Published:Updated:

செஞ்சிலுவைக்கு ஒரு சல்யூட் !

லதானந்த்

பிரீமியம் ஸ்டோரி
##~##

பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவுக்கு இடையில், 1859-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள சால்ஃபெரினோ என்ற பகுதியில் கடுமையாக யுத்தம் நிகழ்ந்துகொண்டு இருந்தது. அப்போது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் வணிகரான ஜீன் ஹென்றி டுனன்ட், போர்க்களத்தில் இரு தரப்பு வீரர்களும் காயங்களால் படும் வேதனையைப் பார்த்து, உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் உதவிகள் செய்தார்.

செஞ்சிலுவைக்கு ஒரு சல்யூட் !

மேலும், நடுநிலைமையோடு போர் வீரர்களுக்கு உதவக்கூடிய ஓர் அமைப்பு ஏற்படுத்தவேண்டும் என 'மெமரி ஆஃப் சால்ஃபெரினோ’ என்கிற புத்தகத்தில் எழுதினார். புத்தகம் வெளியான ஓராண்டுக்குப் பிறகு ஜெனிவா நகரில் ஹென்றியின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சர்வதேசக் கூட்டம் நடந்தது. அதன் அடிப்படையில் 1864-ல் உதயமானதுதான் 'செஞ்சிலுவைச் சங்கம்.’

இதற்கென உருவாக்கப்பட்ட முத்திரையில் வெள்ளைப் பின்னணியில் சிவப்பு வண்ணத்தில் சிலுவை இருக்கும். செஞ்சிலுவைச் சங்கம் உதயமான சுவிட்சர்லாந்துக்கு மரியாதை செய்வதற்காக, அந்த நாட்டின் கொடியை நினைவூட்டும் வகையில் இந்த முத்திரையும் பெயரும் அமைந்தது.

செஞ்சிலுவைக்கு ஒரு சல்யூட் !

உலகின் பல நாடுகளிலும் செஞ்சிலுவைச் சங்கங்கள் இயங்குகின்றன. இஸ்லாமிய நாடுகளில் இது சிவப்புப் பிறைநிலாச் சங்கம் என அழைக்கப்படுகிறது. முதலாம் உலகப் போர் நடந்த 1914-ம் ஆண்டில் போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவில் எந்த அமைப்பும் இல்லை. செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பின் கிளை ஒன்றுடன் சேர்ந்தே நிவாரணப் பணிகளை ஆற்றவேண்டி இருந்தது. மார்ச் 3, 1920-ல் வைஸ்ராயின் நிர்வாக் குழு உறுப்பினரான சர் கிளாட் ஹில் என்பவர், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்கச் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தினார்.

மக்களுக்குச் சேவை செய்த தன்னார்வத் தொண்டர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக உலக செஞ்சிலுவைத் தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 8-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

போர்க்காலங்கள், பூகம்பம், சுனாமி, வெள்ளம் என இவர்கள் ஆற்றும் பணி மகத்தானது. வயதில் இளையவர்களையும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் ஜூனியர் செஞ்சிலுவைச் சங்கம் செயல்படுகிறது. ஆரம்ப சுகாதாரம், எழுத்தறிவுப் பணி போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

நீங்களும் உங்கள் பள்ளியில் இத்தகைய அமைப்பு ஒன்றில் இணைந்து சேவை ஆற்றலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு