Published:Updated:

நாம் அனுமதிக்காமல் எதுவும் நம்மைத் திசை திருப்பாது !

ஆ.முத்துக்குமார், பா.கார்த்திக்

நாம் அனுமதிக்காமல் எதுவும் நம்மைத் திசை திருப்பாது !

ஆ.முத்துக்குமார், பா.கார்த்திக்

Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ் டீம்

##~##

டியர் ஃப்ரெண்ட்ஸ்... நாங்கதான் புது சுட்டி ஸ்டார்ஸ். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் அஸைன்மென்ட் என்ன தெரியுமா? 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தப் பயிற்சித் துறையின் அரசு முதன்மைச் செயலருமான முனைவர் வெ.இறையன்பு  அவர்களைப் பேட்டி எடுப்பது. அவர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல பணிகளை வகித்துள்ளார். 30-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். எங்களின் கேள்விகளுக்கு அவர் கருத்துச் செறிவோடும் நகைச்சுவையோடும் பதிலளித்தார்.

 'நீங்கள் எதற்காக கலெக்டர் ஆனீர்கள்?'

'மக்களைச் சந்தித்துக் கலந்து பேசுவதற்கும், நிறையப் பயணங்கள் செய்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும், பல்வேறு விதமான அனுபவங்களைப் பெறுவதற்கும் கலெக்டர் ஆனேன். என்னால் இயந்திரங்களோடு பணியாற்ற முடியாது. இதயங்களோடு மட்டுமே பணியாற்ற முடியும்.'

'முதன்மைச்  செயலரான உங்களின் பணிகள் என்னென்ன?''

'அரசு ஊழியர்களுக்கும் ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கும் பயிற்சி கொடுப்பது.'

'உங்களுடைய கல்லூரி நாட்கள்பற்றி...'

நாம் அனுமதிக்காமல் எதுவும் நம்மைத் திசை திருப்பாது !

'நான் படித்தது வேளாண் கல்லூரி. அது ஒரு மகிழ்ச்சிக் காலம். 750 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்தக் கல்லூரி, மிக அழகாகவும் எங்களுக்குப் பயனுள்ளதாகவும் இருந்தது. எல்லாமே மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது.      'நிமீஸீவீus பீஷீமீsஸீ’t நீஷீனீமீ வீஸீ ஹ்ஷீuக்ஷீ நிமீஸீமீs’. கல்லூரிக்குள் கல்லாகச் சென்றேன், சிற்பமாக வந்தேன்; காகிதமாகச் சென்றேன், கவிதையாக வந்தேன்.'

'நீங்கள் தமிழை அழகாகவும் தெளிவாகவும் பேசுகிறீர்களே... உங்களுக்கு  தமிழ்ப்பற்றை யார் ஊட்டினார்கள்?'

'நீங்கள் என்னிடம் தமிழில் கேள்வி கேட்பதால், தமிழில் பேசுகிறேன்.  ஆங்கிலத்தில் கேட்டால், தெளிவான ஆங்கிலத்தில் பதில் சொல்வேன். இந்தியில் கேட்டால், தெளிவான இந்தியில் பேசுவேன். நான் பேசியது தமிழ்ப்பற்றினால் அல்ல. ஒரு மொழியைப் பேசும்போது ஒழுங்காகப் பேச வேண்டும் என்ற ஒழுக்கத்தினால்தான்.'

நாம் அனுமதிக்காமல் எதுவும் நம்மைத் திசை திருப்பாது !

''உங்களின் இன்ஸ்பிரேஷனாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?'

'நிறையப் பேர் இருக்கிறார்கள். சில நேரம்  மரத்தைப் பார்த்து அவற்றின் தாக்கத்தை உள்வாங்கிக்கொள்கிறேன். ஏனென்றால், கல்லால் அடித்தவனுக்கும் கனி தருகிறது மரம். அதேபோல கசக்கியவர்களுக்கும் மணம் தருகின்றன மலர்கள். இப்படிப் பலவற்றிலிருந்தும் தொடர்ந்து கற்று, புதிய சிந்தனையைப் பெற்றுக்கொள்கிறேன்.'

'ஒரு குழந்தையின் திறமை மரபால் நிர்ணயிக்கப்படுகிறதா?'

'உங்கள் கையில், வாழ்க்கை ஒரு பளிங்குக்கல்லாகக் கொடுக்கப்படுகிறது. அதை நீங்கள் எப்படிச் செதுக்குகிறீர்களோ, அதைப் போலவே வாழ்க்கை அமைகிறது. பிறப்பினால் எதுவுமே வருவது இல்லை.'

'ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?'

'ஒரு நல்ல ஆசிரியர், எப்படி வாழவேண்டும் எனச் சொல்வார். ஒரு மகத்தான ஆசிரியர், எப்படி வாழ்ந்தால் நல்லது என நிரூபிப்பார். ஒரு குரு, எப்படி வாழணும் என வாழ்ந்தே காட்டுவார்.'

நாம் அனுமதிக்காமல் எதுவும் நம்மைத் திசை திருப்பாது !

'உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார்?'

'' 'சரஸ்வதி என்ற ஆசிரியர். அவருக்குத் தற்போது வயது 95. அவரோடு இப்போதும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கிறேன்.'

'உங்கள் பொழுதுபோக்கு என்ன?'

'முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பொழுதுபோக்கு வேறு, பொழுதாக்கம் வேறு. பொழுதுபோக்கு என்றால், என்டர்டெயின்மென்ட். பொழுதாக்கம் என்றால், ஹாஃபி. திரைப்படங்கள் பார்ப்பது, ஜாலியாக இருப்பது, அரட்டை அடிப்பது, நண்பர்கள் மத்தியில் மிமிக்ரி பண்ணுவது என்பவை என் பொழுதுபோக்கு. எழுதுவது, படிப்பது என்னுடைய ஹாபி.'

'குழந்தைத் தொழிலாளர்கள்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

'குழந்தைகள் தொழில் செய்வது குற்றமல்ல, அது ஒரு பாவம். எனவே, அதை ஒழிப்பதுதான் நன்று. நான் பணிபுரிந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் குழந்தை நெசவுத் தொழிலாளர்களாக இருந்தனர். அப்போதே அதை, ஒரு மாதத்துக்குள் 1000-மாகக் குறைத்தோம்.'

நாம் அனுமதிக்காமல் எதுவும் நம்மைத் திசை திருப்பாது !

'இன்டர்நெட்டைப் பறைசாற்றும் நாம், பழம்பெரும் வரலாறுமிக்க தந்தி மூடுவிழா காண்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'

'காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும். வல்லுனர்கள், அதற்கான செலவு மற்றும் நேரத்தைக் கணக்கில்கொண்டு  இந்த முடிவை எடுத்துள்ளனர். அது சரியான முடிவுதான்.'

'மாணவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதாக எதையெல்லாம் நினைக்கிறீர்கள்?'

'இந்தக் காலத்துக் குழந்தைகளைத் திசைதிருப்புவது ஊடகம், கணினி மற்றும் செல்போன். ஆனால், காந்தி சொன்னதுபோல் (நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் அவமானப்படுத்த முடியாது - காந்தி) நாம் அனுமதிக்காமல் எதுவும் நம்மைத் திசைதிருப்புவது இல்லை.'

'நீங்கள் மாணவர்களுக்குச் சொல்ல விரும்புவது?'

'இந்த வயதில் கல்வியும் ஒழுக்கமும் மிகவும் முக்கியம். அதேசமயம், விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும்.'

'நட்பைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?'

'நட்பு மிக உயர்ந்தது. அதைப் பற்றி உங்களுக்கு ஒரு கதை சொல்லுகிறேன்.

கருணாகரன் என்ற ஒருவர் அரசாங்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்ததனால், மன்னர் அவரைத் தூக்கிலிடச் சொன்னார். கருணாகரன், 'எனக்கு முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது. அதற்காக அனுமதி கொடுங்கள். 10 நாட்களில் திரும்பி வந்துவிடுவேன்’ என்றார். அதற்கு அரசன், 'உன்னை அனுப்ப வேண்டுமென்றால், உனக்குப் பதில் வேறு யாரையாவது விட்டுச்செல். 10-வது நாள் நீ வரவில்லை என்றால், அவனைத் தூக்கிலிடுவேன்’ என்றார். கருணாகரனுடைய நண்பன் லட்சுமணன், 'நண்பா நீ சென்று வா’ என்றான். சரி என்று கிளம்பினான் கருணாகரன். 10-வது நாள், கருணாகரன் வரவில்லை. 'நான் அன்றே கூறினேன் அல்லவா. உன் நண்பன் உன்னை ஏமாற்றி விட்டான்’ என்றான் அரசன். அதற்கு லட்சுமணன், 'சீக்கிரமாக என்னைத் தூக்கிலிடுங்கள். இல்லையேல், அவன் வந்து விடுவான்’ என்றான். தூக்கு தயாராகிவிட்டது. தொலைவில் ஒரு குரல், 'நிறுத்துங்கள்’ என்று கருணாகரன் ஓடி வருகிறான். 'நண்பா, நான் வந்துவிட்டேன், நீ கீழே இறங்கு’ என்றான். லட்சுமணனோ, 'இல்லை, நீ திரும்பிச் செல்’ என்றான். இவர்களுடைய நட்பின் ஆழத்தைக் கண்ட மன்னன், இருவரையும் விடுதலை செய்தார். நட்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.'

'உங்களின் நிறைவேறாத ஆசை என்ன?'

'எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஆசைகள் நிறைவேற்றப் படாததிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. ஏனென்றால், எல்லா ஆசைகளும் நிறைவேறி விட்டால், வாழ்க்கையில் சுவை இருக்காது.'

மேலும் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தவர், 'பேனா பிடிக்கலாம் பயிற்சியின் மூலம் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்’ எனச் சொல்லி இன்முகத்துடன் விடைபெற்றார்.