விரல் நுனிகளில் நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள் அதிகம். அவை வியர்வையைச் சுரந்துகொண்டே இருக்கின்றன. இந்த வியர்வைதான் நாம் ஒரு பொருளைத் தொடும்போது அதன் மீது ரேகையாகப் பதிகிறது. ஒரு திருட்டோ, கொள்ளையோ நடந்த இடத்துக்கு முதலில் சோதனையிட வருவது காவல் துறையைச் சேர்ந்த விரல்ரேகை நிபுணர்கள்தான். வந்ததுமே 'இங்கே எந்தப் பொருளாவது இடம் மாறியிருக்கிறதா?' என்று கேட்பார்கள். இடம் மாறி இருந்தால் அதன் மீதுள்ள ரேகையைப் பதிவெடுப்பார்கள். டைட்டானியம் டை ஆக்ஸைடு, ஜிங்க் ஆக்ஸைடு போன்ற பல்வேறு ரசாயனப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ப கலந்து, குறிப்பிட்ட பொருளின்மீது தூவினால், அதில் படிந்திருக்கும் ரேகை (வியர்வை ஈரம்) ஒட்டிக் கொண்டுவிடும். பிறகு, ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால், ரேகை அமைப்பு துல்லியமாகத் தெரியும்.
கண்ணாடி போன்ற வழவழப்பான தளம் கொண்ட பொருள்களில் பதியும் ரேகைகள் பல மாதங்கள் இருக்கும். அதுவே, பேப்பரில் பதியும் ரேகை அரை மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்காது. மழைக் காலத்தில் வியர்வை அதிகம் சுரக்காது. எனவே, அப்போது பதியும் கைரேகை பலவீனமாக இருக்கும்.
மத்தியப்பிரதேசத்தில் ஒரு திருட்டுச் சம்பவம். ஒரு வீட்டில், ஒரு குடத்தில் போட்டுவைத்திருந்த நகைகளைக் கொள்ளையடித்த திருடன், குடத்தில் தன் கைரேகை பதிந்திருக்கும் என்று பயந்து, அதைக் கிணற்றில் போட்டுவிட்டான். ஆறு மாதம் கழித்து, கிணற்றுக்குள் இருந்து குடத்தை எடுத்தபோது ரேகை துல்லியமாகக் கிடைத்தது. திருடன் பிடி பட்டான்.
25 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த சம்பவம். பல வீடுகளில் மோதிரம், மணிபர்ஸ் என்று தினம் தினம் திருடு போனது. எல்லாமே பகலில் நடந்த திருட்டுக்கள். திருடன் பூட்டை உடைக்கவில்லை. ஜன்னல் கம்பியை வளைக்கவில்லை. காவல் துறைக்குக் குழப்பமான குழப்பம். கைரேகை நிபுணர்களைவைத்து ரேகை எடுத்துப் பார்த்தபோது, குழப்பம் கூடிவிட்டது. கிடைத்த ரேகைகள் ஒரு நாலு வயதுக் குழந்தையின் ரேகை போன்று சிறியதாக இருந்தது. 'குழந்தையைப் பழக்கி திருடுகிறார்களோ?' என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டது காவல் துறை.
|