பிரீமியம் ஸ்டோரி
பென் டிரைவ் !
பென் டிரைவ் !
##~##

சாதாரண ஊஞ்சலில் ஆடும்போதே சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அமெரிக்காவில் உள்ள கிலென்வுட் காவெர்ன்ஸ் அட்வென்சர் பூங்காவில் (Glenwood Caverns Adventure Park) அமைத்து இருக்கும் இந்தப் பிரமாண்ட ஊஞ்சலின் பெயர், 'தி ஜெயன்ட் கான்யான் ஸ்விங்’. 1,300 அடி உயரம்கொண்ட மலையில் அமைத்து இருக்கும் இந்த ஊஞ்சலில் நான்கு பேர் அமரலாம். இதில் ஆடும்போது ஆகாயத்தில் பறப்பது போலவே தோன்றும். அவ்வளவு உயரத்தில் இருந்து சுற்றி உள்ள மலைகளையும் கீழே ஓடும் கொலராடோ நதியையும் பார்த்து ரசிக்கலாம்.

பென் டிரைவ் !

புதுப்புது வகைகளில் புறப்பட்டுவரும் ரோபோக்கள் வரிசையில், உரையாடும் ரோபோவை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். விண்வெளியில் ஆராய்ச்சியாளர்களின் பேச்சுத் துணைக்காக உருவாக்கியிருக்கும் இதன் பெயர், 'கீரோபோ’. 13.5 இஞ்ச் உயரமும் ஒரு கிலோ எடையும் கொண்டது. இந்த ரோபோ, மனிதனின் குரல் மற்றும் உணர்ச்சிகளைக் கண்டறிதல், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஜப்பானிய மொழியில் பேசுதல் போன்றவற்றைச் செய்யும். இதனிடம் 'உன்னுடைய கனவு என்ன?’ என்று கேட்டால், 'மனிதர்களும் ரோபோக்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் உலகத்தை உருவாக்குவதே எனது லட்சியம்!’ என்கிறது.

பென் டிரைவ் !

சீனாவின்  உபுலிகாசிமு (Aisikaier Wubulikasimu) அந்தரத்தில் கயிற்றின் மீது நடப்பதில் கில்லாடி. உயர்ந்த கட்டடங்கள், மலைகள் இவற்றுக்கு இடையே பல முறை நடந்து சாதனை புரிந்திருக்கிறார். இப்போது, யுனான் மாகாணத்தில் இரண்டு ஏர் பலூன்களை  108 அடி உயரத்தில் நிறுத்தி, அதன் இடையே 2 இஞ்ச் அகலமும் 18 மீட்டர் நீளமும்கொண்ட இரும்புக் குழாய் மீது நடந்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார் உபுலிகாசிமு.

பென் டிரைவ் !

ரகசியம் பேசுவதுபோல காட்சியளிக்கும் இந்த டைனோசர்களைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது. சீனாவின் வடக்கே இருக்கும் எரென்ஹாட் (Erenhot) நகரின் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி அமைத்து இருக்கிறார்கள். இந்த நகரத்தில் டைனோசர் மியூஸியம், டைனோசர் பார்க் உள்ளன என்பதைத் தெரிவிக்கவே, இந்த டைனோசர் சிற்பங்களை உருவாக்கியுள்ளது, அந்த நாட்டின் சுற்றுலாத் துறை. இதன் உயரம் 62 அடி, அகலம் 111 அடி.

பென் டிரைவ் !

ஜூலை 29 அன்று உலகப் புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. கோவில்பட்டி, பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில், கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'அழிந்துவரும் புலிகளைக் காக்க வேண்டும்!’ என்று மாணவியர்கள், புலி முகமூடி அணிந்து உறுதிமொழி எடுத்தனர். வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை முற்றிலுமாக தடைசெய்வதோடு, நமது தேசிய விலங்காகிய புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று  விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்கள்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு