Published:Updated:

துளித் துளியாய்...

தண்மதி திருவேங்கடம், எஸ்.சாய் தர்மராஜ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், அஞ்சலகத்தில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்தும், நகர்ப்புற மாணவர்கள் வங்கிகளில் சேமிக்கும் வசதிகள் பற்றியும் பார்த்தோம். இதைவிட எளிதான வழி ஒன்று இருக்கிறது. அதுதான் உங்கள் பள்ளியிலேயே சேமிப்பது.

துளித் துளியாய்...

இந்தச் சேமிப்புத் திட்டத்தின் பெயர் 'சஞ்சாயிகா’ (Sanchayika).. பள்ளிச் சிறுவர்களுக்குச் சேமிப்புப் பழக்கம் வர வேண்டும் என்று, மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் (National Savings Institute) தொடங்கிய திட்டம் இது. சுருக்கமாகச் சொன்னால், மாணவர்களுக்காக மாணவர்களே நடத்தும் வங்கிதான் சஞ்சாயிகா.

நம் ஆசிரியர்கள், பொதுத் தேர்வில் ரிசல்ட் காட்ட வேண்டும், கூட்டங்கள், ஆய்வறிக்கைகள், விழாக்கள் என்று ஆண்டு முழுவதுமே பிஸியாக இருப்பதால், பல பள்ளிகளில் இந்தத் திட்டம் பிரபலமாக இல்லை. ஆனால், இது மிகவும் எளிதான திட்டம். நீங்கள் நினைத்தால், உங்கள் பள்ளியிலேயே சேமிக்கலாம். பெற்றோரிடம் கலந்துபேசி அனுமதி வாங்குங்கள். அவர்கள் துணையுடன் உங்கள் தலைமையாசிரியரிடம் பேசுங்கள்.

உங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது முதல்வர், தேசிய சேமிப்பு நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுமதி வாங்க வேண்டும். உள்ளூரில் உள்ள சிறுசேமிப்புத் துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம்கூட அனுமதி பெறலாம். பள்ளிக் குழந்தைகளின் பண விவகாரம் என்பதால், யாராவது ஒரு மேலதிகாரிக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

சஞ்சாயிகாவைக் கவனித்துக்கொள்ள உங்கள் பள்ளியில் பொறுப்புக் குழு ஒன்று உருவாக்க வேண்டும். இன்சார்ஜ் குழுவில் பள்ளி முதல்வரோ, தலைமையாசிரியரோ தலைவராக இருக்க வேண்டும். மேற்கொண்டு பொறுப்புகளை எந்தெந்த ஆசிரியர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று கலந்துபேசி உருவாக்க வேண்டும். இந்த விஷயத்தில், உங்களில் சில மாணவர்களே சஞ்சாயிகா லீடர்ஸ் ஆகச் செயல்பட்டு, ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கும் உதவலாம்.

வீட்டு உண்டியலில் சேமிக்கும் பணத்தை, மாதம் அல்லது வாரம்தோறும் சஞ்சாயிகா பொறுப்பு ஆசிரியரிடமோ, சஞ்சாயிகா லீடரிடமோ கொடுக்க வேண்டும். இதற்கு பாஸ்புக், செக்புக் எல்லாம்

துளித் துளியாய்...

தருவார்கள். எந்தத் தேதியில் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று பதிந்துகொண்டு, உங்களுக்கும் பதிந்து கொடுப்பார்கள். ஆசிரியரிடம் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்துவிட்டது என்றால், அதை அஞ்சலகத்தில் கட்டிவிடுவார்.

வங்கி, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் இணைந்தால், என்னென்ன வசதிகள், வட்டி கிடைக்குமோ... அவையெல்லாம் இந்தத் திட்டத்திலும் கிடைக்கும். சேமித்த பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அதற்கு பெற்றோரின் அனுமதி வேண்டும்.

எந்த ஒரு செயலையும் தனியாகச் செய்வதைவிட, நண்பர்களுடன் இணைந்து செய்யும்போது உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இது, சஞ்சாயிகா சேமிப்புத் திட்டத்துக்கும் பொருந்தும். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டும் தூண்டிவிட்டுக்கொண்டும் நிறைய சேமிக்கலாம்.

நீங்களும் உங்கள் பள்ளியில் பேசிப் பாருங்களேன். நீங்களே சஞ்சாயிகா லீடர் ஆகி, மற்ற மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்துச் சேர்த்து விடுங்களேன். இதனால், உங்களுக்கும் வங்கியை எப்படி நடத்துவது, எப்படி லெட்ஜரில் கணக்கு வைப்பது, பணம் செலுத்துவது, எடுப்பது, வட்டிக் கணக்கு போடுவது என்று எல்லாமே பழகிவிடும். வாழ்க்கையில் எல்லாமே ஈஸிதான் என்று தோன்றும்!

துளித் துளியாய்...

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள அன்னபூர்ணாதேவி நகராட்சி உயர்நிலைப் பள்ளி, சஞ்சாயிகா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சாதனை புரிந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் சேமித்த பணம்,

துளித் துளியாய்...

3 லட்சம். அதாவது, ஆறாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் 2009-ல் இருந்து 2012 வரை சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த பணம். ஆச்சர்யமாக இருக்கிறதுதானே? மாணவர்கள் நினைத்தால், இத்தகைய பெருமையை உங்கள் பள்ளிக்கும் பெற்றுத்தர முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு