பிரீமியம் ஸ்டோரி

ஹாசிப்கான்

##~##

''ஹலோ ஜீபா... வீட்டுச் சுவரில் இருக்கும் பல்லி எப்பப் பார்த்தாலும் அசையாமல் இருக்கே, அது எப்போ சாப்பிடும்?''

- ப.அருண் பிரசாத், பெரம்பலூர்.

''பல்லிக்கு மிகவும் பிடித்த உணவு, கரப்பான்பூச்சி, கொசு, எறும்பு போன்றவை. இவை, பெரும்பாலும் இரவில்தான் தங்களின் இடத்தைவிட்டு வேறு இடம் செல்லும். அதனால், பல்லியும் அப்போதுதான் சுறுசுறுப்போடு அலைந்து திரிந்து வேட்டையாடும். அந்த நேரத்தில் நாம் உறங்கிக்கொண்டிருப்போம். காலையில் நாம் பார்க்கும்போது, ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியோடு சுவரில் அசையாமல் இருக்கும். அப்போது ஒரு பூச்சியோ, எறும்போ அந்தப் பக்கமாக வந்தால், 'தானா வந்து சிக்குதே... சரி, நொறுக்குத்தீனியாகச் சாப்பிடுவோம்’ என அதையும் நாக்கை நீட்டி 'லபக்’ பண்ணும்.''

''டியர் ஜீபா... செஸ் என்பதன் அர்த்தம் என்ன? உண்மையில் இதை முதலில் கண்டுபிடித்தது யார்?''

- கே.பூஜா, திருநெல்வேலி.

மை டியர் ஜீபா !

''செஸ் (Chess) விளையாட்டு, பல நூற்றாண்டுகளாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பரவி, ஆங்காங்கே சிற்சில மாற்றங்கள் அடைந்திருக்கிறது. அதனால், பல நாடுகள் 'நாங்கதான் கண்டுபிடிச்சோம். அது எங்களுக்குச் சொந்தமானது’ என்று சொல்லிக்கொள்கின்றன.சரியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், 'இந்தியா’தான் இதன் தாயகமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். பிற நாடுகளும் இதை அரைகுறை மனதோடு ஒப்புக்கொள்கின்றன. 'செஸ்’ என்ற வார்த்தை, பாரசீகத்தின் 'ஷா’ (Shah) என்ற சொல்லிலிருந்து பிறந்தது. அங்கே, ஷா மார்ட் (இறந்த ராசா) என்ற பொருளில் விளையாடப்பட்டது. அதுவே, ஆங்கிலத் தில் செக் மேட் (Checkmate)என்று மாறியது.''

''டியர் ஜீபா... 'நீர்க்கரடி’ ஆண்டுக்கணக்கில் உணவு இல்லாமல் இருக்குமாமே?''

- எஸ்.ஸ்ரீவத்ஸன், சூலூர்.

மை டியர் ஜீபா !

''ஆம். இதன் அறிவியல் பெயர் Tardigrade. . இது Extremophile எனப்படும் 'உச்சவிரும்பி’ என்ற இனத்தில் வரும். இந்த இனத்தைச் சேர்ந்தவை ஆக்ஸிஜன் இல்லாமலே உயிர் வாழக் கூடியவை. இதன் உடலமைப்பு, கரடி போன்று இருப்பதால், நீர்க்கரடி எனப்படுகிறது. ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவாக, 8 கால்களுடன் இருக்கும். இவை, நீர்நிலைகளை ஒட்டிய சகதியில் தங்கும். அந்தச் சகதிப் பகுதி வறண்டுவிடும்போது, நீர்க்கரடியும் தனது உடலைச் சுருக்கி, சகதியோடு சகதியாக இருக்கும். இப்படி 120 ஆண்டுகளுக்கும் மேலாகக்கூட இவை உணவு மற்றும் தண்ணீர்  இல்லாமல் உயிர் வாழும். பிறகு தூங்கி எழுந்ததைப் போல் மீண்டும் தனது உடலைப் பருக்கவைத்து நீச்சலடிக்க ஆரம்பித்துவிடும்.''

''ஹாய் ஜீபா... புத்தகங்களில் இருக்கும் திருவள்ளுவர் படம் கற்பனை என்கிறான் நண்பன். அது உண்மையா?''

- எஸ்.ராஜேஷ் கண்ணன், விளாங்குறிச்சி.

''உண்மைதான் ராஜேஷ். உண்மையான ஞானிகள் தங்களைப் பற்றி தற்பெருமை பேச மாட்டார்கள் என்பதற்கு சரியான உதாரணம் திருவள்ளுவர்தான். இன்று உலகமே போற்றும் திருக்குறளை ஓலைகளில் எழுதியவர், தன்னைப் பற்றி எந்த இடத்திலும் ஒரு வரிகூட குறிப்பிடவில்லை. அவரது உண்மையான பெயர்கூடத் தெரியாது. சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்பதும் அவரது மனைவி பெயர் வாசுகி என்பதும்கூட ஒரு நம்பிக்கைதான். மதுரையில் வாழ்ந்தார் என்று கூறுவோரும் உண்டு. அவர் வாழ்ந்த காலம், அப்போதிருந்த பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக்கொண்டு அவரது உருவம் இப்படி இருந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... மலேரியாவை ஒழிக்கவே முடியாதா?''

- தி.பிரதீபா, திண்டுக்கல்.

''வல்லரசு நாடான அமெரிக்காவில் தொடங்கி,  ஆப்பிரிக்கா, ஆசியா என உலகம் முழுக்க நூற்றாண்டு காலமாக இருக்கும் நோய் இந்த மலேரியா. இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க 500 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்) மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 3 மில்லியன் மக்களாவது கடுமையாகப் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். அதில், 90 சதவிகித இறப்பு ஆப்பிரிக்காவில்தான் நடக்கிறது. மலேரியாவுக்காக உள்ள தடுப்பு மருந்துகள், முழுமையாகக் குணப்படுத்துவதாக இல்லை. மலேரியா ஒழிப்பு என்பது சவாலான விஷயம்தான். நம்மால் முடிந்தவரை நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது.''   

மை டியர் ஜீபா !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு