Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப் கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப் கான்

Published:Updated:
##~##

''ஹாய் ஜீபா... கடலிலிருந்து மட்டும்தான் உப்பு எடுக்க முடியுமா?''

    - டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

''அதிகமாக கடல் நீரிலிருந்துதான் உப்பு எடுக்கப்படுகிறது. இது தவிர, நிலத்தில் ஆழமாகச் சுரங்கம் தோண்டியும் உப்பு எடுக்கப்படுகிறது. வட இந்தியாவின் பல பகுதிகளில் இப்படி எடுக்கிறார்கள். அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உப்பு நீர்க் கிணறுகளிலிருந்து உப்பை எடுக்கிறார்கள். உப்புத்தன்மை அதிகம்கொண்ட ஏரிகளிலிருந்தும் உப்பை எடுக்க முடியும். உலகின் மிகப் பெரிய  சாக்கடல் ஏரியிலிருந்து 100 கோடி டன்னுக்கும் மேற்பட்ட உப்பை எடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதில் உணவுப் பயன்பாட்டுக்கு, வேதியியல் பயன்பாட்டுக்கு எனப் பல வகை உண்டு.''

''டியர் ஜீபா... சனிக் கோளைக் குறிப்பிடும்போது அதனைச் சுற்றி வட்டம் போடுவது ஏன்?''

   - வெ.சரவணன், திண்டுக்கல்.

''ஆரம்பக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் கோள்களைக் கவனித்தபோது, சனிக் கோளைச் சுற்றி வளையம் இருந்தது. அவை, சிறிதும் பெரிதுமான உடைந்த விண்கற்கள் என்பது தெரிந்தது. எனவே, கோள்களுக்கான வரைபடத்தை உருவாக்கியபோது, சனியைச் சுற்றி வளையம் வரைந்தார்கள். பிறகு, சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளைக் கண்டுபிடித்ததும் யுரேனஸ் மற்றும் வியாழன் கோள்களைச் சுற்றியும் வளையம் இருப்பது தெரிந்தது. ஆனாலும், குழப்பம் வேண்டாம் என அவற்றை வரைபடத்தில் சேர்க்கவில்லை.''

மை டியர் ஜீபா !

''சந்தன மரத்தை வெட்டுவது குற்றம் என்கிறார்கள்... மற்ற மரங்களை வெட்டினால் தவறில்லையா ஜீபா?''

   - எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.

''சந்தன மரத்தின் தாயகம் இந்தியா. உலக அளவில் 65 சதவிகித சந்தன மரங்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் வளர்கின்றன. நறுமணப் பொருட்கள் தவிர, இதன் எண்ணெய் மருத்துவப் பயன்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது. அரசாங்கத்தைத் தவிர, தனி மனிதர்கள் சந்தன மரத்தை வளர்க்கவோ, வெட்டவோ அனுமதி இல்லை. அரசாங்கமே முறையாக வெட்டி விற்பனைக்கு அனுப்பும். எனவே, பணத்துக்கு ஆசைப்பட்டு, சிலர் ரகசியமாக வெட்டுவார்கள். அதுதான் பரபரப்பாக செய்தித்தாள்களில் இடம்பெறுகிறது. காடுகளிலோ, பொது இடங்களிலோ உள்ள எந்த மரமாக இருந்தாலும் அதை வெட்டினால், சட்டப்படி குற்றமே.''

''ஹாய் ஜீபா... கேப்டன் யாரும் இல்லாமலே செல்கிற கப்பல்கள் உண்டு என்று நண்பன் சொல்கிறான். அது உண்மையா?''

   - எஸ்.ராமகிருஷ்ணன், சூலூர்.

மை டியர் ஜீபா !

''உன் நண்பன் சொல்வது உண்மைதான் ராமகிருஷ்ணன். 1964-ல் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு இயக்கப்பட்ட மோர்மகார்கோ என்ற 12,000 டன் எடையுள்ள கப்பல்தான் முதல் தானியங்கிக் கப்பல். இதில், நவீன சுழல் காம்பஸ் ஒன்று, ரேடாருடன் இணைக்கப்பட்டது. கணிப்பொறி மூலம் செல்ல வேண்டிய இடம் பதிவுசெய்யப்பட்டது. எதற்கும் இருக்கட்டும் என ஒரு மாலுமியை அனுப்பினார்கள். அவர், ஓட்டுனர் அறையில் கைகட்டி வேடிக்கைப்பார்த்தார். இந்தக் கப்பல் கடலில் செல்லும்போது, எதிரே வருகிற கப்பல் மற்றும் பாறைகளைக் கண்டறிந்து விலகிச் சென்று சரியான இலக்கை அடைந்தது. இப்போது இன்னும் நவீனமான தானியங்கிக் கப்பல்கள் வந்துவிட்டன. கேப்டனே தேவை இல்லை. மழை, புயல் போன்ற இயற்கைச் சூழ்நிலைக்கு ஏற்பத் தானாக நின்று, பிறகு சரியான பாதையில் செல்லும்.''

''டியர் ஜீபா... உலகிலேயே மிகப் பெரிய நகரம் எது?''

   - செ.பாலமுருகன், பழநி.

மை டியர் ஜீபா !

''சீனாவின் ஷாங்காய் நகரம்தான் உலகின் மிகப் பெரிய நகரம். இதன் பரப்பளவு 2,717 சதுர மைல். உலகின் மிகப் பெரிய வணிக நகரமாகவும் விளங்கும் ஷாங்காய் நகரின் மக்கள்தொகை, கிட்டத்தட்ட இரண்டு கோடி.''

''ஹலோ ஜீபா... பகல் நேரத்தில் கடற்கரைக்குச் சென்றால், மணல் சூடாக இருக்கிறது. ஆனால், தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறதே எப்படி?''

   - பி.நிதிஷா, புதுச்சேரி.

''நீரைவிட மணலுக்கு வெப்ப ஏற்புத் திறனும் வெப்ப இழப்புத் திறனும் அதிகம். காரணம், மண் துகள்களுக்கு இடையே இருக்கும் இடைவெளிகளில் ஒளி  ஊடுருவும். அதேபோல் வெளியேறும். எனவே, மணல் வேகமாக சூடாகி, வேகமாக குளிர்ந்துவிடும். ஆனால், நீர் சூடாக நேரம் பிடிக்கும். குளிர்வதற்கும் நேரம் எடுத்துக்கொள்ளும். அது சரி, நீ ஏன் பகலில் கடற்கரைக்குச் செல்கிறாய்? மாலையில் செல்வதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது நிதிஷா!''