Published:Updated:

ஒவ்வொரு மாணவருமே உலக சாதனையாளர் !

கலக்கும் கடலூர் பள்ளி நா.இள.அறவாழி, எம்.ராதாகிருஷ்ணன் எஸ்.தேவராஜன்

##~##

'கராத்தே’ என்றாலே, 'யா ஹூ...’ என்ற சத்தம், நம் நெஞ்சுக்குள் அதிரும். அந்த கராத்தேயில் உலக அளவில் சாதனை நிகழ்த்திவிட்டு சந்தோஷத்தில் மிதக்கிறார்கள், கடலூரில் உள்ள சி.கே. பள்ளி மாணவர்கள்.

சமீபத்தில், இந்தப் பள்ளியின் 809 மாணவர்களைக்கொண்டு, கராத்தேயில் மிகக் கடினமான பிரிவான டெயிக்கோ கோ ஷோடான் என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து, அதனை 30 நொடிகளில் செய்துகாட்டி சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன், கனடாவின் ஓன்ட்டோரியோவில் 82 பேர் செய்ததே உலக சாதனையாக இருந்தது.

கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரி நிகில் சுக்லா கையால் பரிசு பெற்ற உற்சாகத்துடன் பேசிய மாணவர்கள், ''நாங்க கின்னஸ் சாதனை செய்தது, ரொம்பப் பெருமையாக இருக்கு. இதற்காக இரண்டு மாதம் பயிற்சி எடுத்தோம். தினமும் பள்ளி முடிஞ்சதும் கராத்தே பயிற்சிதான். கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் இது'' என்றார்கள்.

பிள்ளைகளுக்கு கராத்தே கற்றுக்கொடுத்த சென்ஷாய் கிருஷ்ணனிடம் பேசியபோது, ''இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை கராத்தே பயிற்சி உள்ளது. வெயில், மழை பாராமல் கடுமையான பயிற்சி மேற்கொள்ளும்போது சில சிரமங்களைச் சந்தித்தோம். அவர்கள் கற்றுக்கொண்ட 'டெயிக்கோ கோ ஷோடான்’,   புத்துணர்ச்சியையும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான புதிய வேகத்தையும் கொடுக்கும். முக்கியமாக, ஞாபகசக்தியை அதிகரிக்கும்'' என்றார்.

ஒவ்வொரு மாணவருமே உலக சாதனையாளர் !

இந்தப் பள்ளி, ஏற்கெனவே பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. இதுகுறித்து பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சுஜிவிஜய பாலையாவிடம் பேசினோம். ''கல்வியுடன் கூடிய பலவிதக் கலைகளை இங்கே கற்றுத்தருகிறோம்.  2012-ல் 650 மாணவர்களுடன் முள்ளங்கியில் கார்விங் மூலம் மலர்கள் செய்தோம். இதற்காக டன் கணக்கில் முள்ளங்கி வாங்கி, 10 நிமிடங்களில் 26 ஆயிரம் மலர்களைச் செதுக்கி, லிம்கா சாதனை செய்தோம். அதுவே எங்களின் முதல் சாதனை. அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தி, யோகாவில் உள்ள

ஒவ்வொரு மாணவருமே உலக சாதனையாளர் !

கடினமான ஆசனங்களை 697 சுட்டிகள் 48 நிமிடங்களில் மிக நீண்ட யோகா சங்கிலியாக  நிகழ்த்தினார்கள். அந்த உற்சாகத்தில்தான் இந்த கராத்தே சாதனையையும் செய்ய முடிந்தது'' என்றார்.

பள்ளியின் முதல்வர் தார்சியஸ், ''இங்கு கல்வியை வெறும் பாடமாகப் படிக்காமல், அதனை செய்முறைகளோடு கற்கின்றனர். இசை, ஓவியம், கராத்தே, யோகா, சமையல், கார்விங் என அனைத்துத் துறை சார்ந்த ஆசிரியர்களும் உள்ளனர். அதனால், பாடத்தோடு கூடுதலாக ஒரு கலையும் கற்றுக்கொள்கின்றனர். மதியம் வரைதான் பள்ளிப் பாடம். அதற்கு மேல் அவர்களுக்குப் பிடித்த துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். பன்முகத் திறன் அறிவுக்கான எட்டு முக்கிய அம்சங்களைத் தயாரித்து, அதன்படி கற்றுக்கொடுக்கிறோம். மேலும், ஆண்டுக்கு ஒரு கின்னஸ் சாதனை செய்கிறோம். ஒவ்வொரு மாணவரும், எங்கள் பள்ளியைவிட்டுச் செல்லும்போது, அவர்களிடம் நான்கு உலக சாதனைகள் செய்ததற்கான சான்றிதழ்கள் நிச்சயமாக இருக்கும்'' என்கிறார் பூரிப்போடு!

''படிக்கும்போதே எங்கள் மாணவர்கள் சம்பாதிக்கின்றனர். உலகத் தரத்திலான கல்வியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றுசேரும் விதமாக அளித்துவருகிறோம். பிள்ளைகளிடம் தாழ்வுமனப்பான்மையைப் போக்கி, தன்னம்பிக்கையை விதைக்கிறோம். இங்கு உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நண்பர்கள்தான்.எல்லோரிடமும் நட்போடுதான் பழகுகிறார்கள்.'' என்கிறார் சி.கே.கல்விக் குழுமத்தின் இயக்குநர் சந்திரசேகரன்.

இந்த நட்புடனான அணுகுமுறை இருந்தால் போதும், மேலும் பல கின்னஸ் சாதனைகள் பள்ளிக் கதவைத் தட்டும் நிச்சயமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு