செய்யறதாலே நீங்களும் இந்தத் தொழிலுக்கு வந்தீங்களா?''

''அப்படியில்லை. தொழில் என்கிற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. மேஜிக்கை நான் அவ்வளவு நேசிக்கிறேன். மேஜிக்தான் என் உயிர். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் உங்களைப் போன்ற குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் சந்தோஷம்தான் எனக்கான ஆக்ஸிஜன். பார்வையாளர்களின் கரவொலியே என் உணவு.''

''உங்களுடைய பொழுதுபோக்கு?''

திகைக்க வைத்த தந்திர ஜாலம் !

''இசையமைப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதிலும் ராக் மியூஸிக் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.''

''மேஜிக் என்பதன் அர்த்தம் என்ன?''

''உன் வீட்டில் டிக்ஷனரி இருந்தால் அதில் பார்'' என்று வேடிக்கையாகச் சிரித்தவர் ''தேவலோகத் தலைவன் இந்திரன் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? மாயாஜாலங்களில் கைதேர்ந்தவர் என்றும் அவர்தான் மேஜிக்கை உருவக்கியவர் என்பார்கள். மற்றபடி அறிவியலை மிகச் சரியாகப் பயன்படுத்தி உங்கள் கண்களை ஏமாற்றுவதே மேஜிக்.''

''மேஜிக் செய்கிறபோது எப்போதாவது பயந்ததுண்டா?''

''இப்போது எந்தப் பயமும் கிடையாது. ஆனால், சின்ன வயசில் என் அப்பா, ஒரு பெண்ணை இரண்டு துண்டுகளாக வெட்டும் நிகழ்ச்சியைச் செய்யும்போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். அதில் ஒரு நூல் அளவு தவறு நடந்தாலும் விபரீதம் ஆகிவிடும். ரொம்பவே நுணுக்கமாகச் செய்யவேண்டிய விஷயம்.''

''நீங்கள் தாஜ்மஹாலை மறையவைத்தீர்களே அது எப்படி?''

''உஷ்... ரகசியம்!''

''உங்கள் வயசு?''

''சொல்லக் கூடாததையே கேட்கிறீங்களே... நெக்ஸ்ட்.''

''சரி, மேஜிக்கில் உங்கள் ஸ்பெஷல் என்ன?''

''என்னைப் பற்றி நானே சொல்வதைவிட  நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.''

திகைக்க வைத்த தந்திர ஜாலம் !

''கடைசிக் கேள்வி உங்களுக்குத் தமிழ் தெரியுமா?''

''சென்னையையும் தமிழ் மக்களையும் நான் ரொம்பவே நேசிக்கிறேன். அதுபோல் தமிழ் மொழியையும் எனக்குப் பிடிக்கும். இப்போ தமிழில் ஒண்ணு சொல்லட்டுமா'' என்றவர் புன்னகையுடன்  'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார்.

திகைக்க வைத்த தந்திர ஜாலம் !

'வாவ்’ என்று எல்லோரும் கைகளைத் தட்ட, விடைபெற்று மேடைக்குச் சென்றார்.

அதன் பிறகு மேஜிக் ஷோ ஆரம்பித்தது. காலிப் பெட்டிக்குள் இருந்து ஒரு தொப்பித் தொழிற்சாலையையே எடுப்பதுபோல் விதவிதமாகத் தொப்பிகளை எடுப்பது, கல்லறைப் பெட்டியில் இருந்து பெண்ணை மறையவைப்பது, அந்தரத்தில் மிதக்கும் பொருட்கள் என அசத்தினார். பொரூஸ் தந்தையான பி.சி.சர்க்கார் யங் அவர்களும் கண்களைக் கட்டிக்கொண்டு நாம் எழுதும் எண்களைச் சரியாகச் சொல்வது, ஒரு பெண்ணை இரண்டுத் துண்டுகளாக வெட்டுவது என வியக்கவைத்தார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது மாய உலகில் இருந்து வெளியே குதித்த உணர்வு ஏற்பட்டது.

திகைக்க வைத்த தந்திர ஜாலம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு