Published:Updated:

காத்திருக்கும் பதக்கம்!

காத்திருக்கும் பதக்கம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பேட்மிட்டன் என்ற விண்ணில் பிரகாஷ் படுகோனே, சாய்னா நேவால், அஸ்வினி பொன்னப்பா எனப் பலர் இந்திய நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டு இருக்க... அந்த வரிசையில் சுகில் என்ற புதிய நட்சத்திரத்தின் சிமிட்டல் தொடங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளியான சுகில், பேட்மிட்டனை விளையாடத் தொடங்கிய 2 ஆண்டுகளில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல வெற்றிகளைக் குவித்திருக்கிறார். ''என்னுடையது மிகவும் ஏழ்மையான குடும்பம். ஆனால், இந்த ஏழ்மை எனது விளையாட்டு ஆர்வத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அதற்குக் காரணம், எனது தந்தை. சிறு வயதிலேயே இறகு பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு  ஊக்கம் கொடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு நீல்கிரீஸ் கோச்சிங் கிளப்பில் பயிற்சி பெற்றேன். அது என்னை மேலும் உயர்த்தியது'' என்கிறார்.

அங்கே செந்தில்வேலன் என்ற பயிற்சியாளர் சுகிலுக்குத் தீவிர பயிற்சியும் ஆட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிளுடன் பொதுப் பிரிவுப் போட்டிகளிலும் பங்கேற்று அசத்துகிறார் சுகில்.

காத்திருக்கும் பதக்கம்!

ஈரோட்டில் பயிற்சி மைதானத்தில் சுகில் ஆடிய விதத்தைக் கண்டு வியந்த பயிற்சிமைய மேலாளர், சுகிலுக்கு அனைத்து வகையான பயிற்சிகளையும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார்.

காத்திருக்கும் பதக்கம்!

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அளவிலான போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார் சுகில். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தையும், இரட்டையர் பிரிவில் 2-ம் இடத்தையும் பிடித்தார்.

''பயிற்சி பெற்ற இரண்டே ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று மகுடம் சூடுவது சாதாரண விஷயமல்ல. சுகில் இன்னும் கூடுதல் பயிற்சியுடன் தீவிர முயற்சி செய்தால், 2020 பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது உறுதி'' என்கிறார் சுகிலின் பயிற்சியாளர் அருள்குமார்.

2020 பாராலிம்பிக் சுகிலுக்காகப் பதக்கங்களுடன் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு