ஒரு வனத்துறை அதிகாரியின் அனுபவங்கள் இவை...
நெடுஞ்சாலையில் வண்டிகளைச் சோதனை செய்துகொண்டு இருந்தோம். ஒரு காரில் கடத்தப் பட்ட சந்தனக் கட்டைகள் இருந்தன. அந்தச் சமயம் எதிர் திசையில் இன்னொரு கார் சந்தேகப்படும்படியாக வந்தது. அது பைலட் வண்டியாக இருக்கலாம் என யூகித்தோம். கடத்தல் வண்டிக்கு முன் சாதாரண
பயணிகளைப்போல வந்து செக்கிங் இருக்கிறதா, எவ்வளவு கெடுபிடி என வேவு பார்க்கும் வண்டிக்குத்தான் பைலட் வண்டி என்று பெயர். ஆனால், 'பைலட் வண்டி' என்று நிரூபிப்பதற்கான எந்தத் தடயமும் அந்த வண்டியில் இல்லை. இருந்தாலும், சந்தேகம் தீரவில்லை. வண்டியில் யாரிடமும் எந்த லக்கேஜும் இல்லை. ஒரே ஒரு சின்னப் பொட்டலத்தைத் தவிர. அதைப் பிரித்தால் உள்ளே வார் பிய்ந்து போன ஒரு ஜோடி செருப்பு. சட்டெனப் பொறி தட்ட, சந்தனக் கட்டைகளைக் கடத்திய காருக்கு ஓடினோம். அங்கு சந்தனக் கட்டைகளுடன் அன்றைய தின செய்தித்தாளும் இருந்தது. அதில் சரியாக நடுப்பக்கம் மட்டும் இல்லை. அது எப்படி அங்கே இருக்கும்? அந்த நடுப் பக்கத்தில்தான் செருப்பு மடித்து வைக்கப்பட்டு பைலட் வண்டியில் இருக்கிறதே! அந்த க்ளூவை வைத்தே இரண்டு வண்டிகளையும் மடக்கி னோம்!
|