Published:Updated:

என்ன செய்கிறான் இந்தச் சுட்டி?

ஹிப்னாட்டிக் டான்ஸர் !

பிரீமியம் ஸ்டோரி

வே.கிருஷ்ணவேணி

என்ன செய்கிறான் இந்தச் சுட்டி?

விஜய், பி-பாய் டான்ஸில் சென்னையைக் கலக்கிக்கொண்டிருக்கும் சுட்டி! பெரியவர்களே திணறும் அளவுக்கு உடலை வளைத்து, நெளித்து கைகள் மற்றும் தலையால் மட்டுமே டான்ஸ் செய்யக்கூடிய வித்தகன். இந்த ஹிப்னாட்டிக் டான்ஸ் ஆடுவதால், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான தசைநார்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு... நாள் முழுவதும் ஃப்ரஷ்ஷாக இருக்க வைக்கும். இதற்காக காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்து, கூடவே உடலை ரப்பர்போல வளைத்து நடனமாடிக் கலக்குகிறான் விஜய். இவனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் சென்னையில் உண்டு. வெறும் டான்ஸ் மட்டும் செய்யாமல், கூடவே ஆதிவாசிகளின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களுக்கு நாம் எந்த அளவுக்குத் தொந்தரவு தருகிறோம் என்பது பற்றிய விழிப்புணர்வு நாடகங் களையும் மேடையில் நடித்துக் காட்டுகிறான்.

##~##

சென்னை திருவல்லிக்கேணி, மணி மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் விஜய், இதுவரை கிட்டத் தட்ட 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறான். அதுவும் தவிர, செயின்ட் தாமஸ் கல்லூரியில் நடந்த ஹிப்பாப் நடனப் போட்டிக்கு நடுவராகவும் இருந்திருக்கிறான்.

விஜய்யை சந்தித்த சமயம்... பிரபல பாடல் ஒன்றுக்கு 'ஹிப் பாப்பில்’ என்னென்ன ஸ்டெப்ஸ் கொண்டு வரமுடியும் என்றெல்லாம் விதவிதமாக ஸ்டெப்ஸ் போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தான். நம்மிடம், ''நான் எங்க வீட்டுக்கு ஒரே பையன். அப்பா தமிழ்மணியும், அம்மா உமாவும் மீன் பிடித்து விற்கும் தொழிலைச் செய்கிறார்கள். நான் தினமும் ஸ்கூல்லேர்ந்து திரும்பிய உடன் பக்கத்து வீட்டுப் பசங்களோடு விளையாடுவேன்.  அப்போ, குட்டிக்கரணம் போடுறது... தலைகீழா நிக்கிறதுன்னு நிறைய சேட்டைகள் செய்துட்டு இருப்பேன். ஒரு நாள் தலைகீழா நின்னு விளையாடினதை அம்மா பார்த்துட்டு அடி பின்னிட்டாங்க. ஒருவேளை எனக்கு டான்ஸ் நல்லா வருமோன்னு நினைச்சு, அப்பாதான் என்னை  டான்ஸ் கிளாஸ்ல சேர்த்துவிட்டார். இந்த ரெண்டு வருஷத்துல நான் விஜய் டி.வி-யில ஜோடி நம்பர் ஒன், கலைஞர் டி.வி-யில ஓடி விளையாடு பாப்பா மற்றும் மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் கலந்துட்டு, 'பெஸ்ட் ஹிப்னாட்டிக் டான்ஸர்’ங்கற அவார்டு வாங்கி இருக்கேன்.

என்ன செய்கிறான் இந்தச் சுட்டி?

கலைஞர் டி.வி-யில ஓடி விளையாடு பாப்பா-வில் என்னோட டான்ஸைப் பார்த்த கலா மாஸ்டர், 'நீ எதிர்காலத்துல நல்லா வருவே விஜய்’னு சொல்லிப் பாராட்டினாங்க. நிறைய கல்லூரிப் போட்டிகளுக்கு  நடுவராவும் போயிருக்கேன். அதனால, இப்போ எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. என்னை வீடு தேடிவந்து வாழ்த்திப் பரிசு தந்துட்டுப் போறவங்களும் இருக்காங்க. ஹிப்னாட்டிக் டான்ஸ் மட்டுமில்லாமல், 'டாப்ரேக், ஃபுட் ஒர்க், ஹிப்பாப், ஃப்ளோரிங்’ என விதவிதமான டான்ஸ்களும் தெரியும்'' என்று சொல்லும் விஜய்க்கு, சிம்புவின் டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்குமாம். 'ஒரே ஒரு முறையாவது சிம்புவோட டான்ஸ் பண்ணனும்னு ஆசை'' என்றான்.

என்ன செய்கிறான் இந்தச் சுட்டி?

''இவனுக்கு ஐந்து வயசு இருக்கும்போது எதாவது குறும்புத்தனம் பண்ணிட்டே இருப்பான். நானும் கொஞ்ச நாள் திட்டிப் பார்த்தேன். இவனைத் திட்டித் திருத்தமுடியாது... எதாவது ஒரு கோணத்துல சாதிக்க வைப்போம்னு யோசிச்சுதான், சந்துரு மாஸ்டர்கிட்ட சேர்த்துவிட்டேன். நாங்க மீன் பிடிச்சு வித்தாதான் அன்னிக்கு சாப்பிட முடியும். அந்தச் சூழ்நிலையிலும் இவனை  படிக்கவச்சு பெரிய ஆளா ஆக்கணும்’ங்கறது  தான் எங்களோட ஆசை'' என்றார் விஜய்யின் அப்பா.

சாதனைக்கு வயதும், வசதியும் ஒரு தடையில்லை என்பதற்கு விஜய் ஒரு உதாரணம்!

அட்டை, படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு