Published:Updated:

ஒரு மேடை...ஆறு நட்சத்திரங்கள் !

சரா, ரா.மூகாம்பிகை

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஒரே மேடையில் ஆறு இளம் சாதனையாளர்கள் ஒன்று கூடினால், அந்த மேடையின் ஜொலிப்புக்குச் சொல்ல வேண்டுமா?

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் மே 17, 18, 19 மூன்று நாட்கள் நடந்த 'கிட்ஸ் ஒன்லி கொண்டாட்டம்’ கண்காட்சியில்,  சிறு வயதிலேயே வெவ்வேறு துறைகளில் சாதனைபடைத்த சுட்டிகளுக்கு 'இளம் சாதனையாளர்’ விருதை வழங்கியது 'ஐபால் மீடியா’ என்ற நிறுவனம்.

நீச்சல் வீராங்கனை ஜெயவீணா, டிரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த், இளம் பேச்சாளர் ஸ்வர்ணலஷ்மி, செஸ் வீராங்கனை மகாலட்சுமி, 'வைல்டு லைஃப்’ போட்டோகிராஃபர் விஷ்வக்சேனன் மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் வித்தகன் ரமணன் என சுட்டி விகடனால் அடையாளம் காட்டப்பட்ட சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கிக் கௌரவித்தார், 'கற்றது தமிழ்’ படத்தின் இயக்குநர் ராம்.

கடந்த ஆண்டு நவம்பரில் சால்வேனியாவில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச செஸ் போட்டியில், சிறுமிகள் பிரிவில் தங்கம் வென்ற மகாலட்சுமி, ''இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேச செஸ் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவேன்'' என்றார்.

ஒரு மேடை...ஆறு நட்சத்திரங்கள் !

இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்னையை ஐ.நா.-வில் ஒலிக்கச்செய்த பேச்சாளர் ஸ்வர்ணலஷ்மி, ''பார்வையற்ற மாணவர்களுக்கு உதவக்கூடிய குறைந்த விலை நவீனக் கருவிகளை உருவாக்க, விரைவில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களிடம் பேசப்போகிறேன்'' என்றார்.

இளம் டிரம்மரும், பாலஸ்ரீ விருது வென்றவருமான சித்தார்த், ''இசைத் துறையில், வியக்கவைக்கும் டிரம்மராகச் சாதனை படைப்பேன்'' என்றார்.

தேசிய ஜூனியர் லெவல் நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைக் குவித்து, பல்வேறு  சாதனைகளை நிகழ்த்திய ஜெயவீணா, ''ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்று  நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்'' என்றார்.

புகைப்படக் கலையில் அசத்திவரும் விஷ்வக்சேனன், தன் கேமராவில் பதிவுசெய்த தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் படங்களைத் தொகுத்து, ஒரு கலக்கல் புத்தகம் வெளியிட இருக்கிறார்.

ஒரு மேடை...ஆறு நட்சத்திரங்கள் !

பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், காவடியாட்டம் எனப் பின்னி எடுக்கும் ரமணன், ''நமது நாட்டுப்புறக் கலைகளை உலகம் அறியச்செய்து தனித்துவக் கலைஞனாக மிளிர்வேன்'' என நம்பிக்கையுடன் சொன்னார்.

இளம் சாதனையாளர்களுக்கு விருதுகளை அளித்த  இயக்குநர் ராம், ''உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. எனக்கும் இப்படிச் சாதனை செய்ய ஆசை. ஆனால், மீண்டும் குழந்தையாகப் பிறந்தால் மட்டுமே அது சாத்தியம். அது நிச்சயம் முடியாது. நீங்கள் இன்னும் பல சாதனைகள் செய்து நாட்டுக்குச் சிறப்பு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்'' எனச் சொல்லி சாதனையாளர்களுக்கு உற்சாக டானிக் கொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு