Published:Updated:

உலகின் பார்வை எங்கள் பக்கம் !

இந்தியாவின் இரும்புச் சுட்டிகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'பள்ளிக்குப் போனோமா... சொல்லித் தரும் பாடத்தை மனப்பாடம் செய்தோமா... வீடு திரும்பினோமா என்று மட்டுமே இருப்பது இல்லை. எங்கள் சிந்தனையால், செய்கையால் உலக அளவில் கவனத்தை ஈர்ப்போம்’ என்பதை நிரூபித்திருக்கிறார்கள் நமது இந்தியச் சுட்டிகள்.

நம் நாட்டில் ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதில், தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுகின்றன. அவற்றில் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது, கே.ஐ.எஸ்.எஸ்., எனப்படும் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ். பழங்குடியின மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கும் நோக்குடன் 1993-ல்  ஒடிஸா-வில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 125 மாணவர்களே கல்வி பயின்றனர். இப்போது, 20 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். ''எங்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில், 2 லட்சம் பழங்குடியின மாணவர் களுக்குக் கல்வி அளிப்போம்'' என்கிறார், இந்த அமைப்பின் நிறுவனர் அச்யுதா சமந்தா.

உலகின் பார்வை எங்கள் பக்கம் !

இந்தக் கல்வி நிறுவனத்தில் படித்து உலக அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார், ப்ளஸ் டூ முடித்த மாணவர் லஷ்மண் ஹெம்ப்ராம். ஒடிஸா-வின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் லஷ்மண். சமீபத்தில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் 'மலாலா தின இளைஞர் பேரவை’க் கூட்டம் நடந்தது. அதில், உலக நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கல்வி குறித்த இந்தச் சர்வதேசக் கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார் லஷ்மண்.

உலகின் பார்வை எங்கள் பக்கம் !

இதுபற்றி சொன்ன லஷ்மண், ''இது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நம் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்வி நிலையை உலகுக்குச் சொன்னேன். மலாலா, தனது கல்வி இயக்கத்தின் திட்டங்களை மிகச் சிறப்பாக விளக்கினார். அவரது முயற்சிக்கு, இந்தியா சார்பில் என்னால் முடிந்த பங்கினைத்தருவேன் என்று உறுதி அளித்தேன். நம் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகுப்பதே என் லட்சியம்'' என்றார்.

லஷ்மண் போலவே தனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் மூலம் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார், ரஸியா சுல்தான் என்கிற மாணவி.

உலகின் பார்வை எங்கள் பக்கம் !

பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்த மலாலாவை, மத வாதிகளான தாலிபான்கள், துப்பாக்கியால் சுட்டார்கள். அந்தச் சம்பவத்தையே தனக்குக் கிடைத்த உந்து சக்தியாகக்கொண்டு இன்னும் தீவிரமாக இயங்கிவருகிறார் மலாலா.

மலாலா-வின் இந்தத் துணிச்சலைக் கௌரவிக்கும் வகையில், ஜூலை 12-ம் தேதியை, 'மலாலா தினமாக’ அறிவித்தது ஐ.நா.சபை. 'மலாலா விருது’ என்றொரு விருதை உருவாக்கி, கல்விக்கான செயல்பாடு களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்போவதாக அறிவித்தது.

அதன்படி, இந்த ஆண்டு முதல், மலாலா விருது மற்றும் மலாலா சிறப்பு விருது இரண்டையும் பெற்றிருப்பவர்கள் இந்தியச் சுட்டிகள். மலாலா விருது பெற்ற ரஸியா சுல்தான், உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த 48 குழந்தைகளை மீட்டு, கல்வியைத் தொடர நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ரஸியா சுல்தானைப் போலவே பெங்களூருவைச் சேர்ந்த அஸ்வினி என்பவரும் மலாலா சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். பார்வைக் குறைபாடு உள்ளவர் அஸ்வினி, தன்னைப்போலவே பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கல்வியைத் தொடர விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார்.

இந்தச் சுட்டிகளின் சேவையால், இந்தியாவின் பெருமை உலக அளவில் உயர்ந்திருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் மலாலா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஸியா சுல்தானிடம் பேசியதில் இருந்து...

''நீங்கள் கடந்து வந்த பாதை...''

'

உலகின் பார்வை எங்கள் பக்கம் !

'உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீரட் மாவட்டத்தின் பல கிராமங்கள், கால்பந்துகள் மற்றும் நைலான் கயிறுகள் தயாரிப்புக்குப் பெயர் பெற்றவை. காரணம், இங்கேதான் குறைந்த கூலியில் வேலை செய்ய குழந்தைத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். இது, பல வருடங்களாக நடந்துவருகிறது. இது போன்ற கிராமங்களில் ஒன்றான 'நக்லா கும்பா’வில்தான் நான் பிறந்தது வளர்ந்தேன்.

என் அப்பா செங்கல் சூளையில் வேலைசெய்த போதிலும் என்னைப் படிக்கவைத்தார். நான் அரசுப் பள்ளியில் படித்தேன். மாலையில் வீட்டில் கால்பந்து தோல்களை வெட்டுவேன். இந்தச் சமயத்தில், எங்கள் பகுதியில் நடந்த குழந்தைத் தொழிலாளர்களைக் காக்கும் போராட்டத்தில் பங்கேற்றேன். கல்வி  பயிலாமல் பணிக்குச் செல்லும் சிறுவர்- சிறுமிகளின் வேதனையை உணர்ந்தேன்.''

''குழந்தைத் தொழிலாளர்களை மீட்ட அனுபவம் பற்றி...''

'' 'பச்பன் பச்சாவ் அந்தோலன்’ எனும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர் ஷேர்கான். இவர், குழந்தைத் தொழிலாளர் களை மீட்க வேண்டி, இந்தப் பகுதியின் 10 கிராமங்களைத் தத்து எடுத்தார். 2005-ல் 'குழந்தைகள் நலப் பஞ்சாயத்து’ ஒன்றை அமைத்தார். நான், அதன் உறுப்பினராகச் சேர்ந்தேன். எனது கிராமத்தில் இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர் களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறினேன்.

உலகின் பார்வை எங்கள் பக்கம் !

ஆரம்பத்தில் அவர்கள் என்னைப் பொருட்படுத்தவில்லை. பொறுமையாகத் தொடர்ந்து அணுகியபோது, கேட்கத் துவங்கினார்கள்.

பிறகு, பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் வந்தபோது, அதில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் பதவியின் பலன் பற்றி ஷேர்கான் எடுத்துரைத்தார். 242 வாக்குகளுக்காகப் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் நான் 102 வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். அதன்பிறகு, குழந்தைத் தொழிலாளர்களைக் காக்கும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினேன். இதுவரை 48 குழந்தைத் தொழிலாளர் களை மீட்டு பள்ளிக்கு அனுப்பியுள்ளேன்.''

''வேறு என்னென்ன சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளீர்கள்?''

''போதுமான வகுப்பறை மற்றும் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில், போராடி அதைப் பெற்றுத் தந்திருக்கிறேன். நேபாளத்தில் இருந்து வேலைக்காக அழைத்துவரப்படும் இளம்பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது பற்றியும் விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொண்டேன். இவற்றை அறிந்த இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், சென்ற ஆண்டு டெல்லி வந்தபோது என்னிடம் பேசினார். அவர்தான் மலாலா விருதுக்கு என் பெயரைப் பரிந்துரைத்தார்.''

''எதிர்காலத் திட்டம் என்ன?''

''குழந்தைகளுக்கான கல்விப் பணியுடன், படித்து ஒரு மருத்துவராகி, அன்னை தெரசாவைப் போல் பொதுமக்களுக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு