Published:Updated:

துளித் துளியாய்...

தண்மதி திருவேங்கடம் பா.காளிமுத்து

துளித் துளியாய்...

தண்மதி திருவேங்கடம் பா.காளிமுத்து

Published:Updated:
##~##

அஞ்சலகம், வங்கி மற்றும் பள்ளியில் எப்படி எல்லாம் சேமிக்கலாம் என்று பார்த்தோம். உண்டியலில் சேமிக்காமல் இவற்றில் சேமிப்பதனால் என்ன பயன்?

முதலாவது பயன், பாதுகாப்பு. திருடு போகாது, தீ, மழை, வெள்ளம், பூகம்பம் என இயற்கை அழிவுகளின்போதும் உங்கள் பணம் பத்திரமாக இருக்கும்.  அதைவிட முக்கியம், உங்களிடமிருந்தே பாதுகாப்பு. எப்படி? நிமிட நேர ஆசையால்,  உண்டியல் பணத்தை எடுத்துக் காலிசெய்த அனுபவம் நம் எல்லோருக்கும் உண்டுதானே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாவது பெரிய பயன், வருமானம்.  நிறுவனங்களில் பணம் போட்டுவைத்தால், உங்களின் பணம் வளரும். நீங்கள் சேர்த்துவைத்த தொகையை அவர்களிடம் கொடுப்பதால்,  திரும்பக் கேட்கும் வரை அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பயன்படுத்திக்கொண்டதற்காக உங்கள் கணக்கில் சிறு தொகை ஒன்றை சேர்த்துவிடுவார்கள். அதற்குப் பெயர்தான் வட்டி. ஆண்டுக்கு வட்டி இவ்வளவு என்று வங்கி, அஞ்சல் துறை அறிவித்து இருப்பார்கள். ஆண்டுகள் செல்லச் செல்ல இந்த வட்டியும் சேர்க்கப்பட்டு, உங்கள் பணம் பெருகும். உண்டியலில் போட்டுவைத்தால், இது கிடைக்காது. (சென்ற பகுதிகளில் முதலீட்டுத் தொகைக்கு ஆண்டு முடிவில் கிடைக்கும் தொகை எவ்வளவு என்று படித்தது நினைவில் இருக்கும்.)

துளித் துளியாய்...

வங்கி அல்லது அஞ்சலகத்தில் கணக்கு ஆரம்பிக்கும் முன், நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:

1. கணக்கு ஆரம்பிக்க, முதலில் எவ்வளவு பணம் தேவை?

2. வட்டி விகிதங்கள் என்னென்ன?

3. வங்கிக் கணக்கு என்றால், அக்கவுன்ட்டில்  குறைந்தபட்சம் ஒரு தொகையை எப்போதும்  வைத்திருக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி வேறுபடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். (Quarterly Minimum Balance). அந்தத் தொகை எவ்வளவு, அதில் குறைந்தால் அபராதம் இருக்கிறதா என்று கேட்டுத்

துளித் துளியாய்...

தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் சேமிப்புக்குக் கிடைத்த வட்டியை இது விழுங்கிவிடும்.

4. இதர சலுகைகள் வேறு என்ன தருகிறார்கள்?

5. உங்கள் வீட்டுக்கு அருகே வங்கி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிட்டால், நீங்களே விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, வரிசையில் நின்று பணம் கட்டுவீர்கள். நீங்களும் ஒரு வாடிக்கையாளர். உங்களைத் திருப்திப்படுத்துவது அவர்களின் கடமை. அப்போது, உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்கலாம். காலப்போக்கில், தயங்காமல் ஊழியர்களிடம் சகஜமாகப் பேச ஆரம்பிப்பீர்கள். அங்கே நடக்கும் பண பரிவர்த்தனைகள், நடைமுறைகள் புரிய ஆரம்பிக்கும். எந்த வங்கி நாம் சேமித்த பணத்துக்கு அதிக லாபம் ஈட்டித் தருகிறது என்று அறியலாம். நீங்கள் கல்லூரியில் சேரும் காலத்தில் கல்விக் கடன் வாங்க வேண்டியிருந்தால், தன்னம்பிக்கையுடன் வங்கி மேனேஜரிடம் பேசுவீர்கள். இதுதான் நிஜமான வாழ்க்கைக் கல்வி. இதை நீங்கள் எந்தப் புத்தகம் வழியேயும் கற்க முடியாது.

 தருணின் கதை !

 தருண் ஐந்தாம் வகுப்பு மாணவன். அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஒரு கட்டுரைப் போட்டியில் பரிசாக 2,000 ரூபாய் கிடைத்தது. அதைத் தன் வங்கிக் கணக்கில் செலுத்த அப்பாவுடன் சென்றான். தருண்தான் பணம் செலுத்தும் படிவத்தை நிரப்ப வேண்டும் என்று அப்பா சொல்லிவிட்டார். பயந்துகொண்டே படிவத்தை நிரப்பினான் தருண்.  ஓரிடத்தில், கை நடுங்கித் தப்பாக எழுதிவிட்டான். அப்பா, அந்தப் படிவத்தைக் கிழித்துப்போட்டார். இன்னொன்றில் நிதானமாக எழுதி, வரிசையில் நின்று, வங்கி அதிகாரியிடம் கொடுத்தான். அந்த அதிகாரி படிவத்தை வாங்கிப் பார்த்து, அதற்கு ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார். கையெழுத்து அழகாய் இல்லை என்றோ,  எண்கள் கோணல்மாணலாக இருக்கிறது என்றோ சொல்லவில்லை.

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று அவன் சேமிப்புத் தொகை அதிகரித்துவிட்டது. ஊரிலிருந்து வந்த சித்தியிடம் தன் சேமிப்பு 5,000 ரூபாயைத் தொடப்போவதாகச் சொன்னான். 'அட, நீ பெரிய பணக்காரனா ஆகிட்டே. நான் உன்கிட்டக் கடன் வாங்கலாம் போலிருக்கே' என்றார் சித்தி. 'தருவேன். ஆனா, நீங்க எனக்கு இன்ட்ரஸ்ட் (வட்டி) தரணும்' என்றான். எல்லோரும் அவன் சாமர்த்தியத்தை எண்ணிச் சிரித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism