Published:Updated:

சென்னையைக் கலக்கிய கலர் கலாட்டா !

எம்.உசேன், ரா.மூகாம்பிகைகே.யுவராஜன் க.பிரபாகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''ரெண்டு நாள் டைம் போனதே தெரியலை. இப்பவே பெரிய ஓவியர் ஆகிட்ட ஃபீலிங். பிரஷ், பேப்பரைத் தேடி கை பரபரக்குது அங்கிள்'' என்று சொல்லிவிட்டு குஷியுடன் சென்றது சுட்டிகள் பட்டாளம்.

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைகள் மே 18 மற்றும் 19 இரண்டு நாட்களும் வண்ணங்களைப் பூசிக்கொண்டன. சுட்டி விகடன் மற்றும் ஸ்ரீ கோல்டு இணைந்து நடத்திய கலர் கலாட்டாவில், 300-க்கும் மேற்பட்ட சுட்டிகள் பங்கேற்றார்கள். ஓவியர் விஸ்வம் தலைமையில், அனுபவம் மிக்க ஓவிய ஆசிரியர்களின் பங்களிப்புடன் கலர் கலாட்டா நிகழ்ச்சி படு ஜோராக அரங்கேறியது.

போர்ட்ரெய்ட், கலர் மிக்ஸிங், ஸ்டில் லைஃப் ஸ்டடி, கேரிகேச்சர் எனப் பயிற்சியின் பட்டியலைப் படித்ததும் ஸ்டூடன்ட்ஸ் முகங்களில் செம சந்தோஷம். ''எங்களுக்கெல்லாம் டிராயிங்னா பென்சில், க்ரயான்ஸ், ஸ்கெட்ச், பேப்பர்னு நாலு பொருட்கள்தான் தெரியும். ஆனா, இத்தனை வகையான டிராயிங் செய்யலாமா?'' என ஆச்சர்யப்பட்டனர்.

முதல் நாள் எட்டு வகையான பயிற்சிகள். அடுத்த நாளில் ஆறு பயிற்சிகள். பங்கேற்ற சுட்டிகளைப் படிக்கும் வகுப்பின் அடிப்படையில் பிரித்து, பயிற்சி நடக்கும் அறைகளுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றார்கள். அங்கே ஒவ்வொரு சுட்டிக்கும் ஓவியம் வரைவதற்கான அனைத்துப் பொருட்களும் அடங்கிய 'கிட் பேக்’ வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பயிற்சியை ஆரம்பித்ததும் சுட்டிகள் பரபரவெனக் களத்தில் இறங்கினார்கள். ஓவியப் பயிற்சியுடன் ஆட்டம், பாட்டம் என நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.

சென்னையைக் கலக்கிய கலர் கலாட்டா !

ஓவியர் விஸ்வம், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று சுட்டிகளின் கைவண்ணங்களைப்

சென்னையைக் கலக்கிய கலர் கலாட்டா !

பார்வையிட்டார். நன்றாக வரைந்த சுட்டிகளுக்கு ஷொட்டும் மற்றவர்களுக்கு டிப்ஸும் வழங்கினார்.

வகுப்பறையுடன் நின்றுவிடாமல், 'அவுட்டோர் ஸ்டடி’ என்ற பெயரில் வெளியே அழைத்துவந்து இயற்கைக் காட்சிகளை வரையச் சொன்னபோது, சுட்டிகளின் ஆர்வத்தைப் பார்த்து அக்கினி வெயிலும் ஓடி ஒளிந்தது. முதல் நாளின் கடைசி நிகழ்ச்சியாக பலூன் மாஸ்க் செய்வதுபற்றிச் சொல்லி, ''இதை நீங்கள் வீட்டில் செய்து எடுத்து வர வேண்டும்'' என்றார்கள். பலூனும் கொடுக்கப்பட்டது.

இப்படி ஒரு ஜாலி ஹோம்வொர்க் கொடுத்ததுக்கு  ஓ... போட்டுக்கொண்டு உற்சாகத்துடன் சென்றார்கள்.

அடுத்த நாள்... முதல் நிகழ்ச்சியாக, 'வெஜிடபிள் பிரின்டிங் அண்ட் ஸ்டென்சில் கட்டிங்’ பயிற்சி. உருளைக்கிழங்கு, வாழைக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை ஆசிரியர்கள் கொண்டுவந்ததைப் பார்த்து ''என்ன மாஸ்டர், சமையல் பண்ணப்போறீங்களா?'' எனக் கேட்டுக் கலாய்த்தார்கள். பிறகு, பலூன் மாஸ்க் பயிற்சியில் ஸ்பைடர் மேன், யானை, குரங்கு எனப் பலவிதமான முகமூடிகளை உருவாக்கி அசத்தினார்கள்.

கொலாஜ், கிளாஸ் பெயின்டிங், ஆயில் பெயின்டிங் எனச் சளைக்காமல் புகுந்து விளையாடினார்கள் சுட்டிகள். களிமண்ணில் சிற்பம் செய்யும் கிளே மாடலிங் பயிற்சியில் கை நிறையக் களிமண்ணை எடுத்து, சப்பாத்தி மாவைப் பிசைவதுபோல் பிசைந்தார்கள். சற்று நேரத்தில் வீடு, பிள்ளையார், யானை, பழங்கள், ஆமை என வகுப்பறை முழுவதும் களிமண் உருவங்கள். ''குட்டிக் குட்டி யானை... குண்டான யானை... கையை வீசி நடக்கும்... காத்து வாங்கப் போகும்'' எனப் பாட்டும் களைகட்டியது.

சென்னையைக் கலக்கிய கலர் கலாட்டா !

அனைத்துப் பயிற்சிகளும் முடிந்து, சுட்டிகளின் படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டன. தங்கள் பிள்ளைகளின் திறமையைப் பார்த்த பெற்றோர் முகங்களில் பெருமிதம் பொங்கியது. பங்கேற்ற அனைத்துச் சுட்டிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

''இங்கே இருப்பது உங்கள் குழந்தைகளின் ஓவியம் மட்டும் அல்ல, இந்தப் படைப்புகள் மூலம் அவர்களின் கனவுகள், லட்சியங்கள் வெளிப்படுகின்றன. நாங்கள் செய்திருப்பது ஒரு அறிமுகம் மற்றும் தூண்டுதல்தான். இரண்டு நாட்களில் இத்தனை விஷயங்களை இவர்களால் உருவாக்க முடிகிறது. முறையான தொடர் பயிற்சி அளித்தால், ஓவியத் துறையில் பல சாதனைகள் படைக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சியில் உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் படைப்புகளை உலகம் முழுவதும் பரப்ப முடியும். உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள், நாளைய படைப்பாளிகளை உருவாக்குங்கள்'' என்றார் விஸ்வம்.

தன்னம்பிக்கையும் சந்தோஷமும் மின்ன, தங்கள் பொற்றோருடன் ஜாலி நடைபோட்டனர் சுட்டிகள்.

கலர் கலாட்டாபற்றி சில சுட்டிகள் மற்றும் பெற்றோரின் லைவ் கமென்ட்...

ஹரிஹர சுப்பிரமணியன் (பள்ளிக்கரணை): ''களிமண்ணில் நான் செய்த விநாயகரை எல்லோரும் பாராட்டினாங்க. இதை வீட்டுக்குக் கொண்டுபோய் பத்திரமா வெச்சுக்கப்போறேன்.''

ரக்ஷிதா (சைதாப்பேட்டை): ''இந்த இரண்டு நாள் கலர் கலாட்டாவில் நிறைய விஷயங்களையும் கத்துக்கிட்டேன். நிறைய ஃப்ரெண்ட்ஸ்களையும் பிடிச்சுட்டேன்.''

சென்னையைக் கலக்கிய கலர் கலாட்டா !

அர்ச்சனா (தாம்பரம்): Stencil cutting’   மூலமாக நான் வரைஞ்ச பாரதியார் படத்தைப் பார்த்த அப்பா 'உன்னை உடனே டிராயிங் கிளாஸ்ல சேர்த்துவிடறேன்’னு சொல்லியிருக்கார். நான் செய்த

சென்னையைக் கலக்கிய கலர் கலாட்டா !

பலூன் மாஸ்க்கை என் ஃப்ரெண்டுக்குப் பிறந்த நாள் பரிசாக் கொடுத்து அசத்தப்போறேன்.''

கவிதா (சின்மயா நகர்): ''முதல் நாள் புரொகிராம் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும், என் பொண்ணு என்னை சேர்ல உட்காரவெச்சு 'உன்னை வரையறேன்’னு சொல்லி வரைய ஆரம்பிச்சுட்டா.''

ரமேஷ் குமார் (சைதாப்பேட்டை): '' 'டிராயிங் வரையிறது ரொம்பக் கஷ்டமான விஷயம்’னு சொல்லிட்டு இருந்த என் பொண்ணுக்கு, அதை இஷ்டமானதா  மாத்திடுச்சு இந்த கலர் கலாட்டா புரொகிராம்.''

ஸ்ரீனிவாசன் (திருக்கழுகுன்றம்): ''என் பையனின் கிரியேட்டிவ் பசிக்கு நல்ல விருந்தா இருந்துச்சு. இங்கே வந்த எல்லாச் சுட்டிகளுக்கும் 'நம்மாலும் முடியும்’ என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டிருப்பது நிச்சயம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு