பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஹாய் ஜீபா... கர்னாடக சங்கீதத்தில் இரண்டு கட்டை, ஐந்து கட்டை என்கிறார்களே, அதைப் பற்றிச் சொல்லேன் ப்ளீஸ்?''

               - எம்.நிகேஷ்குமார், காட்டூர்.

''சிம்பிளான உதாரணத்துடன் சொல்கிறேன் நிகேஷ். நாம் காபி குடிக்கும்போது லைட், மீடியம், ஸ்ட்ராங் என நமக்குப் பிடித்த மாதிரி காபித் தூளையோ, டிகாக்ஷனையோ பாலில் கலந்து குடிப்போம். கர்னாடக சங்கீதத்தில் ஸ்ருதி என்பது, பாடுகிறவருக்கு எந்த அளவுக்குக் குரல்வளம் இருக்கிறதோ, அதற்கு ஏற்ப அவரின் விருப்பப்படி இசைக் கருவியை இசைப்பது. அதன் பெயர்தான் கட்டை. அதாவது, பாடுகிறவர்களின் குரல் பால் என்றால், அதில் கலக்கும் டிகாக்ஷன்தான் கட்டை. இரண்டும் சரியாகச் சேரும்போது, சுவையான காபி போல் இசை கிடைக்கும். உச்சக் குரலில் பாடுவது எட்டுக் கட்டை. பழங்கால நடிகரும் பாடகருமான பி.யூ.சின்னப்பா எட்டுக் கட்டையில் பாடுவாராம். இப்போது இருப்பவர்கள் அதிகபட்சம் இரண்டு கட்டையில்தான் பாடுகிறார்கள்.''

''டியர் ஜீபா... இந்த உலகில் மொத்தம் எத்தனை வகை சிலந்திகள் வாழ்கின்றன?''

       - எம்.குருபரன், கள்ளிக்குடி.

''சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் உள்ளன. இன்று வரை உலகின் பல பகுதிகளில் இருந்தும் புதிது புதிதாக சிலந்தி வகையை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி 2011 டிசம்பர் கணக்கின்படி, 42,750 சிலந்தி வகைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... எனக்கு ஒரு டவுட். க்ரீன்லாந்து நாட்டில் சூரியன் பச்சை வண்ணத்தில் இருக்குமாமே?''

   - ரா.கவின், காங்கேயம்.

''இந்தக் கேள்விக்கான பதிலாக இரண்டு விஷயங்களைச் சொல்லணும் கவின். ஒன்று... க்ரீன்லாந்தின் சிறப்பு. உலகின் நீளமான தீவு நாடுகளில் முதன்மையானது க்ரீன்லாந்து. 21,66,086 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகொண்ட இது, உலகின் 13-வது பெரிய நிலப்பரப்பு. ஆனால், இங்கே பாதிக்கும் மேல் பனி மூடிய பகுதியாக இருக்கும். இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை 57,000 மட்டுமே. இரண்டாவது விஷயம்... ஒளிச்சிதறல். சூரியன் உச்சி நேரத்தில் வெண்மையாகவும் காலை மற்றும் மாலை நேரங்களில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாகவும் நம் கண்களுக்குத் தெரிவது வான்வெளியில் ஏற்படும் ஒளிச்சிதறலால்தான். எனவே, உலகின் எல்லா இடங்களிலுமே மேலே சொன்ன மூன்று நிறங்களில்தான் சூரியன் தெரியும். க்ரீன்லாந்து பெயருக்கும் சூரியனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை''

''டியர் ஜீபா... நம் முகம் ஏன் வட்டமாக உள்ளது? சதுரம், செவ்வக வடிவில் இருக்கக் கூடாதா?''

   - ஆர்.பிரியதர்ஷன், சந்தவாசல்.

மை டியர் ஜீபா !

''தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என எல்லா உயிரினங்களும் உயிரணு என்றும் திசு என்றும் சொல்கிற ஒரு செல்லில் இருந்தே தோன்றுகின்றன. ஒவ்வொரு உயிரினத்தின் உருவத்துக்கும் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பது இந்த உயிரணுக்கள்தான். ஒரு செல், பல செல்களாகப் பெருகி, ஓர் உயிருக்கு வடிவத்தைக் கொடுக்கும். தாவரத்தின் தண்டுப் பகுதி உருளையாக இருக்கக் காரணம், அந்தப் பகுதியில் இருக்கும் திசு உருளை வடிவம்கொண்டது. அப்படித்தான் நம் முகப் பகுதியில் இருக்கும் திசுவின் வடிவத்துக்கு ஏற்ப முகமும் வட்டமாக உள்ளது. ஒவ்வொரு உயிரினத்தின் தேவைக்கு ஏற்ப இயற்கை இப்படி உருவத்தைக் கொடுக்கிறது.''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... ஆம்புலன்ஸ் சேவை முதன் முதலில் எங்கே தொடங்கப்பட்டது?''

    - ம.அக்ஷயா, அரூர்.

''லத்தீன் மொழியில் 'அம்புலரே’ என்றால் நகர்த்து என்று பொருள். பழங்காலத்தில் மிகவும் நோயுற்று, குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டவர்களை அந்த இடத்தில் இருந்து கைவண்டி மூலம் அப்புறப்படுத்துவார்கள். இதில் நோயாளியைக் காப்பாற்றுவதைவிட, அவர்களின் நோய்த்தொற்றுக் கிருமி மற்றவர்களுக்குப் பரவக் கூடாது என்ற நோக்கமே இருந்தது. பிறகு, 1478-ல் ஸ்பெயின் நாட்டில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, 'அவசர ஊர்தி’ என்ற பெயரில் முதன்முதலாகப் பயன்படுத்தினார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போர்களில் காயம் அடைந்த வீரர்களை எடுத்துச் செல்ல, நோயாளர் சுமை வண்டி (கினீதீuறீணீஸீநீமீ கீணீரீஷீஸீ) என்ற பெயரில் பயன்படுத்தினார்கள். 19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, எல்லா மருத்துவமனைகளும் பயன்படுத்தும் உயிர்காக்கும் வாகனமாக ஆம்புலன்ஸ் உருவெடுத்தது.''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு