Published:Updated:

அரதப் பழசு அற்புதங்கள்!

அரதப் பழசு அற்புதங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

சுட்டி நிருபர் ஜீபா !
கே.யுவராஜன்

''இப்ப ஒரு சாதாரண செல்போனை வாங்கினாலே போதும் ஜீபா... அதுலயே நேரமும் பார்த்துக்கலாம், கணக்கும் போட்டுக்கலாம், பாட்டும் கேட்டுக்கலாம். இதுவே கொஞ்சம் காஸ்ட்லி செல்போனா இருந்தா படமும் பிடிச்சுக்கலாம். எல்லாமே கைக்குள்ளே, சில கிராம் வெயிட்ல அடங்கிப் போச்சு. ஆனா, நூறு வருஷம் முன்னாடி கால்குலேட்டர்ல கணக்குப் போடணும்னா உடம்புல பலம் இருக்கணும்.  இந்தா... இதைப் புடி ஜீபா!'' என்றபடி ஒரு பெரிய மெஷினை கையில் தூக்கிக் கொடுத்தார் அசோக்.

அரதப் பழசு அற்புதங்கள்!
##~##

''உஷ்... யப்பா! பத்து, பதினைஞ்சு கிலோ இருக்கும் போலிருக்கே! என்ன இது... வெயிட் மிஷினா?'' என்று கேட்டேன்.  

''கால்குலேட்டர் ஜீபா... இதோட வயசு எண்பதுக்கு மேல. 1930-ஆம் வருஷம் சிகாகோவில் தயாரானது'' என்று சொல்லி அதிரவெச்சார் அசோக் அண்ணாச்சி.

இடம்: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மூர் மார்க்கெட், அல்லிக்குளம் வணிக வளாகம். நேரம்: மாலை நான்கு மணி.

பங்கேற்போர்: சுட்டிகள் கோடீஸ்வரன், ஜனார்த்தனன், கௌதம், ஹேமலதா, ஜெனிஃபர், மோகன், ஈஸ்வரன் கலைக்கூடம் கடையின் விற்பனையாளர் அசோக் மற்றும் அகில உலக சூப்பர் சுப்ரீம் மெகா கலக்கல் ஸ்டார் ஜீபாவாகிய நான்.

பெரிய காரில் ஆரம்பிச்சு, சின்னதா பூட்டு வரை பழங்காலப் பொருள்களைச் சேகரிச்சு வைக்கும் பழக்கம் உலகம் முழுக்கவே இருக்கு. அதை எல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமும் உற்சாகமும் ஏற்படும். அறிவியலின் படிப்படியான வளர்ச்சியையும் தெரிஞ்சுக்க முடியும். கால இயந்திரத்தில் போய் வந்த மாதிரி இருக்கும். இதுக்காகத்தான் சில சுட்டிகளோடு இங்கே வந்திருக்கேன். வாங்க... நீங்களும் கால இயந்திரத்தில் ஏறிக்கங்க!

அரதப் பழசு அற்புதங்கள்!

அந்தச் செவ்வக வடிவப் பெட்டி, டைப்ரைட்டர் மாதிரி இருந்துச்சு. கறுப்பும் வெள்ளையுமா வரிசையா பட்டன்கள். ஒரு வரிசைக்கு பத்து பட்டன்களா... மொத்தம் ஒன்பது வரிசைகள். கீழே விரல்நுனி அளவுக்கு பத்து சின்ன லிவர்கள். அதுக்குக் கீழே ஆட்டோ மீட்டரில் இருக்கற மாதிரி எண்கள். இது போதாதுன்னு பெட்டிக்கு வலது பக்கம் ஒரு பெரிய லிவர். அந்தக் கால்குலேட்டரை எப்படி பயன்படுத்தறதுன்னு செய்துகாட்டினார் அசோக். வலது பக்கம் கடைசியில் இருந்த ஒன்று என்ற பட்டனைத் தட்டிட்டு, ரெண்டைத் தட்டினார். உடனே ஆட்டோ மீட்டரில் விழற மாதிரி 'டொக்’னு மூணு வந்துச்சு.

''இது கூட்டலுக்கு... கழித்தல் செய்யணும்னா மேல் நோக்கி இருக்கிற இந்தச் சின்ன லிவரைக் கீழ் நோக்கித் தள்ளிட்டு டைப் செய்யணும். இப்படியே பத்து வரிசைக்கும் நூறு கோடி வரை கணக்குப் போடலாம். முதல் முதலா 1884-ஆம் வருஷம் வாஷிங்டன்ல மரத்தால் செய்த கால்குலேட்டர் வந்தது. அதுக்கு மெகாரோனி பாக்ஸ் என்று பெயர். இது இரும்பால் செய்தது. இதுக்கு கம்ப்டோமீட்டர் என்று பெயர். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலும் இது புழக்கத்தில் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் வந்த கால்குலேட்டர் இது. பிளஸ், மைனஸ் தனி பட்டன்களா இருக்கு பாருங்க'' என்று சொல்லி இன்னொரு கால்குலேட்டரைக் காட்டினார்.

அசோக் சொல்லிட்டு இருக்கும்போதே சுட்டிகள் ஜனார்த்தனன், கௌதம் ரெண்டு பேரும் வேற பக்கம் போனாங்க. அங்கே பெரியதாய் ஒரு சிவப்பு மரப் பெட்டி. ''இது என்ன அங்கிள் கேமரா மாதிரி இருக்கு?'' என்று கேட்டான் ஜனார்த்தனன்.

அரதப் பழசு அற்புதங்கள்!

''கேமரா மாதிரி கிடையாது. கேமராவேதான். இதுக்கு 'ஒன் ஃபிலிம் கேமரா’ன்னு பேரு. இப்ப எக்ஸ்ரே எடுத்தா எவ்வளவு பெரிய ஃபிலிமா இருக்கும். அப்படித்தான் இதோட பின் பக்கத்துல ஒரு ஃபிலிமைப் பொருத்திடுவாங்க. பெட்டிக்கு எதிர்ல ஆளை உட்கார வெச்சு, இந்த லென்ஸ் கவரை கழட்டினா ஆளை அப்படியே படம் பிடிச்சுடும். இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கேமரா. இதுக்கு அப்புறம் 12 ஃபிலிம் கேமரா வந்தது. கறுப்புத் துணியைப் போர்த்திக்கிட்டு எடுப்பாங்களே... அந்த மாடல்கூட இங்கே இருந்தது. ஒருத்தர் வாங்கிட்டுப் போய்ட்டார்'' என்றார் அசோக். 

நிறைய கேமராக்களும் ரேடியோக்களும் விதவிதமான மாடல்களில் அங்கே இருந்தன. சுட்டிகள் ஆளுக்கு ஒரு கேமராவை எடுத்துப் படம் பிடிப்பதுபோல் போஸ் கொடுத்தார்கள். ரேடியோக்களின் மாடல், வருடங்களைப் பற்றி கேட்டார்கள். அசோக் எல்லாவற்றுக்கும் விளக்கமாக பதில் சொன்னார்.

''இது எல்லாம் இப்பவும் ஒர்க் ஆகுதா?'' என்று கேட்டேன்.

''சின்னச் சின்ன ரிப்பேர் இருக்கும். இதுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் குறிப்பிட்ட சிலரிடம்தான் இருக்கும். அவங்ககிட்ட கொடுத்து ரிப்பேர் செய்து, வாங்கறவங் களுக்குக் கொடுப்போம். சில பொருட்களை ரிப்பேர் செய்யவே முடியாது. அதைக் கலைப் பொருளா வெச்சுப்பாங்க. இதோ இங்கே வாங்க... வீட்டிலேயே சினிமா பார்க்கிற சின்ன புரஜக்டரைக் காட்டறேன்'' என்று அழைத்துச் சென்றார்.

''எழுபது வருஷத்துக்கு முன்னாடி வந்த புரஜக்டர் இது. ஆங்கிலேயர்கள் இங்கே இருந்தப்ப வீட்டிலேயே சினிமா பார்க்க உபயோகப்படுத்தினது. இதுல படம், சவுண்ட் ரெண்டுமே இருக்கு. படம் மட்டும் வந்து, சவுண்ட் இல்லாத புரஜக்டரும் இருக்கு. இதே மாதிரி சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தும் ரெக்கார்டும் இருக்கு'' என்று சொல்லி அதையும் எடுத்துக் காட்டினார்.

அரதப் பழசு அற்புதங்கள்!

''இது எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்குது?'' என்று கேட்டேன்.

''வியாபாரிகள் மூலம் கிடைக்கும். சிலர் வீட்டைக் காலி செய்யும்போதும், இனி தேவை இல்லைன்னு நினைக்கற தங்களோட சொந்தப் பொருளைக் கொண்டுவந்து கொடுப்பாங்க. இந்த புரஜக்டர் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் இருந்தது. தவிர, வெளிநாட்டில் இருந்தும் சில பொருட்கள் கிடைக்கறது உண்டு. இதைப் பார்த்தீங்களா?'' என்று ஒரு தொலை பேசியைக் காட்டினார்.

அது, 1956-ஆம் வருடத்து காசைப் போட்டுப் பேசும் பொதுத் தொலைபேசி. மரத்தால் செய்யப்பட்டது. சுட்டிகள் ஹேமலதாவும் ஜெனிபரும் அதை எடுத்து, பேசிப்பார்த்தார்கள். அது தவிர, பல்வேறு வகையான தொலைபேசிகள் அங்கே வரிசையாக இருந்தன. கடிகாரங்கள், வாள், திப்பு சுல்தான் காலத்தின் பறவை வடிவ பூட்டு, பிரபுக்கள் பானம் அருந்தப் பயன்படுத்திய பலவகைக் கோப்பைகள் எல்லாமே இருந்தன. அதோடு, பழைய விளையாட்டுப் பொம்மைகளும் இருந்தன. வந்திருந்த சுட்டிகளில் மிகவும் குட்டி சுட்டியான கோடீஸ்வரன், அவற்றை எடுத்து வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித் தான்.

அசோக் அண்ணாச்சிக்கு நன்றியைச் சொல்லிட்டு, பழைய பொருட்களோடு மூழ்கி, அந்தக் காலத்துக்கே போய்ட்ட சுட்டி களைக் கிளப்பிட்டு வந்தேன்.

படங்கள்: து.மாரியப்பன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு