ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினம் !
லதானந்த்
##~## |
உலகம் முழுக்க ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி 'உலகச் சுற்றுச்சூழல் தினம்’ அனுசரிக்கப்படு கிறது. சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்து, சுற்றுச்சூழல்பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் நோக்கம்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் (United Nations Environment Programme)160; கீழ் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முதன்முதலாக 1973-ல் உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்து வலியுறுத்தப்படும். ஒரு நாடு முன்னிலை வகிக்கும்.
2011-ல் இந்தியா முன்னிலை வகித்தது. அந்த ஆண்டுக்கான கருத்து: 'உங்களது சேவையில் வனங்கள் ’’(Forest: Nature at your service). 2012-ம் ஆண்டுக்கான கருத்து: 'பசுமைப் பொருளாதாரம்’ (Green economy). முன்னிலை வகித்த நாடு, பிரேசில்.
இந்த ஆண்டுக்கான கருத்து: 'சிந்தியுங்கள். உண்ணுங்கள். சேமியுங்கள். உணவை வீணாக்காதீர்கள்’ (Think.Eat.Save. Reduce Your Foodprint). முன்னிலை வகிக்கும் நாடு, மங்கோலியா.

இந்த தினத்தில் சுற்றுச்சூழல்குறித்த கருத்தரங்கங்கள், ஊர்வலங்கள், கண்காட்சிகள், சைக்கிள் பேரணிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஊடகங்கள் மூலமாக தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த தினத்தின் சிறப்பை வலியுறுத்துவார்கள். சுவரொட்டிகள், கையேடுகள் மூலம் சுற்றுச்சூழல் தொடர்பான வாசகங்கள் விநியோகிக்கப்படும். அரசு நிறுவனங்கள், தன்னார்வ மற்றும் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, கடற்கரை, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களைச் சுத்தம் செய்வார்கள்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும். அதற்காக, பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து, குப்பை சேகரிப்பவர்களிடம் தருவது. இயன்ற வரை பாலிதீன் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது.
போகி தினத்தன்று பிளாஸ்டிக், டயர்கள் போன்றவற்றை எரிக்காமல் இருப்பது. ஒலி மற்றும் மாசுக் கேடு ஏற்படுத்தும் பட்டாசு போன்றவற்றை வெடிக்காமல் இருப்பது. புகை கக்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது.
தெருக்களில் எச்சில் துப்புதல் மற்றும் அசுத்தம் செய்யாமல் இருப்பது. நீர்நிலைகளை மாசுபடாமல் காப்பது, அங்கே கால்நடைகளைக் குளிப்பாட்டுவதைத் தவிர்ப்பது.
சுற்றுச்சூழலைக் காப்போம்; பூமிக்கான நமது கடமையைச் செய்வோம்.