Published:Updated:

மாண்புமிகு மாணவி !

சி.ஆனந்தகுமார் எம்.ராமசாமி

பிரீமியம் ஸ்டோரி
##~##

'நம்மிடம் உள்ள குறைகளை எண்ணி, ஒருபோதும் தாழ்வுமனப்பான்மைக்கு இடம்தரக் கூடாது’ - இதுவே   கலைமணியின் வெற்றி மந்திரம்.

மாண்புமிகு மாணவி !

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பரணம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி கலைமணி. ப்ளஸ் டூ தேர்வில் 1,200-க்கு 1,148 மதிப்பெண்கள் அள்ளியதோடு, வரலாறு பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர்.

''நரம்புக் கோளாறு காரணமாக, சின்ன வயசுல பார்வையை இழந்துட்டேன். அப்பாவின் மறைவுக்குப் பிறகு, ராஜாங்கம் தாத்தாதான் என்னை வளர்த்து ஆளாக்கினார். போஸ்ட்மேனாக இருந்து ஓய்வுபெற்ற அவர்தான் என்னோட ரோல்மாடல்'' எனக் கணீர்க் குரலில் பேசுகிறார் கலைமணி.

''சின்ன வயசில், வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பேன். அந்த வழியா பள்ளிக்கூடம் போகிற பிள்ளைங்க சத்தம் கேட்கும். அதை ஏக்கத்தோடு கேட்பேன். இதை உணர்ந்த தாத்தா, எங்க ஊர் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கே ஐந்தாம் வகுப்பு வரை படிச்சேன். ஒருநாள் எங்க ஊருக்கு, பெரம்பலூர் ஈவா மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து டீச்சர்ஸ் வந்தாங்க. அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.

என்னைப் பள்ளி நிர்வாகச் செலவிலேயே படிக்கவைக்கிறதா சொன்னாங்க. அங்கே டீச்சர்கள், பள்ளித் தாளாளர் என எல்லாருமே என் மேல அன்பு செலுத்தினாங்க. அவங்க கொடுத்த ஊக்கத்தில், 10-ம் வகுப்பில் 466 மார்க்கும், இப்போது ப்ளஸ் டூ-வில் 1,148 மார்க்கும் எடுத்தேன்'' என்கிறார்.

மாண்புமிகு மாணவி !

கலைமணியின் சாதனை படிப்புடன் முடியவில்லை. '' 'மனசு சந்தோஷமா இருக்கணும்னா, உடம்பு நல்லா இருக்கணும். அதுக்கு நல்லா விளையாடணும்’னு தாத்தா அடிக்கடி சொல்வார். அதனால், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல் போட்டிகளில் விளையாட ஆரம்பிச்சேன். அதிலும் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்கினேன். கலெக்டர் ஆகணும். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவணும். இதுதான் என் ஆசை'' என்கிறார் நாளைய கலெக்டர் கலைமணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு