Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப் கான்

##~##

''ஹாய் ஜீபா... மனிதனுக்கு வரும் சர்க்கரை, மாரடைப்பு போன்ற நோய்கள் பறவைகளுக்கும் வருமா?''

   - ஒய்.கே.லூர்தின், துவரங்காடு.

''உலகில் உள்ள உயிரினங்களில் அதிகமாக நோய்களைக்கொண்ட உயிரினம் மனிதர்கள் மட்டுமே. அவர்கள்தான் இயற்கைக்கு மாறாகப் புதிது புதிதாக உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் உருவாக்கிவருகிறார்கள். இவையே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். நாம் செல்லப் பிராணிகளாகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கும் ஒரு சில பறவை மற்றும் விலங்குகளையே பறவைக் காய்ச்சல் போன்ற ஒரு சில நோய்கள் தாக்குகின்றன. மற்றபடி இயற்கையோடு சேர்ந்து இருக்கும் உயிரினங்களுக்கு நோய் என்பது மிக அபூர்வமாக வருபவையே. எந்த ஒரு பறவையும் ஹார்ட் அட்டாக் எனச் சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவது இல்லை. எந்த ஒரு விலங்கும் சர்க்கரை நோய் எனச் சொல்லி புலம்புவதும் இல்லை லூர்தின்.''  

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... இந்த உலகில் தீவு நாடுகள் மொத்தம் எத்தனை இருக்கு?''

  - கே.ஹரிசிவா, மதுரை

மை டியர் ஜீபா !

''நான்கு பக்கங்களும் நீர் சூழ்ந்திருக்கும் நிலப் பகுதியைத் தீவு என்பார்கள். ஒரு நாட்டுக்குச் சொந்தமாக, அதன் நிலப் பகுதியில் இருந்து தனித்தும் தீவுகள் இருக்கும். உதாரணமாக, இந்தியாவுக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகள். ஒரு தீவுக்குள் மொத்த நாடுமே அடங்கி இருந்தால், அதைத் தீவு நாடு என்பார்கள். இலங்கை, சிங்கப்பூர், ஜப்பான் போன்றவை இதற்கு உதாரணம். அப்படி உலகில் 47 தீவு நாடுகள் உள்ளன.''

''டியர் ஜீபா... பிரிக்காத பிஸ்கட் பாக்கெட்டில் எறும்புகள் எப்படி உள்ளே செல்கின்றன?''

   - மா.ஹரிணி, கல்லக்குடி

''பிஸ்கட் பாக்கெட்டைப் பிரிச்சு, அதில் சில பிஸ்கட்டை பிளேட்டில் வெச்சு, அதை ஒவ்வொண்ணா எடுத்து, நாசூக்காகச் சாப்பிடணும் என்கிற ரூல்ஸ் எல்லாம் நமக்குத்தான், எறும்புகளுக்குக் கிடையாது. குட்டி எறும்புகளின் அம்மா எறும்பும் அப்படி எல்லாம் கட்டளை போடாது. பிஸ்கட் பாக்கெட்டில் பேக்கிங் கோளாறு ஏற்பட்டு காற்று நுழையும் இடைவெளி கிடைச்சாலே போதும். ''ஃபாலோ மீ பசங்களா’னு சொல்லி, எறும்புகள் உள்ளே நுழைஞ்சுரும். அதிலும் க்ரீம் பிஸ்கெட்டாக இருந்தால், நம்மளை மாதிரியே எறும்புகளுக்கும் அம்புட்டு இஷ்டம். அப்படி எறும்புகள் நுழைஞ்ச பாக்கெட் உன் கைக்கு வந்தால், அதைத் தூக்கிப் போட்டுரு ஹரிணி''

''டியர் ஜீபா... முள்ளம்பன்றி, சைவமா அசைவமா?''

   - ச.சிந்துஜா, திண்டுக்கல்

மை டியர் ஜீபா !

''விறைத்த முட்கள், முறைப்புப் பார்வையுடன் இருக்கும் போட்டோவைப் பார்த்துட்டு சிந்துஜாவுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துருச்சு போலிருக்கு. அணில் மாதிரி கொறிக்கும் இனத்தைச் சார்ந்ததுதான் இந்த முள்ளம்பன்றி. இவற்றின் முக்கிய உணவு பழங்கள், தாவரங்கள் மற்றும் வேர்கள். ஆனாலும் சில சமயங்களில் கால்சியம் சத்துக்காக விலங்குகளின் எலும்புகள், நத்தை ஓடுகளைச் சாப்பிடும். சுருக்கமாகச் சொன்னால் நிறைய சைவம்... கொஞ்சம் அசைவம்.''

''ஹாய் ஜீபா... Nocturnality என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அதற்கு என்ன அர்த்தம்?''

   - ம.புவனேஸ்வரி, கோபிசெட்டிபாளையம்

''இதற்கு, 'இரவாடுதல்’ என்று அர்த்தம். அதாவது, பகலில் ஓய்வில் இருந்துவிட்டு இரவில் செயல்படும் குணத்தைக் குறிப்பிடுவதற்காக இப்படிச் சொல்வார்கள். இத்தகைய குணங்களைக்கொண்ட விலங்குகளுக்கு நல்ல மோப்பத் திறன், இருட்டிலும் நன்கு பார்க்கும் திறன் இருக்கும். ஆந்தை, பூனை, வெளவால் போன்றவை சிறந்த இரவாடிகள். இதைத் தவிர முயல், சிங்கம் போன்ற விலங்குகள் இரவில்  தனது வழியைச் சரியாகக் கண்டுபிடித்துச் செல்லும்  இரவாடிகளே. சமீப காலமாக கால் சென்டர் போன்ற இரவு நேரப் பணிகளில் மனிதர்களும் அதிகமாக இடம்பெறுகிறார்கள். அவர்களையும் அப்படிச் செல்லமாகச் சொல்லிக்கலாம் புவனா! ''

அடுத்த கட்டுரைக்கு