Published:Updated:

துளித் துளியாய்...

தண்மதி திருவேங்கடம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஓர் அறையில் நான்கு முதல் ஆறு வயது வரையிலான 30 சுட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சாக்லேட் வைக்கப்பட்டது. ''உங்களுக்கு 15 நிமிடம் அவகாசம். அதுவரை இந்த சாக்லேட்டைச் சாப்பிடாமல் இருந்தால், இரண்டு சாக்லேட்கள் தருவோம்'' எனச் சொல்லப்பட்டது.

துளித் துளியாய்...

15 நிமிடங்கள் கழித்து... சுட்டிகளில் சிலர் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் சாக்லேட்டைச் சாப்பிட்டுவிட்டனர். தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்கள், இரண்டு சாக்லேட்களுடன் ஜாலியாகச் சென்றனர்.

இந்த 30 சுட்டிகளையும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிச் சென்றபோது, சில தகவல்கள் கிடைத்தன. யாரெல்லாம் சாக்லேட்டை உடனே சாப்பிடாமல் பொறுமைகாத்தார்களோ... அவர்கள், பள்ளியில் நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

இன்னொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைச் சந்தித்தபோது, 25,26 வயதிலேயே உயர் பதவிகளில் நல்ல சம்பளத்தில் இருந்தனர். தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சாக்லேட்டை உடனே வாயில் போட்டுக்கொண்டார்களே... அவர்கள் சாதாரண வேலையில் குறைந்த ஊதியம் வாங்குபவர்களாக இருந்தனர்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆராய்ச்சி இது. சுய கட்டுப்பாட்டுடன் கூடிய சேமிப்புப் பழக்கத்தின் மகத்துவத்தைச் சொல்கிறது, இந்த ஆராய்ச்சியின் முடிவு.

பணம்... நாம் காலையில் எழுவதில் தொடங்கி இரவில் தூங்கப்போகும் வரை ஒவ்வொரு விஷயத்துக்கும் அவசியம். சரி, சுட்டிகளாகிய நமக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்? நாம் பணம்பற்றித் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது?

நிச்சயம் இருக்கிறது. பள்ளியில் நீங்கள் கணக்குப் பாடம் கற்பது ஏன்? பின்னால், வாழ்க்கையில் பல இடங்களில் கணக்கு தேவைப்படும் என்றுதானே?  ஆங்கிலம், இந்தி, ஃபிரெஞ்ச், ஜெர்மன்கூடக் கற்றுக்கொள்கிறீர்கள். ஏன்? பிற்காலத்தில் வேலை காரணமாக ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு போகும்போது உதவியாக இருக்கும் என்றுதானே?

துளித் துளியாய்...

அதுபோலத்தான் பணத்தை நிர்வகித்தலும். வாழ்க்கையின் எல்லாச் சூழல்களிலும் பணத்தைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதில் இப்போதே அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டு, பழகிப் பார்த்து, சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக்கொண்டால், நாளை பணம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் கோட்டைவிடாமல் இருப்பீர்கள்.

சரி, நிறையப் பணம் கையில் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதோ ஒரு ஜாலியான புராஜெக்ட். ஒரு வெள்ளைத்தாளை எடுங்கள். இந்தக் கேள்விக்குப் பதில் எழுதுங்கள்...

'உங்களுக்குத் திடீரென்று 1,000 ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? எப்படி எல்லாம் செலவழிப்பீர்கள்?’

உங்கள் ஆசைகளை எல்லாம் அந்தத் தாளில் எழுதுங்கள். பிறகு, அந்தத் தாளைக் கச்சிதமாக மடித்து, உங்கள் நோட்டுப் புத்தகத்துக்குள் வைத்துவிடுங்கள். நீங்கள் எழுதியவற்றை வைத்தே உங்களுடைய திறமையை எடைபோடப் போகிறேன். அதற்கு, அடுத்த இதழ் வரை காத்திருங்கள்.

            (பழகுவோம்...)

 மில்லியனர் ஆன பில்லியனர்!

துளித் துளியாய்...

சேமிப்பு எப்படி முக்கியமோ, அதைப் போலவே பிறருக்குச் சரியான வகையில் உதவுவதும் சிறப்புக்கு உரியது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்.

'ஹாரி பாட்டர்’ கதைகளுக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவுக்கு சர்வதேச அளவில் ஹிட். கதைகள் எழுதி, பில்லியனர் ஆன உலகின் முதல் பெண் எழுத்தாளர். ஆரம்பக் காலத்தில் வறுமையில் வாடியவரின் நாவல்களை வெளியிட யாருமே முன்வரவில்லை. தொடர் முயற்சியில் ஒரு பதிப்பகம் வெளியிட்டது. பிறகு, புகழின் உச்சத்துக்குச் சென்றதோடு, கோடிக்கணக்கான வருவாயும் கிடைத்தது.

பில்லியனர் (1 பில்லியன் = 100 கோடி; 1 மில்லியன் = 10 லட்சம்) எழுத்தாளராகத் திகழ்ந்த அவர், தனது பணத்தைப் பல வகைகளில் ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார். அதனால், பில்லியனர் என்ற அந்தஸ்தில் இருந்து மில்லியனர் ஆனார். ஆனாலும் ''நம் தேவைக்கு அதிகமாகப் பணம் வரும்போது, சமுதாயத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியது கடமை' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் ரௌலிங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு