பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஹாய் ஜீபா... எனக்கு ரொம்பவும் பிடிச்ச 'பார்பி’ பொம்மையைக் கண்டுபிடிச்சது யார்னு சொல்றியா?''

   - மு.மதுமிதா, திருச்சி.

''ரூத் ஹாண்ட்லர் (Ruth Handler) என்கிற அமெரிக்கப் பெண்மணி, 1956-ல் விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சென்றார். அங்கே ஜெர்மன் தயாரிப்பான 'பில்ட் லில்லி’ என்ற பொம்மையைப் பார்த்தார். அது குட்டிச் சுட்டிகளுக்கான பொம்மை. 'இதே போல் டீன் ஏஜ் சுட்டிகளுக்கு ஒரு பொம்மையை உருவாக்கினால் என்ன?’ என நினைத்து, ஒரு பொம்மையைத் தயாரித்தார். பார்பரா என்ற தனது மகளின் பெயரைச் சற்றே மாற்றி, பொம்மைக்குச் சூட்டினார். அதுதான் 1959 மார்ச் 9-ல் பிறந்த 'பார்பி’ பொம்மை.''

''டியர் ஜீபா... பனிக் கரடிகள் வேட்டையாடும்போது முகத்தை மூடிக்கொள்ளுமாமே அது உண்மையா?''

   - வி.சபரி, நாகப்பட்டினம்.

மை டியர் ஜீபா !

''முகத்தை அல்ல, மூக்கை மூடிக்கொள்ளும். காரணம், பனி சூழ்ந்த பகுதியில் வசிக்கும் கரடியின் உடலும் பனி போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், மூக்கு மட்டும் கறுப்பாக இருக்கும். மறைந்துசென்று இரையைப் பிடிக்கும்போது இந்த கறுப்பு நிறம் கரடிக்கு இரையாகும் சீல், மீன்

மை டியர் ஜீபா !

போன்றவற்றின் கண்களுக்குத் தெரிந்து ஓடிவிடும். எனவே, சில சமயம் மூக்கை மூடியபடி வேட்டையாடும்.''  

''ஹாய் ஜீபா... முருங்கை மரத்தின் கிளையை நட்டுவைத்தால் எப்படி மரமாக வளர்கிறது?''

    - வி.காயத்ரி, கும்பகோணம்.

''விலங்கினங்களில் பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வி எனப் பல வகைகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பதுபோல் தாவரங்களிலும் உண்டு. முருங்கை, கல்யாண முருங்கை போன்ற மரங்களின் கிளையை வெட்டி வைத்தாலும் மண்ணில் வேர்விட்டு மரமாக வளர்வதற்கான உயிர்ச் செல்கள் உண்டு. வேறு மரங்களுக்கு அந்தத் தன்மை கிடையாது. இது இயற்கை உருவாக்கியது. ஆனால், விஞ்ஞான வளர்ச்சியில் இந்த இயற்கை விதியையும் மாற்றும் பல விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் 'திசு வளர்ப்பு’ என்ற புதிய முறையில் தாவரங்களை உருவாக்குகிறார்கள். அதாவது, எந்த மரமாக இருந்தாலும் அதன் ஓர் இலையிலிருந்து உயிர் செல்களை எடுத்து, தாவரத்தை உருவாக்கிவிடுவார்கள். அப்படி தமிழ்நாட்டிலும் வாழை மரங்கள் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன.''  

''டியர் ஜீபா... பெட்ரோலியம் உருவாக விலங்குகளின் படிமங்களே காரணம் என்கிறார்கள். அப்படியானால் அரபு நாடுகளில் விலங்குகள் அதிகம் இருந்ததா?''

  - ஆர்.சிவஹரி, வில்லியனூர்.

மை டியர் ஜீபா !

''உலகின் பல எண்ணெய்க் கிணறுகள் கடல் பகுதியில்தான் இருக்கின்றன. காரணம், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்கள் இறந்து, மண்ணில் புதைந்து, வெப்பத்தாலும் நுண்ணுயிர்களாலும் வேதிமாற்றம் அடையும். குறிப்பிட்ட கால அளவில் அவை எண்ணெயாக மாறும். பிறகு, பாறைகளின் இடுக்குகளில் தங்கிவிடும். இந்த மாற்றம் பூமியின் தன்மைக்கு ஏற்ப, ஒவ்வோர் இடத்திலும்  நடந்துவருகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவில்தான் அதிகமான பெட்ரோலியம் கிடைத்தது. இப்போது அரேபியாவின் முறை. அரேபியாவில் 2,600 கிலோ மீட்டருக்கும் மேலான பரப்பளவில் செங்கடல் இருக்கிறது. அதுதான் இப்போது பெட்ரோலை வழங்கிவருகிறது. விரைவில் இங்கும் பெட்ரோலியம் குறைந்துவிடும் என்கிறார்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.''

''ஹலோ ஜீபா... 60 கி.மீ. வேகத்தில் செல்லும் பஸ்ஸின் கடைசி சீட்டில் பயணிக்கும் ஒரு ஈ, டிரைவர் சீட்டுக்கு வர எத்தனை கி.மீ. வேகத்தில் பறந்து வர வேண்டும்? சொல்லு பார்ப்போம்...

    - சிவ.க.குமாரகுருபரன், புன்செய்ப்புளியம்பட்டி.

மை டியர் ஜீபா !

''பஸ் உள்ளே எதுக்குப் பறக்கணும்? அப்போது ஈ உட்கார்ந்து இருந்தாலே 60 கி.மீ. வேகத்தில் போறதாதானே அர்த்தம். மெதுவா நடந்துவந்து டிரைவர்கிட்ட 'அண்ணாச்சி, வண்டியை நிறுத்துங்க. நான் இறங்கி, புன்செய்ப்புளியம்பட்டிக்குப் போய், குமாரகுருபரனைப் பார்த்துக்கிறேன்’னு சொன்னா, டிரைவர் வண்டியை நிறுத்தப்போறார். ஜீபாவுக்கே புதிரா? வெவ்வெவ்வேவேவே!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு