Published:Updated:

நெட்டிஸம் - டைப்பிங் பழகலாம் வாங்க !

சைபர்சிம்மன், ஆ.முத்துக்குமார்

நெட்டிஸம் - டைப்பிங் பழகலாம் வாங்க !

சைபர்சிம்மன், ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

முன்பு எல்லாம் டைப்பிங் கற்றுக்கொள்ள, தனியே பயிற்சி வகுப்புக்குச் செல்வார்கள். இப்போது, அது மிகவும் குறைந்துவிட்டது.

கணிப்பொறி வந்த பிறகு டைப்ரைட்டர் தேவையில்லாமல் ஆகிவிட்டது. ஆனால், டைப் செய்வதற்கான தேவையும் முக்கியத்துவமும் அப்படியேதான் இருக்கிறது. பலரும் டைப்பிங் வகுப்புக்குச் செல்லாமல், தாங்களாகவே கணிப்பொறியில் தட்டுத்தடுமாறி டைப்பிங் பழகிவிடுகின்றனர்.

உங்களில் பலரும் இணையத்தில் கூகுள், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களைப் பயன்படுத்தி, ஓரளவு டைப்பிங் பழகியிருப்பீர்கள். கீ-போர்டில் எழுத்துகளைத் தேடித் தேடி அடிக்காமல், தானாகவே கைகள் சரியான எழுத்துகள் மீது படிந்து, நினைக்கும் வாக்கியங்களைச் சுலபமாக டைப்செய்வதே சிறந்தது. அதற்காகத் தனியே வகுப்புக்குச் செல்ல வேண்டியது இல்லை. இணையத்திலேயே டைப் செய்யக் கற்றுக்கொள்ளலாம்.

டைப் செய்யக் கற்றுத்தருவதற்காக சில   வலைதளங்கள் உள்ளன. இவற்றில், சிறுவர்களுக்காக சிறப்புப் பயிற்சி அளிக்கும் தளங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

நெட்டிஸம் - டைப்பிங் பழகலாம் வாங்க !

சுட்டிகளுக்கான டைப்பிங் தளங்களின் சிறப்பம்சம், டைப்பிங் பயிற்சியை ஒரு விளையாட்டுப் போலவே சுவாரஸ்யமாகக் கற்றுத்தருவதுதான். பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி. சார்பில் அமைக்கப்பட்டு உள்ள டைப்பிங் பயிற்சித்தளம், இதற்கு அழகான உதாரணம்.

டான்ஸ் மேட் டைப்பிங் (Dance Mate Typing - http://www.bbc.co.uk/schools/typing/flash/stage1.shtml)   எனும் பெயரிலான இந்தப் பயிற்சித் தளம், கம்ப்யூட்டர் கீ-போர்டிலான விளையாட்டுப் போலவே உள்ளது. பல்வேறு நிலைகளைக்கொண்ட இந்தப் பயிற்சியில் நம்மை அறியாமலேயே டைப்பிங் கற்கலாம்.

முதல்நிலைப் பயிற்சியில் கீ-போர்டில் உள்ள நடு வரிசை எழுத்துகளை எளிதாக அறியவைக்கின்றன. இந்த நிலையில், திரையில் வரிசையாக நடு வரிசை டைப்பிங் எழுத்துகளான A, S, D, F ஆகியவை தோன்றுகின்றன. அவற்றின் மீது கைவிரல்கள் இருப்பதுபோன்ற உருவமும் திரையில் தோன்றுகிறது. முதலில் F என்னும் எழுத்தை டைப் செய்யுங்கள் என்னும் கட்டளை வருகிறது. அந்த எழுத்தைத் தேடி டைப் செய்தால், திரையில் F எழுத்து மின்னுகிறது. அடுத்ததாக, J எழுத்தை டைப் செய்யக் கட்டளை வருகிறது. அந்த எழுத்தும் மின்னுகிறது. இப்படி, ஒவ்வோர் எழுத்தாகத் தோன்றும். அவை தோன்றும் வரிசையும் மாறுகின்றன. நடுவே, ஸ்பேஸ் பார் (Space Bar) பயன்பாட்டுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நெட்டிஸம் - டைப்பிங் பழகலாம் வாங்க !

சில நிமிடங்கள் நீடிக்கும் இந்தப் பயிற்சியின்போதே உங்கள் கைவிரல்கள் தானாக நடு வரிசை எழுத்துகளுக்குப் பழகிவிடும். பிறகு, அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறிச் செல்லலாம். ஒவ்வொரு நிலையும் கீ-போர்டு விளையாட்டுப் போலவே சுவாரஸ்ய‌மாக இருக்கும். அத்துடன், வண்ணமயமான வடிவமைப்பும் கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது.

டான்ஸ் மேட் டைப்பிங் போலவே ஏபிசியா (Abcya - -http://www.abcya.com/kids_typing_games.htm) 160; என்ற வலைதளமும் பல வகையான டைப்பிங் விளையாட்டுகள் மூலம் டைப்பிங்கில் தேர்ச்சிபெறவைக்கிறது. இதில், கோஸ்ட் டைப்பிங் என்னும் விளையாட்டு சூப்பர். இந்த விளையாட்டில், திரையில் ஆங்கில வார்த்தைகள் பேய் போன்ற உருவத்தில் தோன்றிக்கொண்டே இருக்கும். கீ-போர்டில் அவற்றுக்கான எழுத்துகளை டைப் செய்தால், அந்தப் பேய்... அதாவது வார்த்தைகள் மறைந்து, வேறு வார்த்தைகள் தோன்றும். சுவாரஸ்யமாக விளையாடிய‌படியே வார்த்தைகளை விரைவாக டைப் செய்யக் கற்றுக்கொள்ளலாம்.

நெட்டிஸம் - டைப்பிங் பழகலாம் வாங்க !

லேர்னிங் கேம்ஸ் ஃபார் கிட்ஸ் (Learning games for kids http://www.learninggamesforkids.com/keyboarding_games.html) என்ற தளமும் டைப்பிங் கற்பதற்கான பல்வேறு விளையாட்டுகளைத் தருகிறது. டைப்பிங் சவால், டைப்பிங் பயிற்சி எனப் பலவித அம்சங்கள் கவர்ந்து இழுக்கின்றன. இதுபோல், கிட்வேர் சாஃப்ட்வேர் (Kidware software - http://www.kidwaresoftware.com/kidtype.htm)தளமும் டைப்பிங்குக்கு தனிப் பகுதியை உருவாக்கியுள்ளது.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாமே ஆங்கில டைப்பிங் கற்றுக்கொள்வதற்கான தளங்கள். தமிழில் டைப்பிங் கற்கும் தளமும் உள்ளது. ஆசான் (http://download.cnet.com/Aasaan-Tamil-Typing-Tutor/3000-2051_4-10844838.html ) மற்றும் Tavultesoft (http://www.tavultesoft.com/tamil/)உள்ளிட்ட தளங்களை நாடலாம்.